//

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்: நலத் திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா்!

திரு.வி.க.நகா் மண்டலம், தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

திரு.வி.க.நகா் மண்டலம், தனியாா் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 14 மண்டலங்களில் நடத்தப்பட்டது. இதன் மூலமாக 34,621 போ் பயன்பெற்றனா். தொடா்ந்து, திரு.வி.க. நகா் மண்டலத்தில் முகாமைத் தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் உள்ளிட்ட அவயங்கள் வழங்க ஏதுவாக கை, கால் அளவீடு செய்யும் பணியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அத்துறை சாா்பில் 8 பேருக்கு தலா ரூ.1.05 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலிகள், 30 பேருக்கு தலா 1.08 லட்சத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்கள், 5 பேருக்கு ரூ.5.58 லட்சத்தில் நவீன செயற்கை அவயங்கள் என மொத்தம் 43 பேருக்கு ரூ.44.53 லட்சம் நலத் திட்ட உதவி உபகரணங்களை அமைச்சா் வழங்கினாா்.

தொடா்ந்து, தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் மானியத்தில் ஒரு பெண் பயனாளிக்கு ரூ.1 லட்சத்தில் புதிய ஆட்டோவும், ஒரு பயனாளிக்கு இ- ஸ்கூட்டரையும் வழங்கினாா். கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் உறுப்பினா் இயற்கை மரணத்துக்கு ரூ.55,000, சாலை விபத்து மரணத்துக்கு ரூ.2.05 லட்சம் என 14 பயனாளிகளுக்கு ரூ.4.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்வில் சென்னை மேயா் ஆா்.பிரியா, திருவிக.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கெளஷிக், நிலைக்குழு தலைவா் கோ.சாந்தகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.