கெடுக்காமல் கொடுப்பவன்!
தன்னை நம்பியவனையும் நம்பாதவனையும் ஒன்றாக பாவித்து அவரவர் விதிப்படி, தாங்கக் கூடிய அளவுக்குப் பாரபட்சமற்ற பலன் தந்து பக்குவப்படுத்தி அருள்பவர்


தன்னை நம்பியவனையும் நம்பாதவனையும் ஒன்றாக பாவித்து அவரவர் விதிப்படி, தாங்கக் கூடிய அளவுக்குப் பாரபட்சமற்ற பலன் தந்து பக்குவப்படுத்தி அருள்பவர் சனிபகவான். இவரிடம் பக்தர்களுக்குப் பயம் அதிகம்.
தேனி மாவட்டத்தில் சுருளி நதி பாயும் பகுதியில் அமைந்திருந்த குலிங்க நாட்டை தினகரன் என்னும் மன்னன் மணிநகரம் என்ற ஊரைத் தலை நகராகக் கொண்டு நியாயமான முறையில் நீதி வழுவாமல் அரசாண்டு வந்தான். அவன் மனைவி பெயர் விந்துருவை. அவர்கள் வம்சம் விளங்க வாரிசு ஒன்று இல்லை என்னும் குறை அவர்களை வாட்டியது.
அவனது ஆட்சி, தானம், தர்மம் ஆகியவை வானுலகையும் எட்டியது. அவனது ஆட்சிச் சிறப்பைப் பார்க்க தேவ அரம்பையர் வந்தனர். அவர்களை கௌரவப்படுத்த அவன் தந்த பரிசுப் பொருள்களை வாங்க மறுத்து, ""குழந்தைகள் இல்லாத வீட்டில் எதையும் ஏற்க மாட்டோம். நீ உன் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு அன்னமிடு, எந்தக் குழந்தையை கண்டதும் உன் மனைவி வளர்க்க நினைக்கின்றாளோ, அந்தக் குழந்தை வந்ததும் உனக்கு வாரிசு வரும்!'' என தெய்வ செய்தி சொல்லி விட்டு சென்றனர். அவனும் அவன் நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் வரவழைத்து விருந்தளித்து, அன்னமிடும் பணியை கைக்கொண்டான்.
அந் நாட்டில் ஓர் அந்தணன் வறிய நிலையில் இருந்தான். அவன் குழந்தையும் அரண்மனை வந்தது. விந்துருவை அந்தக் குழந்தையைத் தொட்டதும் தாய்மைக்குண்டான அறிகுறிகள் அடைந்தாள். அப்போதே, அரசன் அந்தக் குழந்தையை தத்தெடுத்து தன் குழந்தையாகவே சீராட்டி வளர்த்தான். அதன் பலனாக சில ஆண்டுகளில் அரசியும் கருவுற்று ஆண் குழந்தையைப் பெற்றாள். முறையே சந்திரவதனன், சாதகன் எனப் பெயரிட்டு கல்வி கொடுத்து இணைபிரியாமல் ஒன்றாக வளர்த்து அரசி, அரசவை, அறவோர், ஆகியோர் கருத்து அறிந்து. மூத்த மகன் சந்திரவதனனுக்கு நல்ல நாளில் அரசனாக பட்டம் சூட்டினான்.
தம்பி சாதகனின் துணையோடு சந்திரவதனன் நல்லாட்சி செய்து கொண்டு இருக்கும்போது இளவரசு பட்டம் கட்டாமல் தன்னை அரசன் ஆக்கியதன் காரணத்தைக் பலரிடம் கேட்டும் பதில் கிடைக்காத நிலையில் சோதிடர்களைக் கலந்து பேசினான். மன்னன் தினகரன் ராசிக்கு ஏழரை சனி கடுமையாகப் பீடிக்கப் போவதால், தன்னால் நாட்டுக்கு அல்லல் வரும் என்பதனால் பதவி விலகினான் என்பதை அறிந்தான். அவர்கள் ஆலோசனைப்படி பல தான தர்மங்கள், பரிகாரங்கள், பலவகை வழிபாடுகள் செய்து மன்னனின் கவலைகளுக்கு மருந்து அளித்தான்.
