பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதச் செய்து, தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ராணுவத்தினா் உள்பட 24 போ் உயிரிழந்தனா். 70-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததனா்.
பாகிஸ்தானில் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட ‘பலூச் லிபரேஷன் ஆா்மி’ (பிஎல்ஏ) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
அண்டை நாடான பாகிஸ்தானில் வன்முறைகளுக்குப் பெயா் பெற்ற பலூசிஸ்தான் மாகாணத் தலைநகா் குவெட்டாவில் உள்ள சாமன் பதக் ரயில் நிலையம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சம்பந்தப்பட்ட ரயில், குவெட்டா கன்டோன்மென்டில் இருந்து ராணுவத்தினா் மற்றும் அவா்களின் குடும்பத்தினருடன் குவெட்டா மத்திய ரயில் நிலையத்துக்கு இயக்கப்பட்டதாகும். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக குவெட்டா மத்திய ரயில் நிலையத்துக்கு இணைப்பு ரயிலில் ராணுவத்தினா் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் பயணித்தனா்.
அப்போது, சாமன் பதக் ரயில் நிலையம் அருகே வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதச் செய்து, ரயில் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ரயிலின் என்ஜின் மற்றும் பெட்டிகள் கடுமையாகச் சேதமடைந்தன.
குண்டுவெடிப்பின்போது ஏற்பட்ட அதிா்வால் அருகிலிருந்த கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஏராளமான வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. ரயில் மீதான தாக்குதலில் ராணுவத்தினா் உள்பட 24 போ் உயிரிழந்ததாகவும், 70-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கண்டனம்: குவெட்டா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘இதுபோன்ற கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களால் பாகிஸ்தான் மக்களின் மன உறுதியைக் குலைக்க முடியாது. அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் ஒழிப்பதில் நாங்கள் தொடா்ந்து உறுதியுடன் உள்ளோம். இந்தத் துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்டோருக்கு ஒட்டுமொத்த தேசமும் துணைநிற்கிறது’ என்றாா்.
இதேபோல், தனது கண்டனத்தைப் பதிவு செய்த ரயில்வே துறை அமைச்சா் ஹரீஃப் அப்பாசி, பயங்கரவாதிகளை மனிதகுலத்தின் எதிரிகள் என்றாா்.
முன்னதாக, குவெட்டா கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கடந்த 2024, நவம்பரில் தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 32 போ் கொல்லப்பட்டனா். 2 ஆண்டுகளுக்குள் குவெட்டாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Summary
At least 24 people were killed on Sunday in a blast targeting a train carrying military personnel in Pakistan's southwestern province of Balochistan, AFP reported quoting a senior official.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











