டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கல்யாண வரம் அருளும் கங்காதீஸ்வரர்!

தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 சிவ தலங்களில் 12}ஆவது தலமாகத் திகழ்கிறது திருவூறல் எனும் தக்கோலம். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:51 am

சி. சுரேஷ்குமார்

தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 சிவ தலங்களில் 12}ஆவது தலமாகத் திகழ்கிறது திருவூறல் எனும் தக்கோலம். 

"ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே' என்பது சம்பந்தர் வாக்கு. சிவாம்சமான அகோரவீரபத்திரர் தக்கன் (தட்சன்)  தலையை கொய்த தலம்.  தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு தக்கன் ஓலமிட்டதால் (தக்கன்} ஓலம்)  இப்பதி "தக்கோலம்' என பெயர் பெற்றதாக வரலாறு. 

ஆட்டுத்தலை பொருத்தப்பட்ட தட்சன் "மே மே' என்று எழுப்பிய ஒலியே சிவனைப் போற்றும் ஸ்ரீ ருத்ரத்தின் ஓர் அங்கமாக "சமகம்' என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், சமகம் முதல் முறையாக உச்சரிக்கப்பட்ட ஊர் என்ற பெருமைக்கு உரித்தாகுகிறது தக்கோலம்.

சந்திரன், சூரியன், காமதேனு, இயமன், ரிஷிகள் முதலியோர் இத்தலத்துக்கு வந்து வழிபட்ட சிறப்புடையது.

ஏழு சிவன் கோயில்கள், ஏழு விநாயகர் கோயில்கள்,  ஏழு அம்மன் கோயில்கள், ஒரு பெருமாள் கோயில் என கோயில்கள் நிறைந்த ஊராகத் திகழ்கிறது. அனைத்து சிவன் கோயில்களிலும் சந்நிதி கொண்டுள்ள அம்பிகையின் திருநாமம் "வல்லி' என்ற பெயருடன் முடிவடைகிறது.

இங்குள்ள சிவன் கோயில்களில் பழைமையான சிவாலயம் கங்காதீஸ்வரர் கோயில் ஆகும். இவ் ஊரின் கண் உள்ள பிரசித்தி பெற்ற குருபகவான் பரிகார ஸ்தலமான ஜலநாதீஸ்வரர் கோயில் வடக்கே கொசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

சுமார் 1300 ஆண்டுகள் பழைமையான இந்தக் கற்கோயிலில்  தானாக நீர் ஊற்றெடுத்து  நந்தி வாயில் அந்நீர் பெருக்கெடுத்து சிவனை வழிபடுவது போல சுற்றி வந்து மற்றொரு நந்தி வாய்மூலம் குளக்கரையில் விழுகின்ற அற்புதக் கட்டட அமைப்பு கொண்டது. தடாகத்தில் இருந்து அந்த நீர் ஆற்றுக்குச் செல்வதாக ஐதீகம். இந்த ஊரின் இயற்பெயர் "திருவூறல்' என அமைந்ததற்கு  இக்கோயிலே காரணம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சோழ மன்னர்கள், விஜயநகர அரசர்களின் கோயில் வளர்ச்சியில் பெரும் பங்கேற்றுள்ளனர். சிவனுக்கே உரிய திருநாமங்களில் ஒன்று கங்காதீஸ்வரன். கங்கையை தலையில் தரிப்பவன் என்று பொருள். அந்த பெயருடனே இங்கு குடி கொண்டுள்ளார் ஈசன்.  சதுர வடிவமான ஆவுடையார் மேல் பெரிய பாணலிங்கம். கருவறையைச் சுற்றி நீரூற்று இருப்பதால் "கங்கோத்பத்தி'  என்ற பூஜைக்கேற்றவராகக் கருதப்படுகிறார்.

அம்பாள் மோகனவல்லி என்ற திருநாமம் கொண்டு ஈசனின் வலது புறத்தில் சதுர் புஜ அன்னையாகக் காட்சியளிக்கின்றாள். சிவன் அருள் வேண்டி தவம் செய்து அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் ஒரு வரலாறு உண்டு.

கோயிலின் பின்புறம்  "உமாபதி' என்ற பெயர் கொண்டு ஈஸ்வரனும்,  உமா மகேஸ்வரி என்ற திருநாமத்தில் அம்பிகையும் சந்நிதி கொண்டுள்ளனர்.  இதைத் தவிர விநாயகர், சுப்ரமணியர்,  சண்டிகேஸ்வரர் ஆகியோரும் தனி 
சந்நிதியில் அருள்புரிகின்றனர்.

இந்தக் கோயில் தெற்கு நுழைவு வாயிலுடன், தீர்த்தக் குளத்தை தாண்டி கருவறைக்குச் செல்கின்ற அற்புத அமைப்பை கொண்டிருப்பதால் சிறந்த ஒரு பரிகாரத் தலத்துக்குரிய லட்சணத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. பித்ரு தோஷம், பெருநோய், சாபங்கள் நிவர்த்திகளுக்கு ஒரு சிறந்த பரிகாரத் தலமாகும். 

இறைவன் வலது புறம் அம்பாள் சந்நிதி கொண்டு கல்யாண கோலத்தில் இருப்பதால், திருமண தடைகள் நீங்குவதற்கும் வழிபடலாம் என்கின்றனர்.  திருமணத் தாமதத்துக்கு பித்ரு தோஷமும் ஒரு காரணமல்ல; தேவப்பிரசன்னத் தகவல்களின்படி,  தர்ப்பணங்கள் மூலம் பித்ரு கடன் ஆற்றுவதற்கும், தீபாவளி, கார்த்திகை விசேஷ நாள்களில் தீபங்கள் ஏற்றி வழிபட அபரிமித பலன்கள் பெறலாம் என்றும் அறியப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள நந்தி தீர்த்த சிறப்புமிக்க ஒரே கோயில் என்ற பெயருடனும், வழிபாட்டுச் சிறப்புடனும், விழாக்கோலம் கண்ட இந்தக் கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்து, வழிபாடு குன்றிய நிலையில் தற்போது திருப்பணிகள் நடந்தேறி புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்குப் பின் மகா கும்பாபிஷேக வைபவம் ஆக. 21}இல் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள்,  ஹோமங்கள் ஆக. 18}இல் தொடங்குகின்றன.

அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், காஞ்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் தக்கோலம் உள்ளது.

தொடர்புக்கு -  9944858037,  9176389853.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.