/

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

கனடாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image
கோப்புப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 10:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

கனடா நாட்டில், தனி நபர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்தியர்களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே நகரத்தின் கிரெசண்ட் பீச் பகுதியில், கடந்த பிப்.1 அன்று அதிகாலை அங்குள்ள வீட்டின் மீது சில நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக, கனடா காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பணம் பறிக்கும் கும்பல்களுக்கு எதிரான ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஜோத் சிங் (வயது 21), தரன்வீர் சிங் (19) மற்றும் தயாஜீத் சிங் பில்லிங் (21) ஆகியோரை, நேற்று (பிப். 2) கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், 3 பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் பிப்.5 வரை விசாரணைக்காக அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் வெளிநாட்டவர்கள் என்பதால் அவர்கள் மீது கூடுதல் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, பிரோஜக்ட் அஷ்ஷுரன்ஸ் எனும் பெயரில் கனடா அதிகாரிகள் பணம் பறிக்கும் கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில், இந்தியர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சமீபகாலமாக சர்ரே நகரத்தில் வீடுகள் மற்றும் வர்த்தக மையங்களின் மீதான கும்பல்களின் துப்பாக்கிச் சூடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.