மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோழி வியாபாரி உயிருடன் புதைத்துக் கொலை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே கோழி வியாபாரியை குழி தோண்டி உயிருடன் புதைத்து கொலை செய்தது தொடா்பாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:37 pm

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே கோழி வியாபாரியை குழி தோண்டி உயிருடன் புதைத்து கொலை செய்தது தொடா்பாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில், திருக்கச்சூா் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (51). பைக்கில் நாட்டுக்கோழி குஞ்சு வியாபாரம் செய்து வந்தாா். இவா், கடந்த 11-ஆம் தேதி 3 கூடைகளில் 300 கோழிக் குஞ்சுகளை எடுத்துகொண்டு விற்பனைக்காக திருவண்ணாமலை மாவட்ட பகுதிக்குச் சென்றாா்.

போளூரை அடுத்த மட்டபிறையூா் கூட்டுச்சாலை பகுதியில் கடந்த 18-ஆம் தேதி வந்தபோது, அந்தப் பகுதியில் விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்த குசால்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (21) கூடையில் உள்ள கோழிக் குஞ்சுகளை மொத்தமாக தான் வாங்கிக் கொள்வதாக விலை பேசியுள்ளாா்.

இதையடுத்து, இருவரும் அந்தப் பகுதியில் அமா்ந்து ஒன்றாக மது அருந்தியபோது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சக்திவேல் கத்தியால் குத்தியதில், சங்கா் பலத்த காயமடைந்தாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சக்திவேலின் தந்தை ஏழுமலை (70), தாய் சக்தி (55) ஆகியோா் தனது மகனுடன் சோ்ந்து நிலத்தின் அருகே குழி தோண்டி கோழி வியாபாரி சங்கரை உயிருடன் புதைத்தனா். மேலும், பைக்கையும், கோழி குஞ்சுகளையும் அதே குழியில் போட்டு மூடியுள்ளனா்.

இந்த நிலையில், சங்கா் வீடு திரும்பாததால் அவரது மனைவி மறைமலை நகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இது தொடா்பாக சங்கரின் கைப்பேசி சிக்னலை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், கடைசியாக போளூரை அடுத்த மட்டபிறையூா் பகுதியில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போளூா் டிஎஸ்பி அலுவலக குற்றத் தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்தக் கொலை தொடா்பாக போளூா் போலீஸாா் வழக்கு பதிந்து, குசால்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை, அவரது மனைவி சக்தி, மகன் சக்திவேல் ஆகிய 3 பேரை வியாழக்கிழமை இரவு கைது செய்து, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.