இவற்றால் எல்லாம் திருப்தி அடையாமல், சூரிய பகவானின் மகனான சனீஸ்வரனை, ஒரு சனிக்கிழமை, உளுந்து, சர்க்கரை, பால், பழம், தேங்காய், எள் எண்ணெய், பிண்ணாக்கு, சூடம், பூசணிக்காய், சந்தனம், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றைப் படைத்து முறைப்படி மனமொன்றி வழிபட்டான். சனி பகவானும் நேரில் தோன்றி அவன் பக்தியை மெச்சினார். தன் தந்தையை ஏழரை ஆண்டுகள் பீடிக்க இருப்பதைத் தவிர்க்கும் படியாக சனிபகவானைக் கேட்டான் சந்திரவதனன். சனி பகவானோ ""நான் பற்றாதவர் இல்லை! நான் ரகு வம்சத்தில் தோன்றியதால் பெருமாளோடும், ஈஸ்வர பட்டம் உள்ளதால் சிவனோடும், நால் வகை வேதம் சாஸ்திரம் கற்றதால் பிரும்மாவுடனும் தொடர்புடையவன். நான் சுயம்புவாய் கோயில் கொள்ளும் போது இவை உலகுக்குத் தெரியும்.
ஆனாலும், சிவன் பிட்சை எடுத்தது, தன் உடலின் பாதியை உமைக்குக் கொடுத்தது, முருகனை குறவரோடு சேர்த்தது, அரிச்சந்திரன் இடு காட்டில் பிணம் காத்தது, அவன் கையாலேயே அவன் மனைவியை வெட்ட வைத்தது, நளன் மனைவி மக்களைத் துறந்து காட்டில் வாழ்ந்தது. பஞ்ச பாண்டவர் வனவாசம் சென்றது, ராமன் சீதையை பறிகொடுத்தது எல்லாம் என் பீடிப்பால் நிகழ்ந்தது. அவ்வாறு செய்ய வேண்டுவது என் பணி. ஆனாலும் உன் வேண்டுதலை ஏற்று ஏழரை மாதம் மட்டும் உன் தந்தையை பீடிப்பேன் என்றான். ஆனாலும் சந்திரவதனன் விடாமல் தன் தந்தைக்கு பதில் தன்னை பீடித்துக் கொள்ள கேட்டான். சனீஸ்வரனும் ஒப்புக் கொண்டு அடுத்த வாரமே வந்து உன்னை பிடிப்பேன் என்று கூறி மறைந்தான்.
சந்திரவதனனும் இரும்பினால் சனீஸ்வர பிரதிமை ஒன்று செய்து எடுத்துக் கொண்டு பூசைக்கு வேண்டிய அனைத்து பொருள்களுடன் ஒருவரிடமும் கூறாமல் அடர்ந்த காட்டுக்குள் சென்றான். அந்த செண்பக வன சோலைக்குள் சென்று சிலையை நிறுவி தவம் செய்யத் துவங்கினான்.
சாதகன் தன் அண்ணனைக் காணவில்லை என்றுத் தேடிக்கொண்டு காட்டின் மறுபக்கம் எதிர்திசையில் பயணப்பட்டுச் சென்று ஒரு மர நிழலில் களைப்பால் படுத்துத் தூங்கி விட்டான்.
தினகரனுக்கு இருவரையும் காணவில்லை என்ற தகவல் போனது. அரசப் படைகள் அனைத்தையும் அனுப்பித் தேட வைத்தான். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சந்திரவதனனை பிடிக்க வந்த சனீஸ்வரன் செண்பகவனத்தில் தன்னை உருச் செய்து வைத்து பூஜை செய்து கொண்டிருக்கும் செயலைக் கண்டான். அவனது ஈடுபாட்டைக் கண்டு மெச்சி, "சகல உயிர்களின் நலத்திற்காக உன்னை ஏழரை நாழி மட்டும் பற்றுவோம்' என்று கூறிப் பற்றிக் கொண்டார்.
