/

தன்னம்பிக்கை பக்தி!

எங்கும் வறட்சி. வெயிலில் வாடி வதங்கிய மக்கள் மழை வேண்டி பிரார்த்தனை செய்வதற்காக ஓரிடத்தில் கூடியிருந்தார்களாம். பிரார்த்தனை செய்வதற்கு ஒரு சிறுவனும் வந்தானாம், கையில் ஒரு குடையுடன். ஒருவர் கேட்டாராம்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:31 pm

அ.கு. பார்வதி

எங்கும் வறட்சி. வெயிலில் வாடி வதங்கிய மக்கள் மழை வேண்டி பிரார்த்தனை செய்வதற்காக ஓரிடத்தில் கூடியிருந்தார்களாம். பிரார்த்தனை செய்வதற்கு ஒரு சிறுவனும் வந்தானாம், கையில் ஒரு குடையுடன். ஒருவர் கேட்டாராம்... "ஏனப்பா வெயில் இப்படி மண்டையைப் பிளக்கிறது, இப்போது எதற்கு உனக்குக் குடை?' என்று. அவன் சொன்னானாம்... ""நாம் பிரார்த்தனை செய்த பிறகு அதைக் கடவுள் செவிமடுத்து, மழை பெய்யும் அல்லவா. அப்போது நான் நனையாமல் வீட்டுக்குச் செல்ல குடை வேண்டுமே'' என்றானாம்.

பிரார்த்தனையின் மீதான நம்பிக்கையை சிறுவன் ஒருவன் வெளிப்படுத்தியதைப் பலரும் இப்படிச் சொல்வார்கள். அதுபோல் ஒரு சம்பவம் கட்டபொம்மனின் வாழ்விலும் நடந்துள்ளதாக நாட்டுப் புறப்பாடல்கள் கூறுகின்றன.

கட்டபொம்மன் செந்தூர் செந்திலாண்டவர் மீது மாறாத பக்தி கொண்டிருந்தான். கோயிலில் உச்சிக்கால பூசை முடிந்ததை தொடர்ச்சியாகக் கட்டப்பட்டிருந்த மணிகளின் ஒலி மூலம் கேட்ட பிறகுதான் உணவு உண்பானாம். அத்தகைய கட்டபொம்மனின் பக்திச் சிறப்பை தன் அடியார் ஒருவரின் மூலம் செந்திலாண்டவர் வெளிப்படுத்தினாராம். செந்திலாண்டவர் சந்நிதியில் இருகண் பார்வை இழந்த கந்தசாமிப் புலவர் தோத்திரப் பாடல்களைப் பாடித் துதித்துவந்தார். அவரது பக்தி சிரத்தையில் மனமிரங்கிய முருகப் பெருமான், அப்புலவருக்கு ஒரு கண் பார்வை அளித்தருளினார். மறுகண் பார்வை குறித்துத் துதித்தபோது, கட்டபொம்மன் வாயிலாகப் பெறுவாய் என்று கனவில் சொன்னாராம்.

இந்தச் செய்தி கட்டபொம்மனை எட்டியது. புலவர் முன் சென்றான் கட்டபொம்மன். ஒரு கையில் உடைவாளுடனும், மறுகையில் பூஜையறையில் வைத்திருந்த கெண்டி தீர்த்தத்துடனும்... செந்திலாண்டவர் பெயர் சொல்லி, கெண்டியில் இருந்து தீர்த்தம் எடுத்துத் தெளித்தவுடன் புலவருக்கு மறுகண்ணிலும் பார்வை வந்துவிட்டது. இப்போது கட்டபொம்மனிடம் கேட்டார் புலவர்... ""நீங்கள் எதற்காக உடைவாளையும் ஏந்தி

வந்தீர்கள்?''. அதற்கு கட்டபொம்மன் சொன்னான்... ""உங்களுக்கு பார்வை வராவிட்டால், என் பூஜையில் களங்கம் இருக்கலாமோ என்று கருதி, என்னை மாய்த்துக் கொள்ளவே உடைவாள் எடுத்து வந்தேன்''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.