தூண்டா விளக்கனையாய்!
அகப்பொருள் பாடல்கள் தொகை நூல்களில் மிகுதியாக இடம் பெற்று விளங்கியபோதும், துறைகள் எல்லாம் தேர்ந்து, நூல் ஒன்று புனைய வேண்டும் என்ற அவாவே "கோவை' இலக்கியம் தோன்றக் காரணம் எனலாம். 96-வகை சிற்றிலக்கியங்களு


அகப்பொருள் பாடல்கள் தொகை நூல்களில் மிகுதியாக இடம் பெற்று விளங்கியபோதும், துறைகள் எல்லாம் தேர்ந்து, நூல் ஒன்று புனைய வேண்டும் என்ற அவாவே "கோவை' இலக்கியம் தோன்றக் காரணம் எனலாம். 96-வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று கோவை.
ஐந்திணை நெறி வழுவாது அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது கோவை எனும் சிற்றிலக்கியம். இதன் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறுக்கின்றன.
முதலில் தோன்றிய கோவை இலக்கியம், "திருக்கோவையார்'. அதைத் தொடர்ந்து பாண்டிக்கோவை, தஞ்சைவாணன் கோவை, குலோத்துங்க சோழன் கோவை, அம்பிகாபதிக் கோவை, குளத்தூர் கோவை முதலியன எழுந்தன. "நாணிக்கண் புதைத்தல்' என்ற ஒரே துறையை அடிப்படையாகக் கொண்டு "ஒரு துறைக்கோவை' என்னும் நூல் பின்பு தோன்றியது.
மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் தான் முதன் முதலில் தோன்றிய கோவை நூலாகும். இறைவனே மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை அந்தணராக எழுந்தருளி, தம் திருக்கரங்களால் எழுதியருளினார் என்றும், "பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என்று அருளிச் செய்ததால், திருக்கோவையை மாணிக்கவாசகர் அருளிச் செய்ய, அதனையும் எழுதி "திருச்சிற்றம்பலமுடையான்' எனக் கைச்சாந்திட்டு இறைவனார் மறைந்தார் என்றும் கூறப்படுகிறது.
இவ்விரண்டு நூல்களுக்கும் பொருள் யாதென்று தில்லைவாழ் அந்தணர்களும் பொதுமக்களும் வினவ, மாணிக்கவாசகர், தில்லைக் கூத்தனான "நடராஜப் பெருமானை' "இதன் பொருள் அவரே' என விரலால் சுட்டிக்காட்டினார் எனவும் இவர் பற்றிய வரலாறு கூறுகிறது. சுருங்கக் கூறினால், சைவத்தையும் தமிழையும் மக்களுக்குக் கற்பிப்பதற்காக இறைவனால் எழுதப்பட்ட ஞானநூல்கள் திருவாசகமும் திருக்கோவையாரும் என்பர்.
திருக்கோவையார் "சிற்றம்பலக்கோவையார்' என்றும் வழங்கப்படுகிறது. "அகப்பொருள் குறித்த திருவாசகம்' என்றும் கூறுவர். மறையவர், "வேதம்' என்பர்; சிவபோகத்தர், "ஆகமம்' என்பர்; காமுகர், "இன்பநூல்' என்பர்; அளவை (தர்க்க) நூலவர், "எண்ணூல்' என்பர்; தமிழ்ப் புலவர், "இலக்கண நூல்' என்பர். சைவ சித்தாந்திகள், "சித்தாந்த ஞானநூல்' என்பர். ஆனால் இதைப் பாடக் கேட்டவரும் எழுதியவரும் "ஆதியங் கடவுளே' ஆதலால், இதன் மெய்ச்சிறப்பு யாதென சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதை, குமரகுருபர சுவாமிகள், தனது "சிதம்பர மும்மணிக்கோவை', 23-ஆம் செய்யுளில், "காமஞ் சான்ற ஞானப் பனுவல்' என்று சிறப்பிக்கிறார். இத்தகைய ஞானப் பனுவல் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் எட்டாவதாகச் சிறப்பிக்கப்படுகிறது.
இந்நூலின் பாட்டுடைத் தலைவன், தில்லைச் சிற்றம்பலத்து கூத்தப் பெருமான். கிளவித் தலைவன், சிலம்பன் (30), வெற்பன் (33), விடலை (218), ஏந்தல் (245), நாடன் (260) என்று பலவாறு குறிப்பிடப்படுகிறான்.
""இந்நூல் பேரின்பப் பகுதியை நுவல்வது என்பது-"அதிகார வரலாறு' என்ற தலைப்பில் காணப்படும் ஒரு பாடலில்,
""அருள் வயின் சிறந்த அகத்திணை மருங்கில்,
இருளறு நிகழ்ச்சி இவையென மொழிப''
என்று கூறப்படுவதாலும், ""ஆகம நூல் வழியினுதலிய ஞான, யோக நுண்பொருளை யுணர்த்துதற் கரிது'' என்ற உரையில் நுதலிப் புகுதலாகக் கூறும் பாடலிற் கூறியுள்ளமையாலும், "ஈசர் தில்லை யென்றமையின் வீடு பேற்றின்பத்தைச் சுட்டினார்' (1-ஆம் பாடலுரை) என்பன போன்ற உரைப்பகுதிகளாலும் அறியப்பெறும்.
