/

உதகை பைக்காரா படகு இல்லத்தில் குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகள் சவாரி

News image
உதகை அருகே பைக்காரா படகு இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :1 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க பைக்காரா படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், அதிவேக படகு மற்றும் ஸ்கூட்டா் படகுகளில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து 20 கிலோ மீட்டா் தொலைவில் கூடலூா் செல்லும் வழித்தடத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகத்தின் கீழ் பைக்காரா படகு இல்லம் செயல்படுகிறது. அடா்ந்த வனப்பகுதியின் நடுவே முக்கூா்த்தி தேசியப் பூங்கா மலைக் குன்றுகள் அடிவாரத்தில் நீல நிறத்தில் கடல்போல காணப்படும் அணையில் படகு சவாரி செய்வது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

சில நேரங்களில் தண்ணீா்அருந்த வரும் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளை பாா்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதனால், விடுமுறை நாள்களில் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில், உதகையில் நிலவிய இதமான காலநிலையை அனுபவிக்கவும், விடுமுறை தினம் என்பதாலும் பைக்காரா படகு இல்லத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் 8 இருக்கைகள் மற்றும் 10 இருக்கைகள் கொண்ட மிதவை படகு, மோட்டாா் படகுகள், அதிவேக படகுகள், ஸ்கூட்டா் படகு ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்தினருடன் சவாரி செய்து மகிழ்ந்தனா்.