இறைவண்ணம் எவ்வண்ணம்...?
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக் கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ? மைவண்ணத் தரக்கிப் போரில் மழைவண்ணத் தண்ணலே - உன் கைவண்ணம் அங்கு கண்டேன்; கால்வண்ணம் இங்கு கண்டேன் என


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ?
மைவண்ணத் தரக்கிப் போரில் மழைவண்ணத் தண்ணலே - உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்; கால்வண்ணம் இங்கு கண்டேன்''
என்ற இந்தப் பாடலைப் படித்த உடனேயே பாமரருக்கும் கவிஞர் கண்ணதாசன்தான் நினைவுக்கு வருவார். ஆனால், கண்ணதாசனின் "பால்வண்ணம் பருவம் கண்டு' என்ற பாடலின் மூலம் எது தெரியுமா? கவிச்சக்ரவர்த்தி கம்பரின் கவிநயத்தில் மிளிர்ந்த மேற்குறிப்பிட்ட கம்பராமாயணப் பாடல்தான்!
ராமனின் குலகுருவான விசுவாமித்திரர் இப்பாடலில், ராமனின் பெருமையைக் கூறுகிறார். "முன்பு நீ தாடகையை வதம் செய்தபோது உன் வில்லாற்றலை அங்கு கண்டேன் (கைவண்ணம்), அப்போது, உன்னை மானுடப் பிறவியாய் கருதினேன், ஆனால், கல்லைப் பெண்ணாக்கி, அகலிகையின் சாபம் தீர்த்தபோது உன் திருவடி (கால் வண்ணம்) பெருமையை இங்கு கண்டேன் - உன் திருவடிகளைக் கண்டபிறகுதான் நீ மானுடப் பிறப்பல்ல, மகாவிஷ்ணு அவதாரம் என்பதைக் கண்டுகொண்டேன்' என்கிறார்.
ராமனைக் குறிப்பிடும்போது "முகில்' வண்ணம் என்றும், தாடகையைக் குறிப்பிடும்போது, "மை' வண்ணம் என்றும் குறிப்பிடுகிறார். மை என்பது கருமை. அக்கருமை, அறியாமை என்ற ஆணவம் என்று சைவசித்தாந்தம் கூறும். ஆனால், தன்னலமில்லாது கேட்காமலேயே வழங்கக்கூடிய கருமுகில் (மழை மேகம்) வண்ணமாய் ராமன் இருந்ததால், அவனை மழை வண்ணன் என்றார்.
கம்பனின் முடிமணியாகத் திகழும் இப்பாடல்வழி கம்பரின் இலக்கியச் சுவையைப் பருகுவதற்கு முன்னர், அதை இலக்கணத்தோடு பொருத்திப் பார்ப்பது மேலும் சுவை கூட்டும்.
வண்ணம் பற்றி தொல்காப்பியர், பொருளியல் நூற்பா 7-இல் விளக்குகிறார். மேலும், வண்ணத்தை 20-ஆக வகைப்படுத்துகிறார்.
""வண்ணம் பசந்து புலம்புறு காலை,
உணர்ந்த போல, உறுப்பினைக் கிளவி
புணர்ந்த வகையான் புணர்க்கவும் பெறுமே''
தலைவி, தன் உடம்பின் நிறம் வேறுபட்டு வருத்தம் அடையும் காலத்தில், தலைவன் பிரிவைத் தன் உறுப்புகள் அறிந்ததுபோல, பொருந்தும் வகையால் பாலின்கண் நிகழும் ஓசை விகற்பமாகிய சந்த வேறுபாடு "வண்ணம்' எனப்படும் என்பது இந்த நூற்பாவின் கருத்து.
வண்ணம்-வர்ணம் என்பது நிறத்தைக் குறிக்கும். ஆனால், இலக்கண விதிப்படி, பெயரெச்சத்தின் பின் "முறையில்' என்ற பொருளில் பயன்படுத்தப்படும் ஓர் இடைச்சொல். எடுத்துக்காட்டாக, "இந்தக் கட்டுரை முன் மாதிரியாகக் கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது', அவரவர் தங்கள் அனுபவங்களுக்கு ஏற்ற வண்ணம் நடந்துகொள்கிறார்கள்', "அவர் பிறருக்குத் தெரியாத வண்ணம் அந்தச் செயலைச் செய்துவிட்டார்', "வாழ்த்துத் தந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன', "கோடை காலத்தில் தண்ணீர் குடித்த வண்ணம் இருக்கிறோம்' என்பது போல பயன்படுத்தப்படும். இறந்தகால பெயரெச்சத்தின் பின் குறிப்பிட்ட செயல் தொடர்ந்து நிகழ்வதை அல்லது நிலையின் மிகுதியைக் காட்டவும் பயன்படுத்தப்படும் ஓர் இடைச்சொல்.
