ஒரு புதிய ஆரம்பம்
கிறிஸ்துமஸ் என்றால் ஒரு புதிய ஆரம்பம் என்றும் வைத்துக் கொள்ளலாம். ஓர் அதிசயக் குழந்தையின் அற்புதமான...


கிறிஸ்துமஸ் என்றால் ஒரு புதிய ஆரம்பம் என்றும் வைத்துக் கொள்ளலாம். ஓர் அதிசயக் குழந்தையின் அற்புதமான பயணத்தின் ஆரம்பம். இந்தப் பயணத்தின் விளைவாகத் தோன்றியது ஒரு புதிய நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் மூலம்தான் உலகக் கிறிஸ்தவர்கள் அனைவரும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த அதிசயக் குழந்தையின் பெயர்தான் இயேசு கிறிஸ்து. இறைவனின் அற்புத சக்தியினால் ஒரு கன்னியிடமிருந்து பிறந்தவர் இந்த இயேசு கிறிஸ்து.
இவரது பிறப்பே ஓர் அதிசயமாக இருந்தது போல, இவரது வாழ்விலும் பலவித அதிசயங்கள் நடந்தன. மக்கள் அனைவரும் வியக்கும்வண்ணம் பல அதிசயங்களைத் தனது குறுகிய வாழ்நாளில் செய்து காட்டினார்.
ஒரு சாதாரண மனிதனாக இந்த உலகுக்கு வந்த இயேசு பல அற்புதங்களை நிகழ்த்தினார். மக்களோடு மக்களாக வாழ்ந்தார். துயரப்படுகின்ற மக்களுக்கு ஆறுதல் தந்தார். நோயினாலும் வேதனையினாலும் துன்பத்தில் வாடிக்கொண்டிருந்த பலருக்கு நல்ல சுகத்தையும் விடுதலையையும் தந்து அவர்களை மகிழ்ச்சியாக வாழ வைத்தார்.
கண் பார்வையற்றோர்களுக்குப் பார்க்கும் சக்தியைக் கொடுத்தார். முடமாக இருந்தவர்களை நடக்க வைத்தார். பெருநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தினார். வெறும் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேர்களுக்கு உணவளித்தார். பாவிகளைத் திருத்தி ஒழுக்கமான குடிமக்களாக வாழ வைத்தார்.
தனது ஆற்றல் மிக்க போதனைகளால் பலரை நல்வழிப்படுத்தினார். சாதி மதம் பாராமல் எல்லோரிடத்தும் அன்பு செலுத்தினார். அன்புதான் வாழ்க்கை என்பதைப் போதித்து, அதன்படி வாழ்ந்து காட்டி, எல்லாருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.
இப்படியாகக் கீழ்த்தட்டு மக்களுக்காகவே தனது வாழ்க்கையின் முக்கிய பகுதிகளைச் செலவழித்த, அன்பின் திருவுருவான இயேசு, முடிவிலும் ஒரு சாதாரண மனிதப் பிறவியாகத்தான் தனது இன்னுயிரை மக்களுக்காகத் தியாகம் செய்தார்.
கிறிஸ்து பிறப்பு பல்வேறு அதிசயங்களைக் கொண்டது. எல்லாவற்றிலும் பல முதன்மைகளைக் கொண்டது. முதல் முதலாக தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலாக ஒரு கன்னிப்பெண் கடவுளின் வார்த்தைகளை அப்படியே ஏற்று நடந்தார். முதல் முதலாக ஒரு கன்னி, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். மூன்று அறிஞர்கள் ஒரு குழந்தையைத் தேடி வெகுதூரம் பயணப்பட்ட அதிசயமும் கிறிஸ்து பிறப்பின்போதுதான் நடந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஓர் அரசர் சாதாரண மாட்டுத் தொழுவத்தில் பிறந்த அதிசயமும் முதன்முதலாகக் கிறிஸ்துவின் பிறப்பின்போதுதான் நிகழ்ந்தது.
ஆண்டின் இறுதியில் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் மக்கள் ஒரு புதிய விடியலைக் கொண்டாடி மகிழ்கின்றனர் என்பதை அடுத்து வரும் புத்தாண்டு நிரூபிக்கின்றது.
ஆண்டு முழுவதும் எவ்வளவோ துன்பங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்த மக்கள் புத்தாண்டிலாவது தமது வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையட்டும் என்று இறைவனை வேண்டி எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அதற்காகவே இயேசு கிறிஸ்துவையும் வரவேற்க காத்திருக்கிறார்கள்.
இப்படித்தான் ஆண்டுதோறும் மீண்டும் மீண்டும் கிறிஸ்துமஸ் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வீடுகளை அலங்கரிக்கிறார்கள். புதிய ஆடைகளை உடுத்திக் கொள்கிறார்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசுகளையும் இனிப்புகளையும் கொடுத்து மகிழ்கின்றார்கள். இப்படிப் பகிர்ந்து வாழ்வதில்தான் கிறிஸ்துவின் போதனைகளை நல்ல முறையில் பின்பற்றி வாழ்கிறோம் என்ற சந்தோஷம் கிடைக்கின்றது.
எனவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள் (தங்கள் தங்கள் குடும்பத்தில் மட்டும்) கொண்டாடி மகிழாமல் நம்மைச் சுற்றி வாழும் ஏழை எளியவர்களுடன் நமது உணவையும் இனிப்புகளையும் எல்லாவற்றுக்கும் மேலாக நமது அன்பையும் பகிர்ந்து வாழ்வதுதான் ஒவ்வொரு கிறிஸ்தவ மக்களின் கடமையாகும். அதைத்தான் அன்பே உருவான இயேசுவும் விரும்புவார்.
மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 25 : 40
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...