சண்டிகேசுவரர் யார்?
சிவாலயங்களில் கருவறை வலம் வரும்போது, அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் சண்டிகேசுவரர் எழுந்தருளியிருப்பார். சிலர் அவர் முன் கைத்தட்டிச் செல்வார்கள். இது சரியா? யார் இவர்? மூலவர், பரிவா


சிவாலயங்களில் கருவறை வலம் வரும்போது, அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் சண்டிகேசுவரர் எழுந்தருளியிருப்பார். சிலர் அவர் முன் கைத்தட்டிச் செல்வார்கள். இது சரியா? யார் இவர்?
மூலவர், பரிவார தெய்வங்களை வழிபட்ட பின், சண்டிகேசுவரர் சந்நிதியை அடைந்து நம் பெயர், அன்றைய நாள், நமது நட்சத்திரம், திதி, ராசி ஆகியவற்றைக் கூறி சிவனின் அருளைப் பெரும் பொருட்டு வணங்கி விடைபெற வேண்டும்.
அவ்வாறு சொல்லும் போது, ""சேவிக்க வந்தேன் என்று சிவனிடம் கூறவும்; பார்க்க வந்தேன் என்று பார்வதியிடம் கூறவும்; காண வந்தேன் என்று கந்தனிடம் கூறவும், என் பெயர் ..., நட்சத்திரம் ..., நாள் ..., திதி..., ராசி...'' ஆகியவற்றைக் கூறவேண்டும். ஏனென்றால், சண்டிகேசுவரர் எப்போதும் சிவ தியானத்தில் இருப்பதால், நாம் ஆலயத்துக்கு வந்துள்ளதை இவ்வாறு குறிப்பால் உணர்த்த வேண்டும் என்பர்.
சந்நிதியில் கைத்தட்டலாமா?
சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. "சிவன் சொத்து குலநாசம்' என்பர். அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர்.
அவர் சிவ தியானத்தில் இருப்பதால், நம் வருகையை மும்முறை கைத்தட்டித் தெரிவித்து வணங்க வேண்டும் என்பர் சிலர். ஆனால் உண்மையில், சிவபூஜைக்கு இடையூறு விளைவித்த தன் தந்தையின் கால்களையே வெட்டியவர் அவர். அதனால், அவரது சிவ தியானம் கலையும்படி கைத்தட்டி இடையூறு செய்வது பாவம் என்பர் பெரியோர்.
பஞ்ச மூர்த்திகளுள் ஒருவரான இவர், சிவபக்தர்களில் சிறந்த பக்தர்.
நான்கு உலகங்களிலும் சண்டிகேசுவரர்!
கிருதயுகத்தில் "பிரசண்டர்' எனவும், திரேதாயுகத்தில் "விக்ராந்த சண்டிகேசுவரர்' என்றும், துவாபரயுகத்தில் "விஷ சண்டிகேசுவரர்' என்றும், கலியுகத்தில் "வீரசண்டிகேசுவரர்' என்றும் நான்கு யுகங்களிலும் நான்கு விதமாக அழைக்கப்படுபவர்.
மண்ணையாற்றின் தென்கரையில் சேய்ஞலூர் என்னும் சிற்றூரில் எச்சதத்தன்-பவித்திரையின் புதல்வராகப் பிறந்தவர் விசாரசருமர்.
மண்ணையாற்றங் கரையில் பசுக்கள் மேய்ப்பதை விடுத்து, மணலால் சிவலிங்கம் அமைத்து, பசுக்கள் சொரிந்த பாலை லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தார் விசாரசருமர். இதையறிந்த அவரின் தந்தை, அவரை கோலால் அடித்தார். ஆனால் அவர் தொடர்ந்து சிவபூஜையில் ஈடுபட்டார். இதனால் கோபம் அதிகமாகி, அபிஷேகப் பால் குடத்தை எட்டி உதைத்து சிவலிங்கத்தை சிதைத்தார் அவர் தந்தை. சிவ பக்தியால், கீழே கிடந்த கோலை எடுத்தார். அது மழுவாக மாறியது. அதைக் கொண்டு தந்தையின் இரு கால்களையும் வெட்டினார் விசாரசருமர்.
அப்போது இறைவன் காட்சி தந்து, ""இனி நாமே உமக்கு தந்தையாவோம்.'' என்று கூறி, தம் திருத்தொண்டர்களுக்கு அவரைத் தலைவராக்கி, தன் சிரசின் மீதிருந்த கொன்றை மாலையை அவருக்குச் சூட்டி "சண்டேசுரபரம்' தந்தருளினார். சிவனருளால், விசாரசருமர் "சண்டேசுவரர்' ஆனார்.
சண்டிகேசுவரர் சந்நிதிக்குச் சென்று கைத்தட்டாமலும், விரல்களால் சொடுக்கு போடாமலும், அமைதியாக நின்று வணங்கினால், சிவபெருமானை நாம் வணங்கிச் சென்றதை, அவர் கணக்கு வைத்துக்கொண்டு, சிவபெருமானிடத்தில் நம் பிரார்த்தனைகளை சேர்ப்பிப்பார் என்பது வழிவழி நம்பிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...