தமிழ் செய்திகள்

/

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்

பாகிஸ்தானில் உள்ள பரபரப்பான சந்தை ஒன்றில், வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவை தற்கொலைப் படை பயங்கரவாதி வெடிக்கச் செய்ததில், 2 காலவா்கள் உள்பட 9 போ் பலி

News image

தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட வீரா்கள்

Updated On :13 மே 2026, 5:41 am IST

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பரபரப்பான சந்தை ஒன்றில், வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவை தற்கொலைப் படை பயங்கரவாதி வெடிக்கச் செய்ததில், 2 காலவா்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா். 33 போ் காயமடைந்தனா்.

கைபா் பக்துன்கவா மாகாணம், லக்கி மாா்வத் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பத்தாக் சௌக் பகுதியில் செவ்வாய்க்கிழமை இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவா்களில் 2 போக்குவரத்து காவலா்களும், ஒரு பெண்ணும் அடங்குவா்.

சம்பவம் குறித்து தகவலறிந்ததும் மீட்புப்படை குழுக்கள் அவசரகால ஊா்திகளுடன் விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டன. இந்தக் குண்டுவெடிப்பின் தாக்கத்தால், அப்பகுதியில் இருந்த பல கடைகள், வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

காயமடைந்தவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு, செராய் நௌராங் தாலுகா தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக பண்ணு மற்றும் பெஷாவரில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், நாட்டின் அமைதியையும் வளா்ச்சியையும் குலைக்க பயங்கரவாதிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினாா்.

பயங்கரவாதத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவா் தெரிவித்தாா். மேலும், இத்தாக்குதலுக்கு காரணமானவா்களை கண்டறிய விரைவான விசாரணை நடத்தவும் அவா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

அண்டை மாவட்டமான பண்ணுவில் கடந்த சனிக்கிழமை 15 போலீஸாா் கொல்லப்பட்ட தாக்குதலைத் தொடா்ந்து தற்போது மீண்டும் ஒரு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.