டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

புழல் சிறையில் கோழிப் பண்ணை: தமிழக சிறைகளில் முதல் முறை; புழலில் 40 சதவீத பொருள்கள் உற்பத்தி

தமிழக சிறைகளில் முதல் முறையாக புழல் மத்திய சிறையில் கோழிப்பண்ணை அமைக்கப்படுகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:20 am

கே.வாசுதேவன்

தமிழக சிறைகளில் முதல் முறையாக புழல் மத்திய சிறையில் கோழிப்பண்ணை அமைக்கப்படுகிறது.

மாநிலத்தில் புழல், திருச்சி,வேலூர், மதுரை, கோவை, பாளையங்கோட்டை, சேலம், கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மத்திய சிறைகளில் 22 ஆயிரம் பேர் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் இருக்கின்றனர். கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறையில் சிறு தொழில்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு, அவர்கள் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆயத்த ஆடை தயாரித்தல், கைத்தறி, விசைத்தறி, புத்தகம் பைண்டிங், காலணி செய்தல், கயிறு செய்தல், பேக்கரி சார்ந்த உணவு பொருள்கள் தயாரித்தல், பினாயில் தயாரிப்பு, அட்டை தயாரிப்பு, பேண்டேஜ் துணி தயாரிப்பு, சீருடை தயாரிப்பு, பாத்திரங்கள் தயாரிப்பு, அல்வா, மிக்சர் உள்ளிட்ட நொறுக்குதீனி தயாரித்தல் உள்பட 40 க்கும் மேற்பட்ட சிறு தொழில்கள் மத்திய சிறைகளில் உள்ளன. இந்த தொழில்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 5 கோடி மதிப்புள்ள பொருள்களை கைதிகள் தயாரிக்கின்றனர்.

இந்தத் தொழில்கள் மூலம் கைதிகள் பணம் ஈட்டுவதோடு மட்டுமன்றி, புதிய தொழிலையும் கற்றுக்கொள்கின்றனர்.

இதனால், அவர்கள் சிறையில் இருந்து வெளியே செல்லும்போது, புதிய தொழில்கள் தொடங்குவதற்குரிய வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது. அதேவேளையில், கைதிகளால், சிறைக்குள் ஏற்படும் பிரச்னைகள் தடுக்கப்படுகின்றன.

கைதிகள் தயாரிக்கும் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்காகவே சிறை அங்காடிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், சிறைத் தொழில்கள் நல்ல வளர்ச்சியை எட்டி வருகின்றன.

கைதிகள் தயாரிக்கும் பொருள்கள் நேரடியாக விற்கப்படுதால் ஆண்டுக்கு தோராயமாக 20 சதவீத வளச்சியை சிறைத் துறை தொழில்பிரிவு எட்டி வருவதாக அதன் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, ஒவ்வொரு மத்திய சிறையின் அடிப்படை வசதிகளைப் பொருத்து புதிய தொழில்கள் தொடங்கப்படுகின்றன. இதன் அடிப்படையில், புழல் மத்திய சிறையில் இறைச்சிக் கோழிப் பண்ணையை திறப்பதற்குரிய நடவடிக்கையில் சிறைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக ஓர் ஏக்கர் இடத்தை சிறைத் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

கோழிப்பண்ணை அமைக்க அரசின் அனுமதியை சிறைத் துறை பெற்றுவிட்ட நிலையில், மழைக்காலம் முடிந்ததும் கோழிப்பண்ணை திறப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

கோழிப்பண்ணையில் செய்யப்பட வேண்டிய வேலைகள் குறித்து கைதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே மதுரை மத்திய சிறையில் உள்ள மீன் பண்ணை, புழல் பெண்கள் சிறையில் உள்ள முயல் பண்ணை ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், கோழிப்பண்ணைக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என சிறைத் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஒரு நாளைக்கு 250 கிலோ இறைச்சி

புழல் சிறையில் அமைக்கப்படும் கோழிப்பண்ணை மூலம் ஒரு நாளைக்கு 250 கிலோ இறைச்சியை உற்பத்தி செய்ய சிறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த இறைச்சி கைதிகளுக்கும் வாரந்தோறும் வழங்கப்படும்.

அடுத்த கட்டமாக, சிறை அங்காடிகள் மூலம் கோழி இறைச்சி விற்பனையை செய்ய இருக்கின்றனர். கோழிப்பண்ணை மூலம் ஒரு நாளைக்கு கூடுதலாக 20-இல் இருந்து 30 கைதிகளுக்கு வேலை கிடைக்கும் என சிறைத் துறை கருதுகிறது.

புழல் சிறையில் கோழிப்பண்ணைக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, பிற சிறைகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என சிறைத் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

சிறை பரப்பளவு : 212 ஏக்கர்

சிறை-ஐ: 670 தண்டனைக் கைதிகள்

சிறை-ஐஐ: 2,400 விசாரணைக் கைதிகள்

பெண்கள் சிறப்பு சிறை: 140 கைதிகள்

மொத்தம்: 3,210 கைதிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.