சீரமைக்கப்படுமா எம்.ஜி.ஆர். காலத்து நீர்ப்பாசனத் திட்டம்? எதிர்காலத்தில் மாநகரின் குடிநீர்த் தேவைக்குக் கை கொடுக்கும்
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டு, தற்போது கேட்பாரற்ற நிலையில் உள்ள கோவை, சின்னவேடம்பட்டி ஏரி,


மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டு, தற்போது கேட்பாரற்ற நிலையில் உள்ள கோவை, சின்னவேடம்பட்டி ஏரி, வாய்க்காலை அவரது நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படும் இத்தருணத்திலாவது சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தையொட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து நொய்யல், கெளசிகா உள்ளிட்ட ஆறுகளும், ஏராளமான காட்டாறுகள், சிற்றோடைகளும் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்கின்றன. இவற்றில் இருந்து வரும் தண்ணீரைத் தேக்கி வைத்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த இயற்கையாக அமைந்துள்ள குளங்களுடன், செயற்கையாக ஏரிகள், கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழைப் பொழிவு இல்லாததால் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் காலத்தில் அமைக்கப்பட்டு, சீரமைக்கப்படாமல் இருக்கும் சின்னவேடம்பட்டி ஏரி, அதன் வாய்க்கால் ஆகியவை தற்காலத்துக்கும் அதிகப் பயன் தரும் என்பதால், அவற்றை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இது குறித்து அத்திக்கடவு, கெளசிகா நதி மேம்பாட்டுச் சங்கச் செயலர் பி.கே.செல்வராஜ் கூறியதாவது: கோவையில், கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கின்போது அழிவை ஏற்படுத்திய காட்டாறுகளில் சங்கனூர் ஓடையும் அடங்கும். மாங்கரை, தடாகம் வனப் பகுதியில் பெய்யும் மழையால் சங்கனூர் ஓடையில் பெருக்கெடுக்கும் வெள்ளம், கவுண்டம்பாளையம் வழியாக மாநகருக்குள் புகுந்து, அவிநாசி சாலையைக் கடந்து சிங்காநல்லூர் குளத்தை அடைகிறது.
மழைக் காலங்களில் இந்த ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதைத் தடுப்பதற்காக கணுவாய் பகுதியில் சங்கனூர் தடுப்பணை அமைக்கப்பட்டது. இந்தத் தடுப்பணை வழியாக வீணாகச் செல்லும் நீரை, சின்னவேடம்பட்டி பகுதியில் ஏரி அமைத்துத் தேக்கினால் சுற்றுப்பகுதியில் விவசாயம் மேம்படும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, 1986-இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தடுப்பணையில் இருந்து சுமார் 7.50 கி.மீ. தூரத்துக்கு ராஜவாய்க்காலுடன் சின்னவேடம்பட்டி ஏரி அமைக்கப்பட்டது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை அமைக்க, ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களை வழங்கினர். உணவுக்கு வேலைத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் நடைபெற்ற இப்பணியால் வாய்க்கால் அமைக்கப்பட்டது.
சின்ன வேடம்பட்டி ஏரி நிரம்பினால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் விளாங்குறிச்சி குளம், காளப்பட்டி குளம், கருப்பராயன் குளங்களை நிரப்பி சின்னியம்பாளையம் வழியாகச் செல்லும்படி வடிவமைக்கப்பட்டது. வெள்ளத்தில் இருந்து நகர மக்களைக் காப்பாற்றுவதுடன், வடக்குப் பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டது. மழைக் காலங்களில் நீர் நிரம்பும்போது இந்த ஏரிக்கு ஏராளமான பறவைகள் வருவதால் கோவையின் வேடந்தாங்கல் என்றும் இது அழைக்கப்படுகிறது.
இந்த ஏரியின் நீர், கணபதி, சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு, துடியலூர், கோவில்பாளையம், நேரு நகர், வெள்ளானப்பட்டி, சின்னியம்பாளையம், அரசூர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், சரவணம்பட்டி பகுதியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் நீர் தேவையையும் பூர்த்தி செய்ய உதவுகிறது.
தற்போதும், கோவை மாநகர மக்களுக்குத் தேவையான, குறிப்பிட்ட அளவிலான காய்கறி, கீரைகளை விளைவிப்பதில் சின்னவேடம்பட்டி ஏரி நீர்தான் உதவியாக உள்ளது. ஆனால், கணுவாய் பகுதியில் உள்ள சங்கனூர் தடுப்பணையைச் சீரமைத்து வைக்காததால், மழைக் காலங்களில் வரும் நீர் ஓடையில் கலந்துவிடுகிறது. மேலும், கணுவாயில் இருந்து சின்னவேடம்பட்டிக்கு தண்ணீர் வருவதில் பல சிக்கல்கள் இருப்பதால் 25 சதவீதம் நீர் மட்டுமே வருகிறது.
சங்கனூர் தடுப்பணையை மேலும் 2 மீட்டருக்கு உயர்த்திக் கட்டுவதால் அதிக அளவில் தண்ணீரைத் தேக்கி வைப்பதுடன், சின்னவேடம்பட்டி ராஜவாய்க்காலில் தொடர்ந்து தண்ணீரை விட முடியும். தடுப்பணையின் மதகுகள் தற்போது திறக்க முடியாத வகையில் உள்ளன. இந்த மதகுகளை அகற்றிவிட்டு புதிதாக மதகுகளை பூட்டுடன் அமைக்க வேண்டும். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், ஊட்டுக் கால்வாயை பலப்படுத்த வேண்டும். தடுப்பணையில் இருந்து ஏரி வரை பெரிய குழாய் அமைத்தும் உபரி நீரை சேதாரமின்றிக் கொண்டு வரலாம்.
இதன் மூலம் சின்னவேடம்பட்டி ஏரி நீரை, எதிர்காலத்தில் மாநகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் பங்களிக்கும் விதமாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சின்னவேடம்பட்டி ஏரி, வாய்க்காலை, அவரது நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படும் இத்தருணத்தில் சீரமைக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...