ஆனால், இறையருள் பெற்ற அருளாளர்கள், இறைவனைத் தங்கள் அனுபவத்தால் கண்டதையும், இறைவனின் திருமேனி அழகையும், அவனது பெருமைகளையும் புகழ்ந்துரைக்கும் இடங்களில் எல்லாம் "வண்ணம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இறைவனைக் கண்டேன் என்று அவர்கள் கூறினாலும், இறைவன் "ஒருநாமம், ஓருருவம் இல்லாதவனுக்கு ஆயிரம் திருநாமங்கள் பாடி' என மணிவாசகப்பெருமான் குறிப்பிட்டுள்ளார்.
இறைவன், ஆன்மாக்கள் மீது வைத்த பெருங்கருணையினால் உருவம் கொள்ளும்போது பல நிறங்களைத் தாங்கி நின்பவனாயினும், குருமூர்த்தியாக எழுந்தருளியபோது மணிவாசகப் (பெருமானுக்கு) பெருமான் கண்டது அவனது சிறந்த திருமேனி என்பதால், ""செம்பவள வெற்பின் சேசுடையாய்'' என்றார். பவளவெற்பு இயற்கையான செந்நிறம் தவிர தேசாகிய ஒளியில்லை என்பதை விளக்க செம்பவள வெற்பினும் மிக்க ஒளியுடையாய் என்றார்.
அப்பரடிகளும், ""செம்பவளத் திருவுருவர் திகழ் சோதிக் குழைக்காதர்'' என்றருளிச் செய்துள்ளார்.
இறையருளால் அன்றி வேறு எந்த விதத்திலும் இறைவனை அறிய இயலாது. மாலொரு பாகமும், மாதொரு பாகமும் உடைய அப் பரமன், அருளே வடிவமாகக் கொண்டவன். ஆகவே, அவன் திருவருளையே கண்ணாகப் பெற்று அவனை அறிய முடியுமே அல்லாமல், அவன் இப்படி இருப்பான்; இன்ன நிறத்தில் இருப்பான்; இந்த வண்ணமாய் இருப்பான் என்று கூறி, இவன்தான்-இவைதான் இறைவன் என்று சொல் ஓவியமாகவோ, எழுத்தோவியமாகவோ எழுதிக்காட்ட இயலாது என்பதையும், இறைவனது சொரூப நிலையை அவனருளின் துணையின்றி எவராலும் அறிய முடியாது என்பதையும் அப்பரடிகள் கீழ்வரும் பாடலின் மூலம் தெள்ளத் தெளிவாக்கியுள்ளார்.
""மைப்பயந்த கண்ணாரும் தானும், கச்சி
மயானத்தான், வார்சடையான் என்னில் அல்லால்
ஒப்புடையான் அல்லன்; ஒருவன் ஓர் ஊரான் அல்லன்;
ஓர் உவமன் இல்லி;
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்,
இப்படியன், இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒணாதே'' (6-97-10)
சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய பொன்வண்ணத்து அந்தாதி முதல் பாடலிலேயே, இறைவனின் வண்ணம் பற்றி இலக்கிய நயத்தோடுபாடி விளக்கியுள்ளார்.
""பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக் கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசனுக்கே'' (1)
இவ்வாறு, இறைவனின் திருமேனி அழகால் கவரப்பட்டுப் பாடியவர், இறைவனின் திருமேனியின் ஒவ்வொரு உறுப்பும் எது எதனை ஒத்திருந்தது என்பதையும் 25-ஆம் பாடலில் விளக்கியுள்ளார்.
இறைவனின் மேனி அழகில் ஈடுபடும் நிலை, அடியவர்கள் உள்ளத்தில் பெண்மையைத் தோற்றுவிக்க, அவ்வாறு பெண்மை தழுவி நின்று பாடப்படுபவை அகத்துறைப் பாடல்கள் என்பர். சைவ சமய அருளாளர்கள் மட்டுமல்லாமல் வைணவ அருளாளர்களும் இந்த (இறை) இன்பத்தை அனுபவித்துப் பாடியுள்ளனர்.