""பக்தி முக்திக்கு உவமை பெத்தம், பேரின்பத்துக்கு உவமை சிற்றின்பம் என வைத்து, உடம்பை உடைய யோகிகள் பாலுற்ற சிற்றின்பம் அடங்கத் தன் பேரின்பமாக, பேரின்பமான பிரமக்கிழத்தியோடு ஓரின்பமான அன்பே-சிவமாய், அருளே-காரணமாக, சுத்தாவத்தையே-நிலமாக, நாயகி-பரம்பொருளாக, நாயகன்-பக்குவ ஆன்மாவாக, தோழி-திருவருளாக, தோழன்-ஆன்மபோதமாக, நற்றாய்-பரையாக, திரோதாயி-செவிலித்தாயாக, மேலும் நாயகன் கூற்றெல்லாம் நிகழ்ந்து வரும். நாயகியைச் சிற்றம்பலம்போல வர்ணிப்பதால் நாயகி-பரம்பொருளாயிற்று. பெறுவான் நாயகனும், பேறு நாயகியுமாக, ரசமும் நாவும் போல் இருத்தலானும், கொத்தும் துறையும், கருப்பொருளும் உரிப்பொருளும் இடமும் எல்லாம் அருளின்பம் எனக்கொள்க'' என்று சீர்காழித் தாண்டவராயர் இதற்கு விளக்கம் கூறியுள்ளார்.
இக்கோவையில் ஓர் அற்புதக்காட்சி: "புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்' என்ற துறை. ஒரு கட்டழகனின் மேல் காதல் நோய் வயப்பட்ட தலைவி, அடிக்கடி அவனைக் காண வருகிறாள். காதல் பயிர் நாளுக்கு நாள் வேரூன்றி வளர்கிறது. காதல் வளர்வதைப் பார்த்துக்கொண்டு ஊர்மக்கள் சும்மாவா இருப்பார்கள்? திடீரென ஒருநாள் தலைவியைக் காணவில்லை. அவளைக் காணாத அவனது உள்ளம் வாடியது; உடல் தவித்தது; நெஞ்சம் கவன்றது.
இல்லத்தில் தாயாரால் காவல் வைக்கப்பட்டதைத் தோழி மூலம் அறிந்து வாடினான். பின்னர் தோழியின் உதவியோடு, கட்டுக்காவலை மீறி, தலைவனோடு உடன்போக்கு சென்றுவிட்டாள் தலைவி. காட்டு வழியே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஒரு மூதாட்டி (செவிலித்தாய்) வந்துகொண்டிருந்தாள். அம்மூதாட்டி, அவர்களைப் பார்த்து, ""மக்களே! உங்களைப் பார்த்தவுடன் என்மகளும் அவளுடைய காதலனும் மீண்டார்கள் என்று நினைத்து அக மகிழ்ந்தேன். இவ்வழியாக காதலர் இருவர் சென்றதை நீங்கள் கண்டீரோ? அவர்களைத் தேடிக்கொண்டுதான் வந்தேன்'' என்று பதிலுக்காக ஏங்கி நின்றாள்.
உடன் வந்த தலைவிக்கு, தங்களைப் போலவே முன்னர் காதலர் இருவர் இவ்வழியே சென்றிருக்கின்றனர் என்பது புரிந்தது. அவர்களைத் தேடித்தான் இவள் வந்திருக்கிறாள் என்று கருதிய தலைவன், அந்த மூதாட்டியைப் பார்த்து, ""ஆம்! புலியூரில் நின்று அடிமை கொண்டவன் ஒருவன் இவ்வழியே செல்வதைக் கண்டேன்'' என்றான். உடனே அம்முதியவள், ""அவனுடன் என் மகள் இருந்ததைக் கண்டீரா?'' என்று ஆவலோடு கேட்டாள்.
அதற்கு அவன், ""தன் காதலியைப் பார்த்து, "தூண்டா விளக்கனையாய்!' இந்த அன்னை சொன்ன வடிவம் எத்தன்மைத்து? இவர்கள் என்ன சொல்கிறார்கள்?'' என்று ஒன்றும் அறியாதவன்போல், இதற்கான பதிலை தன் காதலியின் மூலம் கூற விரும்பினான்.
இந்த அற்புதக் காட்சியைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது ஞானப் பனுவலான "திருக்கோவையார்' பாடல் (244). பாடல் வருமாறு:
""மீண்டா ரெனஉவந் தேன்கண்டு
நும்மையும் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயினரே
புலியூ ரெனைநின்
றாண்டான் அருவரை ஆளியன்
னானைக்கண் டேனயலே
"தூண்டா விளக்கனை யா'யென்னையோ
அன்னை சொல்லியதே''
இதற்கு, "திரோதை பெற்ற சிவத்தைக் காட்டியது' என்று பேரின்பப் பொருள் தரப்பட்டுள்ளது.
தலைவனை மட்டும் கண்டதாகக் கூறி, தலைவியைப் பற்றிக் கூறுவதற்குத் தன் காதலியைப் பார்க்கும் நிலை, பொருளாழம் மிக்கதாய், பண்பாட்டுச் சிறப்பு மிக்கதாய் விளங்குகிறது. ஒரு பெண்ணைப் பற்றி தான் விடை கூறுவது தகுதியன்று என்று உடன்போக்கு வந்த தலைவன் எண்ணுவதும், தன் காதலிக்கும் கேட்டவளுக்கும் (செவிலித்தாய்) மனக்கலக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்து, பண்பு வழுவாமல் அவன் கூறும் பதிலும் இப்பாடலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. இப்பாடல் மட்டுமா? திருக்கோவையாரில் உள்ள 400 பாடல்களும் படிக்கப் படிக்க, சிற்றின்ப இலக்கியம் என்பதை மறந்து, பேரின்பம் அடைவிக்கச் செய்வன என்பதால் தானோ என்னவோ, இந்த கோவை நூல், "அகப்பொருள் குறித்த திருவாசகம்' என்று போற்றப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...