ஈரோடு ஓடைகளில் கூடுதல் தடுப்பணைகள் கட்டப்படுமா?
மழைக் காலத்தில் காவிரி ஆற்றில் வீணாக கலக்கும் நீரை சேமிக்கும் வகையில் ஈரோடு நகரில் ஓடும் ஓடைகளில் கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


மழைக் காலத்தில் காவிரி ஆற்றில் வீணாக கலக்கும் நீரை சேமிக்கும் வகையில் ஈரோடு நகரில் ஓடும் ஓடைகளில் கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஈரோடு மாநகராட்சியில் பெரும்பள்ளம், பிச்சக்காரன்பள்ளம் என இரு ஓடைகள் உள்ளன. ஈரோடு மாநகராட்சிக்கு இந்த ஓடைகள் மிகப்பெரிய வரப்பிரசாதம். மாநகராட்சிப் பகுதியில் நிலத்தடி நீர் உயர முக்கிய ஆதாரமாக இந்த ஓடைகள் விளங்கி வருகின்றன.
சென்னிமலை அருகே வெள்ளோடு பகுதியில் உள்ள புங்கம்பாடியில் கீழ்பவானி கால்வாயின் கசிவுநீரில் இருந்து தொடங்கும் பெரும்பள்ளம் ஓடை, திண்டல், நல்லியம்பாளையம், முத்தம்பாளையம், சூரம்பட்டி, பெரியார் நகர், கருங்கல்பாளையம் வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. சூரம்பட்டி அணைக்கட்டு வரை ஓரளவு சுத்தமான நீரை சுமந்து வரும் இந்த ஓடை, சூரம்பட்டி வந்தவுடன், கழிவுநீர் கால்வாயாக மாறிவிடுகிறது.
புங்கம்பாடிக்கும், சூரம்பட்டி அணைக்கட்டுக்கும் இடையே ஓடையின் குறுக்கே 3 இடங்களில் சிறிய அளவில் தடுப்பணைகள் உள்ளன. இந்த தடுப்பணை உள்ள பகுதிகளை சுற்றி நிலத்தடி நீர் மட்டம் போதுமான அளவுக்கு உள்ளது. இருப்பினும் இந்த தடுப்பணைகள் இதுவரை சரியாக பராமரிக்கப்படாததால் நீர்சேமிக்கும் அளவு குறைந்துள்ளது.
புங்கம்பாடி முதல் சூரம்பட்டி அணைக்கட்டு வரை மேலும் 4 இடங்களில் தடுப்பணைகள் அமைத்தால் கூடுதல் நீரை சேமிக்க முடியும். பெரும்பள்ளம் ஓடையில் செப்டம்பர் முதல் மே மாதத்தின் முதல் இரு வாரங்கள் வரை நீர் வரும் என்பதால் ஈரோடு மாநகராட்சியின் 3, 4-ஆவது மண்டலப் பகுதிகளில் இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை மேலும் அதிகரிக்க முடியும்.
பிச்சக்காரன்பள்ளம் ஓடை: இதேபோல, ஈரோடு அருகே எல்லப்பாளையம் பகுதியில் கீழ்பவானி கால்வாயின் கசிவுநீரில் இருந்து தொடங்கும் பிச்சக்காரன்பள்ளம் ஓடை, வீரப்பன்சத்திரம், பி.பெ.அக்கரஹாரம் வழியாக காலிங்காரயன் கால்வாயை கடந்து பின்னர் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த ஓடையிலும் இப்போது பெரும்பாலும் சாக்கடை நீர் தான் ஓடுகிறது.
ஆனால், மழைக் காலத்தில் நல்ல நீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த ஓடையில் சாய, சலவை, தோல் ஆலைகளின் கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர் கலப்பதை தடுத்து குறைந்தபட்சம் 3 தடுப்பணைகள் வரை கட்டினால் மாநகராட்சியின் 1, 2-ஆம் மண்டலப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க முடியும் என்பது பொதுநல அமைப்புகளின் கருத்து.
இதுகுறித்து ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவத்திடம் கேட்டபோது,
ஈரோடு நகரில் ஓடும் ஓடைகளை சுத்தப்படுத்தி அழகுப்படுத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பிச்சக்காரன்பள்ளம் ஓடையை சுத்தம் செய்து அழகுப்படுத்த தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு அபிவிருத்தி சேவை நிதிக் கழகம் மூலம் நிதி பெறுவதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பள்ளம் ஓடையும் இதுபோல அழகுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பிச்சக்காரன்பள்ளம் ஓடைக்கு குறுக்கே உள்ள கனிராவுத்தர் குளத்தை தூர்வாரி அழகுப்படுத்த ரூ. 14 கோடியை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அண்மையில் அறிவித்தார். இந்த ஆண்டே ரூ. 4 கோடியில் குளம் தூர்வாரப்படும் என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார்.
பெரும்பள்ளம் ஓடையில் இருந்து வரும் கசிவு நீரால் நிரம்பும் சடையம்பாளையம் குளம் ரூ. 3 கோடியில் ஏற்கெனவே தூர்வாரி அழகுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். படிப்படியாக அனைத்து ஓடைகளும் தூர்வாரி சுத்தப்படுத்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...