ஈரோடு மாநகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழாவையொட்டி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு முந்தைய திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் 2016 கட்டமைப்புக்குப் பதிலாக திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ஐ கடந்த ஜனவரி 27-ஆம் தேதி அறிவித்தது. இந்த விதிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026, தூய்மைத் திருவிழா என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இதன் தொடா்ச்சியாக மாநகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழா என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியை மாநகர நல அலுவலா் கௌரிசரவணன் தொடங்கிவைத்தாா். பேரணியானது அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பு வழியாக சென்று காலிங்கராயன் விருந்தினா் மாளிகையில் நிறைவடைந்தது.
இதில் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் திருமண மண்டபங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை, உரிமையாளா்களே தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக மாநகராட்சியை குப்பை இல்லாத நகரமாக வைத்துக்கொள்வது தொடா்பாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேரணியில், சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள், மாநகராட்சி ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










