நல்லெண்ணெய் சந்தையில் கூட்டுறவுத் துறை!
கூட்டுறவுத் துறையின் மூலமாகத் தயாரிக்கப்படும் "பசுமை நல்லெண்ணெய்' முதல் முறையாக எண்ணெய் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.


கூட்டுறவுத் துறையின் மூலமாகத் தயாரிக்கப்படும் "பசுமை நல்லெண்ணெய்' முதல் முறையாக எண்ணெய் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
தமிழகத்தில் நல்லெண்ணெய் விலை கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. அதேநேரத்தில் சுத்தமான, சுகாதாரமான நல்லெண்ணெய் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.
நல்லெண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்குத் தரமான எண்ணெயை வழங்கும் வகையிலும் புதிய வகையை சந்தையில் கூட்டுறவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய இரு இடங்களில் நல்லெண்ணெய் உற்பத்தி ஆலையை கூட்டுறவுத் துறை அமைத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் ரூ. 30 லட்சத்தில் நல்லெண்ணெய் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் தினமும் ஒரு டன் எள்ளை அரைவை செய்து நல்லெண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.
இதில் 40 சதவீதத்தை (400 கிலோ) இந்தச் சங்க உறுப்பினர்களாக இருக்கும் விவசாயிகள் அரைவை செய்து கொள்ளலாம். எஞ்சிய 60 சதவீத (600 கிலோ) எள்ளானது கூட்டுறவுத் துறையின் மூலம் அரைவை செய்யப்படும்.
இதிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் பாக்கெட்டுகள், டின்களில் அடைக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மூலமாக சந்தைப்படுத்தப்படும்.
இதுகுறித்து பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் மு.துரைராஜ் கூறியதாவது:
1942-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்களது சங்கத்தில் இப்போது 12 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு இதுவரை கொப்பரைத் தேங்காய்கள் ஏலம் நடைபெற்று வந்தது.
மார்ச் முதல் வாரத்தில் இருந்து வாரம்தோறும் வியாழக்கிழமை எள் ஏலம் நடைபெற்று வருகிறது. எள் ஏலம் முடிந்தவுடன் விவசாயிகளுக்கு ஏலத் தொகை வழங்கப்படும்.
விவசாயிகளின் எள் மூட்டைகளுக்கு அவசரத் தேவைக்கு குறைந்த வட்டியில் சரக்கு ஈட்டு கடன் வசதி செய்து தரப்படுகிறது.
ஏலத்தின் போது விலைபோகாத மூட்டைகளை வாடகையின்றி சங்கக் கிடங்கில் அடுத்த ஏலம் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். எள் விதைகளை எங்களது சங்க அரைவை ஆலையில் அரைவை செய்து எண்ணெயாக மாற்றி நுகர்வோரிடம் விற்பனை செய்து தருகிறோம். இதுவரை 4,000 லிட்டர் விற்பனை செய்துள்ளோம். இன்னும் சில மாதங்களில் பெரிய அளவில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
பசுமை நல்லெண்ணெய்க்கு அமோக வரவேற்பு கிடைக்கும்
இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கூறியதாவது:
தமிழக மக்களுக்குத் தரமான நல்லெண்ணெய் கிடைக்கும் வகையில், கூட்டுறவுத் துறையில் புதிய பிராண்ட் மூலமாக நல்லெண்ணெய் அறிமுகப்படுத்தும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். பொதுவாக, தனியார் துறையில் நல்லெண்ணெய் உற்பத்தி செய்யும்போது மொலாசஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், கூட்டுறவுத் துறையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பனை வெல்லம் மூலமாக நல்லெண்ணெய் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வெளிச் சந்தையைவிடக் குறைவான விலையில் ஒரு லிட்டர் ரூ. 192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த எண்ணெய்க்கு "பசுமை நல்லெண்ணெய்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் நுகர்வோரிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...