சகலகலாவல்லியே!
ஆதி பராசக்தி பிரம்ம ஸ்வரூபினியாக, நாதஸ்வரூபினியாக விளங்குவதால் அவளை மகிழச் செய்வது துதி.


"தூக்கும் பனுவல் துறைத்தோய்ந்த
கல்வியும் சொற் சுவைத்தோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய் வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே
சகல கலா வல்லியே!''
ஆதி பராசக்தி பிரம்ம ஸ்வரூபினியாக, நாதஸ்வரூபினியாக விளங்குவதால் அவளை மகிழச் செய்வது துதி. அன்னை அட்சர வடிவமாகவே இருக்கிறாள் என்று வேதங்கள், தேவி மாகாத்மியம், தேவி பாகவதம், செüந்தர்யலஹரி, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலிய நூல்கள் எடுத்துரைக்கின்றன.
கிருத யுகத்தில் 2000 சுலோகங்களால் துர்வாசரும், திரேதா யுகத்தில் 1500 சுலோகங்களால் பரசுராமரும், துவாபர யுகத்தில் 100 சுலோகங்களால் தெüம்யாசார்யாரும், கலியுகத்தில் 500 சுலோகங்களால் மூகசங்கரரும் அன்னை காமாட்சியைப் பாடியதாக குறிப்புகள் உள்ளன. ஐந்தொழிலையும் அணுவும் மாறாமல் இயக்கிவரும் பேரருள் சக்தி ஸ்ரீசக்ர நாயகி ஸ்ரீலலிதா மகாதிரிபுரசுந்தரி. இவ்வன்னை மகிழ்வது அட்சர வடிவாய் உள்ள ஸ்தோத்திரங்களாலேயேதான்.
சுலோகங்களை வாய்விட்டுப் படிக்கப் படிக்க, அதனால் ஏற்படும் ஒலி அலைகளின் அதிர்வுகளால், படிப்பவரைச் சுற்றியுள்ள தீய சக்திகளும், கவலைகளும், துன்பங்களும் அகன்று, படிப்பவர்க்கு அமைதியும் ஆனந்தமும் தருபவள் ஸ்ரீமகா சரஸ்வதி. அவளுடைய ஒவ்வோர் எழுத்தும் சொல்லும் மந்திரசக்தி வாய்ந்தவை. அதனால்தான் நவராத்திரியின் கடைசி மூன்று நாள்களும் சரஸ்வதியைப் போற்றி வழிபட்டு, புத்தகங்களை வைத்து பூஜித்து வணங்குகிறோம்.
சரஸ்வதி யார்?: சரஸ்வதி தேவியை, கலைமகள், லோகமாதா, இசை மடந்தை, காயத்திரி, சாவித்திரி, ஞானாம்பிகை, தண்டாச்சிறப்பினள், நாமகள், நான்முகன்தேவி, பாரதி, பிராமி, பூரவாகினி, வாக்காள், வெண்தாமரைச் செல்வி, வாணி, வாக்தேவி, ஸ்ரீவித்யா, பனுவலாட்டி, ஞானமூர்த்தி முதலிய பெயர்களால் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. பிரம்மன் தன் உடலில் இருந்து சாதரூபம் சாவித்திரி, சரஸ்வதி, காயத்ரி, பிராமணி ஆகியோரைப் படைத்தான் என்கிறது மச்சபுராணம்.
ராதையின் முகத்திலிருந்து தோன்றி, கங்கையுடன் ஏற்பட்ட சாபம் காரணமாக நதியாக மாறி, பிறகு சாப விமோசனம் அடைந்து பெண்ணாகி, பிரம்மனின் மனைவியானாள் சரஸ்வதி என்கிறது ஸ்ரீதேவி பாகவதம்.
தத்துவமய தேவி: சரஸ்வதி தேவியின் முகம் பிரம்ம வித்தையையும், கைகள் நான்கு வேதங்களையும், கண்கள் எண் எழுத்தையும், இயல் - இலக்கியங்களை மார்பும், திருவடிகள் இதிகாச புராணங்களையும், அவள் கையில் உள்ள(யாழ்) வீணை ஓங்கார ஸ்வரூபத்தையும் விளக்குகின்றன.
மந்திரியான கலைவாணி: தசமகா புராணத்தில் "ராஜ மாதங்கி' என்று குறிப்பிடப்படுபவள் சரஸ்வதி. அன்னை லலிதா திரிபுரசுந்தரிக்கு அங்கமாகவும், அவளுடைய மந்திரியாகவும் இருப்பவள். அதனால், "மந்தின்யை' எனப்படுகிறாள். மதுரை மீனாட்சி "ராஜ மாதங்கி' எனப்படுகிறாள். இவள் தசமகா வித்யைகளில் ஒருத்தி.
சரஸ்வதியின் மூச்சிலிருந்து வேதங்கள் தோன்றின, தொண்டையிலிருந்து "மீமாம்சை'யும், நாக்கிலிருந்து 64 கலைகளும் தோன்றின. தோளிலிருந்து காமக்கலை உருவானது. உறுப்புகளிலிருந்து தந்திர சாஸ்திரங்கள் தோன்றின என பிரம்மாண்ட புராணம் விரித்துரைக்கிறது.
அட்சர சுந்தரி: "அம்பிகையோ வாக் ஸ்வரூபமாக இருப்பவள். சப்தங்கள்தான் 51 அட்சரங்கள். அவற்றுக்கு "மாத்ருகா' எனப் பெயர். இவை ஓருருவம் எடுத்ததே அம்பிகையின் வடிவம். இதுவே சரஸ்வதியின் கையில் இருக்கும் ஸ்படிகமாலையில் உள்ள 51 மணிகளாம்.
கலைமகள் அனைத்துயிர்க்கும் தாயாக விளங்கி, மக்களுக்கு ஞானச் செல்வத்தை வழங்கவே அவதாரம் எடுத்தாள். இவள் ஆண்டில் ஒரு நாள் மட்டும் போற்றப்பட வேண்டியவள் அல்லள். ஆண்டு முழுவதுமே போற்றப்பட வேண்டியவள். தினமும் படிக்கப் படிக்கத்தான், நம்மிடம் உள்ள அறியாமை இருள் அகன்று, ஞான ஒளி பிரகாசிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...