திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு அவர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு, அவரைப் போற்றிப் பாராட்டுவது வைணவர் இயல்பு. அதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், பெüத்தம், சமணம் ஆகிய இரு மதங்கள் பெரிதும் கொண்டாடப் பெற்ற காலச் சூழலில், இளங்கோவடிகள் (சமணத் துறவி) சிலப்பதிகாரத்தில் திருமாலியக் கோட்பாடுகளையும், திருமாலின் பெருமைகளையும் பெரிதும் பாராட்டியுள்ளதுதான் வியப்பு!
30 காதைகளைக் கொண்ட சிலப்பதிகாரத்தில் 12 காதைகளில் இதிகாச புராணங்கள், பாகவதக் கதைகள் ஆகியவற்றை உள்ளடக்கி, திருமாலின் பெருமைகளை இளங்கோ வானளாவப் புகழ்ந்திருக்கிறார். புகார், மதுரை, வஞ்சி ஆகிய மூன்று காண்டங்களிலுமே திருமால் பற்றிய புராண, இதிகாச உண்மைகள் பல பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சில:
புகார்க்காண்டம் அரங்கேற்று காதையில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைப் பற்றி விளக்குகையில், நான்கு வகையான "திருமால் ஆடல்களைப்' பற்றிக் குறிக்கிறார். அவை: மாயவன் ஆடும் அல்லிக்கூத்து, குன்று எடுத்தோன் ஆடும் குடக்கூத்து, நெடியோன் ஆடும் மல்லாடல், திருமாலின் வல மார்பினில் உறைகின்ற திருமகள் ஆடிய பாவைக் கூத்து. இவற்றை கடலாடு காதையில், விரிவாக எழுதுகிறார்.
"மல்லன் மூதூர் மகிழ்விழாக் காண்போன் மாயோன் பாணியும்' (வரி-35 ) "கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் அல்லியத் தொகுதியும்' (46-49), "வாணன் பேர்ஊர் மறுகிடை நடந்து, நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும்' (54-55). மேலும், திருமகள் அவுணர்களைப் போரில் வென்று ஆடிய பாவைக் கூத்தினையும் மாதவி ஆடியதாக இளங்கோ குறிக்கிறார்.
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை: புகார் நகரில் அமைந்திருந்த பல்வேறு தெய்வீகக் கோயில்களை வரிசைப்படுத்தும் ஆசிரியர், "நீலமேனி நெடியோன் கோயிலும்' (வரி-172) என்று பெருமாள் கோயிலைச் சுட்டுகிறார். திருமால் எடுத்த அவதாரங்களுள், வாமனனாக வந்து, திரிவிக்ரமனாக விஸ்வரூபம் எடுத்த திருமாலின் மாயச் செயல்களை பல இடங்களில் குறிப்பிடுகிறார்.
வேனிற்காதையின் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிக்கும் இளங்கோவடிகள், "நெடியோன் குன்றமும் தொடியோள் பெüவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல் நாட்டு' (வரி 1-2) என்று வடவேங்கடமலையை (திருமலை - திருப்பதி) "நெடியோன் குன்றம்' என்று வாமன - திரிவிக்கிரம அவதாரத்தை உள்ளடக்கியே வருணிக்கிறார்.
நாடுகாண் காதையில், ""ஆற்றுவீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி குரங்கமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து வானவர் உறையும் பூநாறு ஒரு சிறை' (வரி 156-158) என்று "மலர்களால் மூடப்பெற்ற காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து இடையில் உள்ள அரங்கம்' என்று திருவரங்கத்தினை விவரிக்கிறார்.
"வளைந்த மூங்கில் முள்ளால் சூழ்ந்த மரங்கள் செறிந்த சோலைகள் நிறைந்த திருவரங்கம்' என்று வருணிக்குமிடத்து, இன்றைய திருவரங்கத்தினை விஞ்சக்கூடிய அளவில் இருந்த சூழலை நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறார்.
மதுரைக் காண்டம்: புறஞ்சேரி இறுத்த காதையில் கோவலன் பிரிவால் பூம்புகார் நகரமே களையிழந்துவிட்டது என்று குறிக்கும்போது, "அருந்திறல் பிரிந்த அயோத்தி போல பெரும் பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும்' (65-66) என்று இராமாயணக் கதைக் குறிப்பை இணைத்துள்ள பாங்கு மிகவும் சிறப்பு.
ஊர்காண் காதையில், கூடல் மாநகரில் அமைந்துள்ள கோயில்களைக் கூறுமிடத்து, "உவணச் சேவல் உயர்ந்தோன் நியமமும் மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும்' (8-9) என்று கருடச் சேவலை கொடியாக உயர்த்திய பெருமாள் கோயில்; வெற்றி தரும் கலப்பையினைப் படையாக உயர்த்திய பலராமனின் கோயில் என்று திருமாலின் இரண்டு அவதாரப் புருஷர்களையும் ஒருசேர நினைவுகூர்கிறார்.
கோவலன், கண்ணகி இருவரிடமும் ஆறுதலாக வார்த்தையாடும் (46-50) கவுந்தியடிகளின் மூலம், இராமபிரானின் வாழ்க்கைக் குறிப்பைச் சுட்டுவதோடு, பிரமனை தன் நாபிக் கமலத்தில் வைத்திருக்கும் திருமால் என்கிற திருமாலியக் கோட்பாட்டினையும் ஏற்றுக் கொண்டவராக இளங்கோவடிகளைக் காணமுடிகிறது.
ஆய்ச்சியர் குரவையில் "வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி - கடல் வண்ணன்' (முன்னிலைப்பரவல்) எனும் பாடல் அடிகளில் கூர்மபுராணம், பாகவதக் கதைகள், விஷ்ணுபுராணம், திருமாலியக் கோட்பாடுகள், திருமாலின் பல்வேறு அவதாரங்கள் இடம்பெற்றுள்ளன.
வஞ்சிக்காண்டம்: காட்சிக் காதையில், திருமாலின் மார்பில் நீண்டு தொங்குகின்ற மாலை போல பேரியாறு ஓடியது (17-22) என்கிறார். இவ்வாறு, சிலப்பதிகாரத்தில் ஏராளமான இடங்களில், சமணத் துறவியான இளங்கோவடிகள் வைணவர்களின் திருமாலியக் கோட்பாட்டைப் போற்றியிருப்பது வியப்பினும் வியப்பன்றோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


