தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உண்டக்கட்டி

வீட்டு வேலைகள் எதையும் செய்யாமல் வேளாவேளைக்குத் திண்றுவிட்டு வீட்டில் சும்மா இருக்கும் பிள்ளைகளைப் பார்த்து கோபப்படும் பெற்றோர், "உண்டக்கட்டி' என்று வசைபாடுவார்கள். ஏன் அப்படி வசைபாடுகிறார்கள்?

News image
Updated On :20 டிசம்பர் 2014, 8:31 pm

வீட்டு வேலைகள் எதையும் செய்யாமல் வேளாவேளைக்குத் திண்றுவிட்டு வீட்டில் சும்மா இருக்கும் பிள்ளைகளைப் பார்த்து கோபப்படும் பெற்றோர், "உண்டக்கட்டி' என்று வசைபாடுவார்கள். ஏன் அப்படி வசைபாடுகிறார்கள்?

"கோயில்களில் விழாக் காலங்களில் வழங்கப்படும் "பிரசாத உருண்டை' என்று இதற்குச் சிலர் கருத்துத் தெரிவிப்பர். ஆனால் இது பொருத்தமற்றது. மன்னராட்சி காலத்தில் அரண்மனையில் உணவருந்தும் கூடத்தில் சாப்பிடுவதற்காக மட்டுமே இரு ஆடவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பர். சமைக்கப்பட்ட உணவு வகைகள் அரசனுக்குப் பறிமாறப்படுவதற்கு முன்பு, அவ்விருவருக்கும் பரிமாறப்படும். அவ்வுணவை அவர்கள் உண்பர். அவ்வாறு உண்பவர்கள்தான் "உண்டு காட்டிகள்' அதாவது "உணவை உண்டு காட்டுபவர்கள்' .

அரசனுக்கான உணவில் பகைவர் எவரேனும் விஷம் கலக்க வாய்ப்புண்டு என்பதால், அதைச் சோதிப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த "உண்டு காட்டிகளுக்கு' அரண்மனையில் "சாப்பிட்டுக் காட்டுவது' மட்டுமே வேலை. அதனால்தான் வேலையின்றி, வேளா வேளைக்கு சாப்பிட்டுச் சுற்றித்திரிவோரை "உண்டக்கட்டி' (உண்டு காட்டி) என்று வசைபாடினர்.

இதற்கான குறிப்பினை மாயூரம் வேதநாயகம்பிள்ளை, தான் எழுதிய தமிழின் முதல் புதினமான "பிரதாப முதலியார் சரித்திர'த்தில் தந்துள்ளார்.

இப்புதினத்தின் கதாநாயகி "ஞானாம்பாள்' சில காரணங்களுக்காக ஆண் வேடம் தரித்துக்கொண்டு "விக்கிரமபுரி' என்ற நாட்டில் உலவுகிறாள். அப்போது பட்டத்து யானையால் கழுத்தில் மாலையிடப்பட்டு, அந்நாட்டு அரசனாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். "உண்டு காட்டிகள்' குறித்து வேதநாயகம் பிள்ளை, ஞானாம்பாள் கூற்றில் (அதிகாரம்-37) வைத்து இதைப் பதிவு செய்யுள்ளார்.

""ஸ்நாநம், ஜபம் முதலிய நித்திய கர்மானுஷ்டானங்கள் முடிந்த பிற்பாடு, நான் அமுது செய்வதற்காகப் போஜன சாலைக்குள் நுழைந்தேன். அங்கே எனக்கு அமுது படைக்கிறதற்கு முன் இரண்டு பெயருக்கு இலையில் அமுது படைக்கப்பட்டு, அவர்கள் எனக்கு முந்திப் புசிக்க ஆரம்பித்தார்கள். நான் ஆச்சரியம் அடைந்து, "அவர்கள் யாரென்று' வினவினேன். உடனே மடைப்பள்ளி விசாரணைக் கர்த்தர்கள் என்னை நோக்கி, ""மண்டலாதிபதியே! அந்த இருவருக்கும் "உண்டு காட்டிகள்' என்று பெயர். அவர்களை விஷ பரீஷகர்களென்று சொல்லாம். மகாராஜாவினுடைய உணவில் யாராவது விஷங்கலக்கக் கூடுமாகையால் அதைப் பரீஷிப்பதற்காக அந்த இருவருக்கும் சாதம் படைப்பதும் அவர்கள் முந்திப்

புசிப்பதும் வழக்கம். அவர்கள் போஜனம் செய்து இரண்டு நாழிகைக்குப் பிறகு அவர்களுக்கு விஷ உபத்திரவம் இல்லையென்று தெரிந்த பிறகு மகாராஜா சாப்பிட வேண்டும்'' என்றார்கள்.

எனக்குத் தாளக் கூடாத பசியாயிருந்தாலும் விஷசோதனை செய்வதற்காக நான் வெகு நேரம் வரையில் அன்னத்தைத் தொடாமல் உட்கார்ந்திருந்தேன். பிறகு வாழை இலைபோலத் தங்கத்தினால் செய்யப்பட்ட இலையில் அன்னமும் பலவகையான அறுசுவைப் பதார்த்தங்களும் படைக்கப்பட்டன. நான் போஜனஞ் செய்வதற்காக இலைக்கு முன்பாக உட்கார்ந்தேன்'' என்று எழுதித் தனது புதினத்தைத் தொடர்கிறார் வேதநாயகம் பிள்ளை. இப்படிக் கூறப்பட்ட "உண்டு காட்டி' என்பதே பின்பு "உண்டக்கட்டி' என்றானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.