திருட்டு வாகனங்களின் புகலிடமாகும் வாகன நிறுத்தும் மையங்கள்
சென்னையில் திருட்டு வாகனங்களின் புகலிடமாக வாகன நிறுத்தும் மையங்கள் மாறி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.


சென்னையில் திருட்டு வாகனங்களின் புகலிடமாக வாகன நிறுத்தும் மையங்கள் மாறி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
சென்னையில் மக்கள் நெரிசல் அதிகரித்து வருவதற்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு 700 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சென்னையில் மட்டும் மொத்தம் 41 லட்சத்து 61 ஆயிரத்து 790 வாகனங்கள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 7 சதவீதமாக இருந்த மோட்டார் சைக்கிள், மொபெட்டுகளின் எண்ணிக்கை இப்போது 20 சதவீதமாகவும், 1.5 சதவீதமாக இந்த கார்களின் எண்ணிக்கை 10 சதவீதமாகவும் உயர்ந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் கார், மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், தனியார் வாகன நிறுத்துமிடங்களையே நம்பியுள்ளனர். இதனால், இந்தத் தொழில் மிகுந்த லாபகரமானதாக மாறியுள்ளது.
குறிப்பாக மின்சார ரயில், பேருந்துகள் மூலம் பணிக்குச் செல்வோர் தங்களுடைய வாகனங்களை ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வரும் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்துவிட்டுச் செல்கின்றனர்.
இந்த தனியார் வாகன நிறுத்தங்கள் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி ஒரு மணி நேரத்துக்கு ரூ. 20 முதல் ரூ. 50 வரை வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்து வருவதோடு, போதிய பாதுகாப்பு வசதிகள், கண்காணிப்பு இல்லாமல் சமூக விரோதக் கூடங்களாக மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னையில் மட்டுமின்றி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை பல நாள்களுக்கு பாதுகாப்பாக மறைத்து வைக்கும் மறைவிடங்களாக இந்த வாகன நிறுத்தங்கள் மாறிப்போயிருப்பது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்மையில், எழும்பூர் ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் பல வாரங்களாக கேட்பாரற்று நின்றிருந்த மோட்டார் சைக்கிள்களை வாகன நிறுத்த உரிமையாளருடன் போலீஸாரும் இணைந்து விற்றது அம்பலமானது. விசாரணையில் அந்த வாகனங்கள் அதன் உரிமையாளரால் நிறுத்தப்படவில்லை என்றும், திருட்டுப்போனவைகள் என்றும் தெரியவந்தது.
இதுகுறித்து ஓய்வுபெற்ற போக்குவரத்துக் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைக்கும் இடங்களாக தனியார் வாகன நிறுத்தங்கள் மாறியுள்ளன. இவ்வாறு நிறுத்தப்படும் திருட்டு வாகனங்கள், போலீஸாரின் கண்காணிப்பு குறையும் நேரங்களில் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுகின்றன.
பொதுவாக, பெரிய வணிக வளாகங்களில் உள்ள வாகன நிறுத்தங்கள் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாகன ஓட்டிகளுக்கு "பார் கோடுடன்' கூடிய ரசீதுகள் வழங்கப்படுகின்றன. கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தியிருக்கின்றனர்.
அதோடு, தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு மேலும் நிற்கும் வாகனங்கள் குறித்து உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தனியார் வாகன நிறுத்தங்களில் இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. அதோடு, 10 நாள்களுக்கு மேல் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் குறித்த தகவல்களைக் கூட, போலீஸாருக்குத் தெரிவிப்பதில்லை. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுவதில்லை. இதுவே முறைகேடுகளுக்கு வழி வகுக்கின்றன.
இவ்வாறு நிறுத்தப்படும் வகானங்கள் போலீஸாரின் நெருக்கடி இருக்கும் நேரத்தில், அப்படியே பல நாள்களுக்கு விட்டுவிடுகின்றனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தாலும், அதன் உரிமையாளரைக் கண்டறிந்து ஒப்படைக்கும் முயற்சி எடுக்கப்படுவதில்லை. மாறாக, அந்த வாகன நிறுத்த ஊழியர்களுடன் போலீஸாரும் சேர்ந்து, கேட்பாரற்றுக் கிடக்கும் வாகனங்களை விற்றதாக அண்மையில் வெளியானத் தகவல் பல தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, வணிக வளாக வாகன நிறுத்தங்களில் உள்ளதுபோல், அனைத்து வாகன நிறுத்தங்களிலும் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். வாகனங்கள் திருடப்பட்டது குறித்து புகார் வந்தால், உடனடியாக வாகன நிறுத்தங்களிலும் போலீஸார் சோதனையிட வேண்டும். அப்போதுதான் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...