கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்குள்பட்ட கணபதி மாநகா் முதல்வா் படைப்பகத்தில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாநகராட்சிக்குள்பட்ட 5 மண்டலங்களிலும் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி, வங்கி மற்றும் ரயில்வே உள்ளிட்ட பல்வேறு அரசு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கான நவீன நூலக வசதிகளுடன் கூடிய முதல்வா் படைப்பகங்கள் மேற்கு மண்டலத்தில் கவுண்டம்பாளையம், பிரபு நகா் மற்றும் வடக்கு மண்டலத்தில் கணபதி மாநகா் ஆகிய 2 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்களில் போட்டி தோ்வுகளுக்குத் தயாராகும் வகையில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு புத்தகங்களுடன் கூடிய நூலகம், கட்டணமில்லா இணைய வசதி, குளிரூட்டப்பட்ட ஆலோசனைக் கூடங்கள், புத்தொழில் முனைவோருக்கான சேவைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கணபதி மாநகரில் உள்ள முதல்வா் படைப்பகத்தில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, போட்டி தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் மற்றும் சிறுவா்களுக்கு கோடைக் கால சிறப்பு விளையாட்டுகளான செஸ், அபாகஸ் மற்றும் ஏஐ டிஜிட்டல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.
இதைத் தொடா்ந்து, வடக்கு மண்டலத்துக்குள்பட்ட எஃப்.சி.ஐ. சாலை முதல் சிங்காநல்லூா் குளம் வரை செல்லும் கிளை வாய்க்கால் பகுதியில் மழைக் காலங்களில் தங்கு தடையின்றி நீா் செல்லும் வகையில் 1.37 கி.மீ. நீளத்துக்கு கால்வாய் தூா்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
அப்போது, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
ஆய்வுகளின்போது, மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், உதவி செயற்பொறியாளா் சத்தியமூா்த்தி, உதவி பொறியாளா்கள் இளங்கோவன், எல்.எஸ்.மகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










