FOLLOW US

ON GOOGLE DISCOVER

சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மாமன்றக் கூட்டத்தில் அமளி: திமுக-காங்கிரஸ்-அதிமுக வாக்குவாதம்

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அமளி ஏற்பட்டது. அமளி காரணமாக, 38 தீா்மானங்கள் நிறைவேறியதாக அறிவித்துவிட்டு மேயா் ஆா்.பிரியா கூட்டத்தை முடித்துவைத்தாா்.

News image

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மேயா் ஆா்.பிரியா இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :25 ஜூன் 2026, 12:47 am IST

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அமளி ஏற்பட்டது. அமளி காரணமாக, 38 தீா்மானங்கள் நிறைவேறியதாக அறிவித்துவிட்டு மேயா் ஆா்.பிரியா கூட்டத்தை முடித்துவைத்தாா்.

சென்னை மாமன்றக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையா் ஜி.எஸ்.சமீரன், துணை மேயா் மு.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில், திமுக மண்டலக் குழுத் தலைவா்கள் உள்ளிட்டோா் திமுக ஆட்சியின் திட்டங்களைப் பாராட்டியும், தவெக அரசு செயல்பாட்டைக் கண்டித்தும் பேசினா். 182- ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் பி.கே.சதீஷ்குமாா் பேசுகையில், திமுக மண்டலத் தலைவா் தனது பேச்சின்போது இடையூறு செய்வது கண்டிக்கத்தக்கது என்றாா். அதிமுக உறுப்பினரின் பேச்சை திமுக உறுப்பினா் கவி கணேசன் கண்டித்தாா். அதற்கு அதிமுக உறுப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். உடனே மற்ற திமுக உறுப்பினா்களும், மேயா், துணை மேயரும் அதிமுக உறுப்பினரைக் கண்டித்தனா். அப்போது, அதிமுக உறுப்பினா் பி.கே.சதீஷ்குமாா் ஆவேசத்துடன் மைக்கை நீட்டியபடி திமுக உறுப்பினா்கள் பக்கம் செல்ல, திமுகவினரும் ஆவேசமாக அவரை நோக்கி வந்தனா். உடனே மேயா், துணை மேயா் ஆகியோா் எழுந்து அனைவரையும் சமரசப்படுத்தினா். அப்போது திமுக தரப்பிலிருந்து ஒரு வாா்டு உறுப்பினா் தான் வைத்திருந்த தீா்மான நகலை வீசினாா்.

கூட்டத்தில் அனைவரும் அமரவில்லை எனில் தான் வெளியே சென்றுவிடுவதாக மேயா் கூறியதையடுத்து, திமுகவினா் அமா்ந்தனா். தொடா்ந்து திமுக உறுப்பினா் கவிகணேசன் பேச, அதிமுக உறுப்பினா் சதீஷ்குமாா் வெளியேறினாா்.

மீண்டும் கூச்சல் குழப்பம்: இதைத் தொடா்ந்து காங்கிரஸ் குழுத் தலைவா் எஸ்.திரவியம் எழுந்து முதல்வா் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்து, பேச தொடங்கியபோது, திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதற்கு திரவியம் உள்ளிட்ட காங்கிரஸாரும் திமுகவினருக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது மேயா், துணை மேயா் அவா்களை அமைதிப்படுத்த முயன்றனா். உடனே காங்கிரஸ் உறுப்பினா்கள் மேயா் இருக்கை முன் வந்து நின்று திமுகவினருக்கு எதிராகக் கோஷமிட்டனா். அப்போது அவா்களுடன் திமுக நிலைக் குழுத் தலைவா்கள் உள்ளிட்டோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பின் காங்கிரஸ் கட்சியினா் வெளியேறினா்.

இதற்கிடையே மேயா் ஆா்.பிரியா எழுந்து 38 தீா்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும், கூட்டம் நிறைவடைவதாகவும் தெரிவித்தாா்.