அவ்வாறு அப்பரடிகள் அனுபவித்துப் பாடிய,
""முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்; (6501)
என்ற பாடல், அக இலக்கியத்துக்கே மணிமகுடம் சூட்டியதுபோலத் திகழ்கிறது.
திருக்கோயிலைப் பாடும்போது இத்திருக்கோயிலில் கோயில் கொண்டிருக்கும் மூர்த்தியின் அழகுத் திருக்கோலங்கள் பேயாழ்வாரை மிகவும் கவர்ந்து இழுக்கிறது.
""அடிவண்ணம் தாமரை, அன்று உலகம் தாயோன்
படிவண்ணம் பாற்கடல்நீர் வண்ணம் - முடிவண்ணம்
ஓராழி வெய்யோன் ஒளியும் அஃதன்றே
ஆராழி கொண்டாற்கு அழகு'' (2286)
என்ற பாசுரம், இக்கோல அழகில் ஈடுபாடு உடைய அடியவர்கள் பக்தி, பிரேம பக்தியாக மலர்ந்து இறைவனைப் பற்றிய காதல் பாடலாக வெளிவரவும் உதவுகிறது.÷பொய்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், ஆண்டாள் போன்றோரின் பாசுரங்களே இதனைத் தெளிவுபடுத்தும்.
இறைவனைப் பற்றிப் பாடிய பாடல்கள் அனைத்துமே பக்திச் சுவை மிகுந்த இலக்கியங்கள் ஆகிவிடுவதில்லை. இறைவன் பெருமையில் தன்னார்வப் பிணைப்பு எந்த அளவில் வெளிப்படுத்தப்படுகிறது என்பதுதான் பக்தியில் மிக முக்கியமானது.
இவ்வாறு அருளாளர்கள், இறைவனின் "வண்ணம்' பற்றிப் பாடினாலும், இறையியல்பின் உண்மை பற்றியும் சிறிது அறிந்து கொள்வது நல்லது. இறைவனின் சிறப்பியல்புகளாக திருக்களிற்றுப்படியார் என்னும் சைவசித்தாந்த நூல் பின்வருமாறு கூறுகிறது.
""உண்டு என்னில் உண்டாகும் இல்லையெனில்
உண்டாகும் ஆனமையின் ஓர்இரண்டாம் உண்டு இல்லை
என்னும் இசைதவிர்ந்த இன்பத்தை எய்தும் வகை
உன்னில் அவன் உன்னுடனே ஆம்'' (36)
"உண்டு என்று கூறினால் இல்லாமை உண்டாகும்; இல்லை என்று கூறினாலும் இல்லாமை உண்டாகும். ஆனமையினால் ஓர் இரண்டாம்' என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். நமது சுட்டறிவினால், கருவி காரணங்களின் துணைகொண்டு, அறிந்து "கடவுள்' உண்டு என்று கூறினால், அவ்வாறு அறியும் அனைத்தும் அழியக் கூடியவை ஆதலால், கடவுள் இல்பொருளாகி, அசத்தாய் (இல்லாததாய்) முடியும். நமது அறிவினால் அறிய முடியாது போனால், நமது அறிவுக்கு எட்டாத அப் பரம்பொருள் எப்போழுதும் இல்லை என்றாகிவிடும். ஆக, உயிரறிவினால் அறியப்படாத இறைவன், அவனது திருவருளின் வழி நிற்கும் ஆன்மாக்களுக்குப் பேரின்ப அனுபவப் பொருளாகத் தோன்றும் இயல்புடையவன் ஆவான்' என்பது விளக்கம்.
இடைவிடாத அன்போடு இறைவனை நினைந்து போற்றினால், அவன் நம்மோடு பிரிப்பின்றி இரண்டறக் கலந்துநின்று பேரின்பத்தை வழங்குவான்; தன்னையும் காட்சிப்படுத்துவான்; தன்னையே அடியார்களுக்குத் தந்துநிற்பான். இதற்குத் தேவை இறைவனிடத்தில் இமைப்பொழுதும் நீங்காத - இடைவிடாத தூய அன்பு மட்டுமே. இது நாயன்மார்களிடமும் ஆழ்வார்களிடமும் விரவி இருந்தது. "இறைவன், அறியும் பொருளன்று; அனுபவப்பொருள்' என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...