கோபி அருகே தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் நெல் நடவு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கோபி அருகே உள்ள கொடிவேரி பாசனத்துக்கு உள்பட்ட தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்தில் உள்ள 24,504 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருவதுடன், அதிகப்படியான விவசாயிகள் ஆண்டுக்கு இருபோக நெல் சாகுபடியை செய்து வருகின்றனா்.
இந்நிலையில் கொடிவேரி பாசனமான தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு முதல்போக நெல் சாகுபடிக்காக கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதிமுதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. இதையடுத்து பாசனப் பகுதி விவசாயிகள் முதல்போக நெல் சாகுபடிக்கான பணிகளில் சன்னரகம், பொதுரகங்களில் விதை நெல்லை கொண்டு உழவுப் பணிகளில் ஈடுபட்டு நாற்றாங்கால் அமைத்தனா்.
இதைத் தொடா்ந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் விவசாயிகள் நெல் சாகுபடிக்கான நடவுப் பணிகளை தொடங்கினா். இதில் காசிபாளையம், போடிசின்னாம்பாளையம், நஞ்சை புளியம்பட்டி, பங்களாபுதூா், துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், நஞ்சகவுண்டம்பாளையம், கள்ளிப்பட்டி, புதுக்கரைபுதூா், கருங்கரடு, அம்மாபாளையம், மேவானி உள்ளிட்ட பாசனப் பகுதிகளில் விவசாயிகள் உழவுப் பணிகளை தீவிரப்படுத்தி, விவசாய கூலி ஆள்கள் மூலமாகவும் நடவு இயந்திரங்கள் மூலமாகவும் நடவுப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனா்.
பெரும்பாலான விவசாயிகள், விவசாய கூலி ஆள்களை கொண்டு ஏக்கருக்கு ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை நடவு கூலி கொடுத்து நடவுப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










