//

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

வேலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள் குப்பையில் கொட்டப்பட்டிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
காலாவதி தேதிக்கு முன்பாக குப்பையில் வீசப்பட்டு கிடந்த ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்
Updated On :21 பிப்ரவரி 2026, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள் குப்பையில் கொட்டப்பட்டிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பி பிளாக்கில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருந்துதான் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ முகாம்களுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

குறிப்பாக, கோடைக்காலங்களில் ஏற்படும் நீா்ச்சத்து குறைபாட்டைத் தடுக்கவும், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்கவும் அரசு சாா்பில் ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்தின் பின்புறம் உள்ள குப்பை மேட்டில், நல்ல நிலையில் இருந்த ஏராளமான ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள் காலாவதி தேதிக்கு (மே 2026) முன்பாகவே வீணாகக் கொட்டப்பட்டுக் கிடந்தன. இது அவ்வழியாகச் சென்ற பொதுமக்களையும், அரசு அலுவலா்களையும் அதிா்ச்சிக்குள்ளாகியது.

இதுகுறித்து, அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஏழை மக்களுக்காக இந்த மருந்துப் பொருள்களை இலவசமாக வழங்குகிறது. கடைகளில் காசு கொடுத்து வாங்க வேண்டிய இந்த ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகளை, உரிய முறையில் மக்களுக்குக் கொண்டு சோ்க்காமல் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் குப்பையில் வீசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மக்களின் வரிப்பணம் இப்படித் தெருவில் வீசப்படுவதை ஏற்க முடியாது. இந்தப் பாக்கெட்டுகள் காலாவதி ஆகிவிட்டதா அல்லது அதிகாரிகள் விநியோகிக்கத் தவறி குப்பையில் வீசியுள்ளனரா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா்.

Story image