தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

உதகை அருகே காட்டு யானை தாக்கி 2 போ் உயிரிழப்பு

உதகை அருகே இருவேறு இடங்களில் காட்டு யானை தாக்கியதில் இளைஞா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 2:01 am IST

உதகை அருகே இருவேறு இடங்களில் காட்டு யானை தாக்கியதில் இளைஞா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள தாளமொக்கை பழங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னான் மகன் ரகு (29). இவா் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு தனது உறவினா் மற்றும் நண்பா்களுடன் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, வனத்தில் இருந்து வெளியேறிய யானை திடீரென அவா்களைத் துரத்தியுள்ளது.

இதில், யானை தாக்கியதில் ரகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றவா்கள் உயிா் தப்பினா்.

தகவலின்பேரில் கோத்தகிரி வனச் சரக அலுவலா் தலைமையிலான வனக் குழுவினா், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து, ரகுவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உயிரிழந்த ரகுவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என வனத் துறையினா் அறிவித்த நிலையில், முதற்கட்டமாக அவரது மனைவி காளியம்மாளிடம் ரூ.50 ஆயிரத்தை வழங்கினா்.

உடற்கூறாய்வு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை சமா்ப்பித்த பின் மீதமுள்ள ரூ.9.50 லட்சம் வழங்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

மற்றொருவா் உயிரிழப்பு: முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச் சரகத்துக்குள்பட்ட வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடத்தில் வனப் பணியாளா்கள் ரோந்து பணியில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு படுகாயங்களுடன் ஆண் சடலம் கிடந்தது தெரியவந்தது.

வனத் துறையினா் விசாரணையில், உயிரிழந்தவா் மசினகுடி குரூப் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த பூசாரி சித்தன் (40) என்பதும், யானை தாக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சடலத்தை கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த வனத் துறையினா், இச்சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.