/

சக்கர நாற்கலிகள் இல்லை: ஜிப்மரில் நோயாளிகள் அவதி

புதுச்சேரி, பிப். 9: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவில் போதிய சக்கர நாற்காலிகள் இல்லாததாலும், இருக்கும் ஒன்றிரண்டு சக்கர நாற்காலிகளைக் கூட நோயாளிகள் பெற முடியாத அளவுக்கு விதிமுற

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:09 pm

எஸ். கார்த்திகேயன்

புதுச்சேரி, பிப். 9: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவில் போதிய சக்கர நாற்காலிகள் இல்லாததாலும், இருக்கும் ஒன்றிரண்டு சக்கர நாற்காலிகளைக் கூட நோயாளிகள் பெற முடியாத அளவுக்கு விதிமுறைகளை வைத்திருப்பதாலும், தினசரி மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.

 ஜிப்மர் மருத்துவமனையில் தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் நடக்க இயலாத நிலையில் சிகிச்சை பெற வருபவர்கள்.

 இவர்களுக்கு உதவ புறநோயாளிகள் பிரிவில் 4 சக்கர நாற்காலிகளே உள்ளன. இது போதுமானதாக இல்லை. அதனால் நோயாளிகளை அழைத்து வருபவர்கள், அவர்களை கைத்தாங்கலாகவோ அல்லது தூக்கிக் கொண்டோதான் வர வேண்டியுள்ளது.

 இதுமட்டுமல்லாது அந்த சக்கர நாற்காலியைப் பெறுவதற்கான நிபந்தனை கடுமையாக உள்ளது. இதைப் பெற நோயாளியின் சிகிச்சை விவர அட்டையை, மருத்துவமனை ஊழியரிடம் கொடுத்து விட்டு செல்ல வேண்டுமாம்.

 புறநோயாளிகள் பிரிவில் இருந்து சிறப்புப் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டால், சக்கர நாற்காலியைத் தரும் ஊழியரிடம், நோயாளி தனது சிகிச்சை விவர அட்டையைக் கொடுத்துதான், நாற்காலி பெற வேண்டியிருக்கிறது.

 இதனால், நோயாளி உடன் செல்பவர், நோயாளியை சிறப்புப் பிரிவில் விட்டுவிட்டு, மீண்டும் சக்கர நாற்காலியை ஒப்படைத்த பிறகே, அந்த விவர அட்டையைத் திரும்பப் பெற முடியும். இதில், புற நோயாளிகள் பிரிவு காலை 8 முதல் 10.30 மணி வரை செயல்படுகிறது. சிறப்புப் பிரிவும் அவ்வாறே செயல்படுகிறது.

 நாற்காலியை பெற்றுச் செல்வதற்காக, நோயாளியின் உடன் வந்தவர் அலைய வேண்டியிருப்பதால், காலை 10.30 மணியாகி, அன்றைய பணிகள் முடிந்துவிடுகின்றன. இதைத் தொடர்ந்து அடுத்த நாள் தான் வர வேண்டும். சிறப்பு பிரிவுகள் வாரத்தில் திங்கள், புதன் அல்லது செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் தான் செயல்படுகிறது. இதனால் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

 குறிப்பாக கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

 புற்று நோயைப் பொருத்தவரை இந்த மாவட்டங்கள் மட்டுமல்லாது, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர்.

 மருத்துவமனையின் விதிகளின்படி, முதலில் புறநோயாளிகள் பிரிவில் உள்ள மருத்துரிடம் செல்ல வேண்டும். அவர் அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை பிரிவு, நுரையீரல் பிரிவு, சிறுநீரகப் பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கிறார்.

 அத்தனைக்கும் நடந்து செல்ல முடியாத நோயாளிகளுக்கு, சக்கர நாற்காலி கிடைக்காததால், இந்த சிறப்பு பிரிவுகளில் பரிசோதனை செய்ய 30 நாள்கள் ஆகிவிடுகிறது. இத்தனை நாள்கள் நோயாளிகளும், உடன் வருபவரும் அவதிப்பட வேண்டியுள்ளது.

 மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்டபோது, சக்கர நாற்காலிகளுக்கு ஆர்டர் கொடுத்து இருக்கிறோம். வந்தவுடன் இந்த குறை நீங்கும். சக்கர நாற்காலிகள் திருடு போகாமல் இருக்கவே, கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது என்றனர்.

 புற நோயாளிகள் பிரிவில் புதிய சக்கர நாற்காலிகள் வாங்கி, பல மாதங்களாக பயன்பாட்டுக்கு வராமல் கிடக்கிறது. இதை ஏன் வழங்கவில்லை என்று புற நோயாளிகள் பிரிவு நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, நாற்காலியின் பின்னால், அதற்கான எண்கள், மற்றும் புறநோயாளிகள் பிரிவு என்று எழுதவில்லை. அதனால் பயன்பாட்டுக்கு வழங்கவில்லை என்றனர்.

 இந்த பணிகள் முடியாததால் அந்த நாற்காலிகள் பல மாதங்களாக முதல் மாடியில், பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சோம்பல் காரணமாக, எழுந்து சென்று நாற்காலியை தர விரும்பாத ஊழியர்கள், வரும் நோயாளிகளிடம் கடுமையான வார்த்தைகளால் பேசி, தர மறுத்தும் வருவதாக அங்கிருக்கும் நோயாளிகள் புகார் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.