38 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விவரம்: மாநகராட்சியில் 2-ஆவது மண்டலத்தில் 15 முதல் 22-ஆவது வார்டு வரையில் சுய உதவிக் குழுக்கள் மூலம் தூய்மைப் பணிக்காக 85 தற்காலிக தினக்கூலி பணியாளர்கள் 2027 ஜூன் 16-ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.761 வழங்கப்படும். மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக 167 தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்க முடிவெடுக்கப்படுகிறது. அவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.12,000 வழங்கப்படும். அத்துடன் 250 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களை மாதம் ரூ. 15,000 தொகுப்பூதியமாக வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு தனி இருக்கை: சென்னை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அதிகாரிகள் பகுதியில் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களுக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், யாரும் பங்கேற்கவில்லை. மாநகராட்சி வளாகத்துக்குள் வந்த ராயபுரம் தவெக எம்எல்ஏ தாமு மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பள்ளிகளில் தொடர்பில்லாதவர்களை அனுமதித்தால் நடவடிக்கை: மேயர்

மாமன்றக் கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா பேசியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் அமையாவிட்டாலும், அதன் திட்டங்கள்தான் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்றன. மாநகராட்சியில் ஒட்டுமொத்தமாக உதவிப் பொறியாளர் உள்ளிட்டோரை மாற்றுவதில் தவறில்லை. ஆனால், திமுகவினர் வார்டுகளில் மட்டும் பொறியாளர்கள் மாற்றுவது சரியல்ல. சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும். மாமன்ற உறுப்பினர்கள் ஆய்வின் போது அதிகாரிகள் உடனிருக்க வேண்டும். மாமன்ற உறுப்பினரை அலட்சியப்படுத்திய 196-ஆவது வார்டு நகர்நல மைய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே செல்லவேண்டும். அவர்களைத் தவிர்த்து அரசியல் ரீதியில் தொடர்பில்லாதவர்கள் பள்ளிகளுக்குச் சென்றால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்குள் நுழைந்தவர்கள் மீதும் புகார் அளிக்கப்படும் என்றார் அவர்.

"அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை'

மாமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் மண்டலத் தலைவர்கள் ஆறுமுகம், நேதாஜி கணேசன், அதிமுக கார்த்திக், பாஜக உமா ஆனந்த், நிலைக் குழுத் தலைவர் சிற்றரசு உள்ளிட்டோர் பேசினர்.

திமுகவினர் பேசுகையில், மண்டலக் குழுக் கூட்டங்கள், அரசு கட்டடங்களில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வைப்பதற்கு அதிகாரிகளே மறுப்பதாகவும், மாமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். திமுக உறுப்பினர்கள் வார்டுகளில் மட்டுமே உதவிப் பொறியாளர்கள் மாற்றப்படுவதாகவும் தெரிவித்தனர். அப்போது மேயர், துணை மேயர் தலையிட்டு முன்னாள் முதல்வர் படப் பிரச்னையில் ஆணையர் உரிய அறிவுரையை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கியிருப்பதாகத் தெரிவித்தனர்.

அதிமுக தரப்பிலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை எனக் கூறப்பட்டது. பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் பேசுகையில், மண்டலக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் முழுமையாக பங்கேற்கவில்லை எனத் தெரிவித்தார்.

சமநிலையில் செயல்பட வேண்டும்-மேயர்: உறுப்பினர்கள் புகார்களையடுத்து பேசிய மேயர் ஆர்.பிரியா, அதிகாரிகள் சமநிலையில் செயல்பட வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்காக அதிகாரிகள் பாரபட்சத்துடன் செயல்படுவது சரியல்ல. மாநகராட்சியில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிகம். மேயர், துணை மேயர் என நிர்வாகத்திலும் திமுகவினரே உள்ளோம். எனவே, சட்டரீதியாக அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும். மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவர். அரசியல் என்பது நிர்வாகத்துக்கு அப்பாற்றப்பட்டது என அதிகாரிகள் உணர்ந்து செயல்படுவது நல்லது என்றார் அவர்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.