

பெரும் புலவர் ஒருவர் தன்னந்தனியே நடந்து செல்கிறார். ஆள் அரவமில்லை, வழித்துணையில்லை. பொழுது புலரும் முன்னரே புறப்பட்டார், போய்ச் சேர வேண்டிய தொலைவு கருதி. இருப்பினும், நண்பகல் எட்டியாயிற்று. பாதி வழிக் கடந்தபாடில்லை. நடையை எட்டிப் போடுகிறார். ஆனாலும், உச்சி வெயிலின் கடுமை கருதி, ஓய்வெடுக்க எண்ணுகிறார். ஓங்கி உயர்ந்த - அகண்டு விரிந்த மரத்தின் கீழ் இளைப்பாற அமர்கிறார்.
அந்த மரமோ, ஒரு சிற்றாறின் கரையை ஒட்டியுள்ளது. அதன் வேர்கள்கூட, கரை மீறி, ஆற்றுக்குள் இறங்கி நீர் பருகுவது போலத் தோற்றமளிக்கிறது. இயற்கையில் அந்த மரமும் சிற்றாறும் ஒன்றினோடொன்று இயைந்து நிற்பதனைக் கண்டு மகிழ்வெய்தி, சற்றே இளைப்பாறி மீண்டும் பயணத்தைத் தொடர்கிறார் புலவர். திங்களொன்று போயிருக்குமோ என்னவோ?
மீண்டும் அதே வழியில் திரும்பி வருகிறார். என்னே வியப்பு! சற்றொப்ப அதே உச்சி வெயில் பொழுது. அதே மரத்தின் நிழலிலே அமர்கின்றார். இப்போது, அவர் காணும் காட்சியில் மட்டும் ஒரு பெருத்த வேறுபாடு. மரத்தின் அருகிலிருக்கும் சிற்றாறு நீர்ப்பெருக்கின்றி, வறண்டு கிடக்கிறது. மரத்தின் நிழல், அந்தச் சிற்றாறின் பெரும் பகுதிக்குக் குடை பிடித்ததுபோல் உள்ளது. அதனினும் அழகு, அம்மரத்தின் சில இலைகளும், ஏராளமான மெல்லிய மலர்களும் அந்தச் சிற்றாறின் மணலில் விரவிக் கிடக்கின்றன. தனக்குள் மெல்லிய புன்னகைப் பூக்கிறார் புலவர். காரணம், அவர் மனத்தில் நிழலாடிய வேறொரு நினைவுதான்.
செல்வந்தர் ஒருவர் அறவழியில் பொருளீட்டுகிறார். தனக்கென மட்டும் கொள்ளாது, தன்னைச் சார்ந்த வறியவர்க்கெல்லாம் வாரி வழங்குகின்றார். அவரது வள்ளன்மையினால் பலனடைந்தோர் ஏராளம். ஆனாலும், அவர் ஈட்டிய செல்வமெல்லாம் குறைந்தது. ஆயினும், ஏழ்மையிலும் அவரது பெருங்குணம் குறைவின்றி மிளிர்ந்தது.
ஒரு நாள், அவரது பேருதவியாலும், வழிகாட்டுதலாலும் வாணிகம் செய்து பொருளீட்டிய இளைஞன் ஒருவன் அவர் இல்லம் வந்தான். தான் கொண்டு வந்திருந்த ஒரு சிறு மூட்டையை அவர் முன் வைத்தான். பிரித்த மூட்டையில் பொன்னும் மணியும் மின்னின.
"என்ன இது?' என்று கேட்டவருக்கு, "ஐயா, என்னால் இயன்றது. நீங்கள் பேருள்ளம் கொண்டு இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றான். அவர் "வேண்டாம்' என மறுத்தும், இளைஞன் விடுவதாயில்லை. வற்புறுத்தி ஏற்க வைத்தான். அவனது பெருங்குணம் கண்டு, "பேருள்ளம் கொண்ட நல்லவன் ஒருவனுக்கே நாம் உதவியுள்ளோம்' என்று மகிழ்ந்தார். தான் அறிந்த இக்காட்சி, புலவர் மனத்திரையில் ஓடியது.
முன்னர் தமக்கு உதவிய ஒருவர் வறிய நிலை எய்தும்போது, விரைந்து சென்று உதவும் அவனது நற்குணம் எண்ணிப் புலவரும் பூரிக்கிறார். இந்த மரமும் அப்படித்தானே? பல்லுயிரும் பலன்பெற, பயிர் செழிக்க, கைம்மாறு கருதாது நீர்ப் பெருக்கெடுத்து ஓடிய ஆறு, அவ்வாற்று நீரை உறிஞ்சி வளர்ந்த மரம். இப்போது ஆறு வறண்டு நிற்கும்போது, தனது வேர் அருந்திய நீருக்குக் கைம்மாறாக, இனிய நறுமணம் பரப்பும் நன்மலர்களை சிற்றாறின் மணல் மீது அழகுபெறப் பரப்புகின்றதே!
"வறிய நிலையை எய்திய செல்வந்தருக்குக் கைம்மாறு செய்த பேருள்ளம் கொண்ட இளைஞனைப் போல, மரம் அந்த ஆற்றுக்குக் கைம்மாறு செய்கிறதோ' என்று எண்ணினார். இக்காட்சி தந்த தாக்கத்தில், இயற்கையையும் வாழ்க்கையையும் இணைத்து தனது பாடல் வரிகளில் பாலைபாடிய பெருங்கடுங்கோ எனும் புலவர் பொருத்தமுற வைக்கிறார். இருபத்தி நான்கு வரிகளை உடைய நீண்டதொரு பாடலில் உள்ள சிறப்பான சில வரிகள் மட்டும்.
மன்உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று,
பல்நீரால் பாய்புனல் பரந்துஊட்டி, இறந்தபின்,
சில்நீரால் அறல்வார அகல்யாறு கவின்பெற,
முன்ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின்ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர் போல்,
பல்மலர் சினைஉகச் சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப,
இன்அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்
(கலித்.பா. 34)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

