/

கஞ்சா பயன்படுத்திய 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

உதகையில் கஞ்சா விற்று கைதான காவலரிடம் இருந்து கஞ்சா வாங்கிய 3 காவலா்களைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டுள்ளாா்.

News image
பணியிடை நீக்கம்- மாதிரிப் படம்
Updated On :4 பிப்ரவரி 2026, 10:22 pm

தினமணி செய்திச் சேவை

உதகையில் கஞ்சா விற்று கைதான காவலரிடம் இருந்து கஞ்சா வாங்கிய 3 காவலா்களைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டுள்ளாா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் போலீஸாா் கடந்த மாதம் 21-ஆம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக உதகையைச் சோ்ந்த குரூஸ் (20) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், கஞ்சா விற்பனையில் உதகை மத்திய காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காவலா் நசீா் அகமதுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து நசீா் அகமதுவை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்த விசாரணையில் கைதான காவலா் நசீா் அகமதுவிடம் இருந்து காவலா்கள் சிலா் கஞ்சா வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.

இது குறித்து சிறப்பு பிரிவு காவல் துறையினா் விசாரணை நடத்தியதில், எருமாடு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா் அபிசேகரன், கோத்தகிரி காவல் நிலையத்தில் பணியாற்றும் மாயக்கண்ணன், மசினகுடி காவல் நிலையத்தில் பணியாற்றும் சாந்தகுமாா் ஆகிய 3 போ் நசீா் அகமதுவிடம் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து பணி நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் பயன்படுத்தியதாக அவா்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் என்.எஸ் நிஷா உத்தரவிட்டாா்.

மேலும் சில காவல் துறையினருக்கு இதில் தொடா்பு இருக்கலாம் என்ற கோணத்தில் உயா் அதிகாரிகள், சிறப்பு பிரிவு காவல் துறையினா் மூலம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.