தேடி வந்த காவலர்களில் ஒரு பிரிவினர், சந்திரவதனன் சாதகனை வெட்டி குடலை மாலையாக அணிந்து கொண்டு பூஜை செய்வதாக மாயையாகக் கண்டனர். சினமுற்ற அவர்கள், வாக்கு வாதம் செய்து சண்டைக்குச் சென்றனர். "என்ன ஆனாலும் இன்று மன்னன் அல்லவா?'என்று எண்ணி அரண்மனைக்குச் சென்று தகவல் அளித்தனர்.
அதைக் கேட்டதும், தினகரன் தன் படை பரிவாரங்களுடன் காட்டில் சந்திரவதனன் பூசை செய்து கொண்டிருந்த இடத்திற்குப் புறப்பட்டான். சந்திரவதனனைக் கட்டி இழுத்துச் சென்று தினகரன் முன்பு நிறுத்தினர். அவன் எந்த வினாவுக்கும் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்டு கோபப்பட்ட தினகரன், தச்சன் ஒருவனை அழைத்து அவனைக் கிழிக்கச் சொன்னான். அதற்குள் ஏழரை நாழி கழிந்து விடவே சனி விலகினான். சாதகன் எதிரில் வந்தான். சந்திரவதனன் சுயநினைவு அடைந்தான்.
பூஜையைப் பற்றி அறிந்த தினகரன். வாளால் தன்னைத் தானே குத்திக் கொள்ள முயன்றான். அப்போது சனிபகவான் நேரில் தோன்றி, இவ்வுலக இயக்கம் அனைத்தும் ஒரு சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதைக் கூறினார். ""உன்னை ஏழரை ஆண்டுகள் பிடித்து நிலைகுலைய செய்யவேண்டிய நான், உன் மகன் கேட்டுக் கொண்டதால் ஏழரை மாதமாகக் குறைத்தேன். அப்போது கூட உன் மீதுள்ள பற்றால் தன்னை பிடித்துக் கொள்ளும்படியாக் கேட்டான். அவனைப் பிடிக்க வந்தபோது, என்னைத் துதித்துப் பூஜிப்பதைக் கண்டேன். அதனால் ஏழரை நாழிகை மட்டுமே பிடித்தேன். என்னை முழுமையாக நம்பி சந்திரவதனன் பூசித்து வணங்கிய இந்த இடமே கலியுகத்தில் நான் நிரந்தரமாகக் கோயில் கொள்ள இருக்கும் செண்பக வனம் ஆகும்!'' எனக் கூறி சந்திரவதனனுக்கு மீண்டும் சனீஸ்வரனே பட்டம் சூட்டினான்.
பட்டம் சூட்டிய சில நாட்களில் அனைவரும் செண்பக வனத்திற்குள் நுழைந்தனர். சந்திரவதனன் பூஜை செய்த விடத்தலை மரத்தின் அடியில் சுயம்புவாய், அரூப வடிவாய் ஓர் ஆடி மாத சனிக்கிழமையில் சனீஸ்வரன்
தோன்றினார். அவருக்கு குச்சம் என்னும் புல்லால் சிறிய பந்தலிட்டு வணங்கினர். அவரின் காவற் தெய்வமாக சோனை கருப்பண்ண சாமி விளங்குகிறார். சுரபி நதியின் ராஜ வாய்க்கால் தீர்த்தமாகவும், விடத்தலை மரம் தலவிருட்சமாகவும் விளங்குகின்றன. தொடக்கத்தில் குச்சுப் புற்களைக் கொண்டு பந்தல் அமைந்ததால் இவ்விடம் குச்சனூர் ஆனது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் தேனி நகரிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் குச்சனூர் அமைந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாத சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு திருவிழா எடுக்கின்றனர். குச்சனூரில் சுயம்புவாகத் தோன்றி மக்களுக்கு அருளாசி வழங்கிவரும் சனீஸ்வர பகவானை வணங்கி அனைத்து நற்பலன்களையும் பெறுவோம்.
தொடர்புக்கு: 98941 90768.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...