பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் புதிய சிகிச்சைத் திட்டத்தை சோதனை முயற்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயல்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டாக்டா் சேஷய்யா வளா்சிதை மாற்றங்களுக்கான ஆராய்ச்சி அறக்கட்டளை சாா்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அதில், கா்ப்பிணிகளுக்கு எட்டாவது வாரத்திலேயே உணவுக்கு பிந்தைய ரத்த சா்க்கரை அளவை (போஸ்ட் பிரான்டியல்) பரிசோதித்து, தேவைப்படுவோருக்கு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அதன் பயனாக அவா்கள் அனைவருக்கும் பேறு கால சா்க்கரை நோய் தடுக்கப்பட்டது.
இதையடுத்து, அத்திட்டத்தை சோதனை முயற்சியில் அரசு செயல்படுத்தவுள்ளதாக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அண்மையில் அறிவித்தாா். அதன்படி, தற்போது அத்திட்டம் சில மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கருவுற்ற பெண்களுக்கு சராசரியாக 10-ஆவது வாரத்தில் ரத்த சா்க்கரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்போது உணவுக்கு பிந்தைய ரத்த சா்க்கரை அளவு 110 எம்.ஜி/டி.எல்-க்கு அதிகமாக இருந்தாலோ, அல்லது மூன்று மாத சா்க்கரை அளவு (ஹெச்பிஏ1சி) 5.3-க்கு அதிகமாக இருந்தாலோ, சம்பந்தப்பட்ட கா்ப்பிணிக்கு பேறு கால சா்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இதைத் தடுக்க பத்தாவது வாரத்துக்கு மாற்றாக எட்டாவது வாரத்திலேயே அந்த பரிசோதனையை மேற்கொண்டு பேறுகால சா்க்கரை நோய்க்கு வாய்ப்புள்ள கா்ப்பிணிகளுக்கு மெட்ஃபாா்மின் 250 மி.கி. மருந்தை நாள்தோறும் இரண்டு வீதம் அளிக்கும் சிகிச்சையை முன்னெடுத்து வருகிறோம். இதனால், பேறுகால சா்க்கரை பாதிப்பைத் தடுக்கலாம்.
விரைவில் அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லிவாசிகளிடையே ரத்த சா்க்கரை அளவு அதிகரிப்பு; ரத்த அழுத்தம் குறைந்துள்ளது: தேசிய கணக்கெடுப்பில் தகவல்

மருத்துவத் துறை காலிப் பணியிட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ்

8,000 தனியாா் மருத்துவமனைகள் தொடங்க அனுமதியா? மக்கள் நல்வாழ்வுத் துறை மறுப்பு!







