மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

பஞ்சு, நூல் விலை குறைந்ததால் ரூ.300 கோடி ஜவுளி ரகங்கள் தேக்கம்: உற்பத்தியாளர்கள் கவலை

பஞ்சு, நூல் விலை குறைந்ததால், உற்பத்தி செய்யப்பட்ட ரூ.300 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் விற்பனை

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:50 am

ஜெபலின்ஜான்

பஞ்சு, நூல் விலை குறைந்ததால், உற்பத்தி செய்யப்பட்ட ரூ.300 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் விற்பனை செய்ய முடியாமல் கிடங்குகளில் தேக்கம் அடைந்துள்ளன.

தீபாவளி நேரத்தில்தான் ஜவுளி ரகங்கள் அதிகமாக விற்பனையாகும். இந்த ஆண்டு 6 மாதங்களுக்கு முன்பாகவே தீபாவளி வியாபாரத்துக்கு தேவையான ஜவுளி ரகங்களை, ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யத் தொடங்கினர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, 6 மாதங்களுக்கு முன் இருந்த பஞ்சு, நூல் விலையைவிட,  2 மாதங்களுக்கு முன் இவற்றின் விலை குறைந்துவிட்டது.

இதனால், அதிக செலவு செய்து உற்பத்தி செய்த ஜவுளியை இப்போது குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நெருக்கடி நிலைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுவிட்டனர். ஏற்கெனவே, ஜவுளி வர்த்தகம் குறைந்துவிட்டதால், தீபாவளிக்காக தயாரிக்கப்பட்ட ஜவுளி ரகங்கள், உற்பத்தியாளர்களின் கிடங்குகளில் தொடர்ந்து தேக்கம் அடைந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து விசைத்தறி வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் (பெடக்ஸில்) தென்மண்டலத் தலைவர் வி.டி.கருணாநிதி கூறியது:

6 மாதங்களுக்கு முன்பு ஒரு கண்டி (365 கிலோ) ரூ.45,000 ஆக இருந்த பஞ்சு விலை 2 மாதங்களுக்கு முன் ரூ.37,000 ஆக குறைந்துவிட்டது. இதனால் நூல் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை குறைந்துவிட்டது.

தீபாவளிக்கான ஜவுளிகளை மொத்த வியாபாரிகள் ஒரு மாதத்துக்கு முன்பே கொள்முதல் செய்துவிட்டனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கான உற்பத்தியில் 30 சதவீதத்தை குறைத்துவிட்டோம். இருப்பினும் உற்பத்தி செய்த ஜவுளிகளில் 30 சதவீதம் தேக்கம் அடைந்துவிட்டது.

வெளிமாநிலங்களில் இருந்து வந்த மொத்த வியாபாரிகள், கடந்த ஆண்டைவிட 50 சதவீதம் குறைவாக ஜவுளியை கொள்முதல் செய்துள்ளனர். பஞ்சு, நூல் விலை குறைந்துவிட்டதால், வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி ரகங்களை விலை குறைத்து கேட்கின்றனர்.

கூடுதல் விலை கொடுத்து நூலை கொள்முதல் செய்ததால், ஜவுளி உற்பத்தியாளர்களால் மொத்த வியாபாரிகள் கேட்கும் விலைக்கு ஜவுளியை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் தமிழகத்தில் மட்டும் ரூ.300 கோடி மதிப்புள்ள ஜவுளி ரகங்கள் கிடங்குகளில் தேக்கமடைந்துள்ளன. இதனால் தமிழகத்தில் உள்ள விசைத்தறிகளில் ஒரு "ஷிப்ட்' குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.