/

பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்...

ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுக் குழுவினருக்கு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு எடுத்துச் சொல்லும் வகையில், ' தில்லானா மோகனாம்பாள் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்!

News image
Updated On :2 மார்ச் 2025, 1:41 pm

எஸ். சந்திரமெளலி

ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுக் குழுவினருக்கு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு எடுத்துச் சொல்லும் வகையில், ' தில்லானா மோகனாம்பாள் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்!'' என்று அரசுத் துறையினருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவுறுத்தினார்.

இன்றைக்கும் ரசிக்க வைக்கும் படம் 'தில்லானா மோகனாம்பாள்'. அதனை முதலில் விகடனில் தொடராக எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் அவர், கிராமப்புற வாழ்க்கையை களமாகக் கொண்டு எழுதிய சிறுகதைகளும் அடங்கும். அவற்றிலிருந்து 15 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, 'பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், முதல் நூலை நாடக ஆசிரியர் இளங்கோ குமணன் வெளியிட, பழந்தமிழ்த் திரைப்படப் பாடல் ஆய்வாளர் நீலமேகம் பெற்றுகொண்டார்.

விழாவில், கொத்தமங்கலம் சுப்பு பற்றிய தகவல்களை அவரது மகன் கொத்தமங்கலம் விசுவநாதன் பகிர்ந்துகொண்டு பேசியது:

'புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்ரமணியன். எட்டாம் வகுப்பு வரையே படித்தார். குடும்பச் சூழ்நிலை கருதி, காரைக்குடி அருகேள்ள கொத்தமங்கலத்துக்குச் சென்று ஒரு மரக்கடையில் வேலை பார்த்தார். அந்த ஊரின் பெயரை சேர்த்துக் கொண்டு, தன் பெயரை சுருக்கிக் கொண்டு, 'கொத்தமங்கலம் சுப்பு' ஆனார்.

சிறு வயதிலேயே காரைக்குடியில் நாடகக் குழுக்களில் நடிக்கத் துவங்கிய சுப்பு, 1930-களில் சென்னை, கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் நடித்தார். பின்னர், பழம்பெரும் இயக்குநர் கே.சுப்ரமணியத்திடம் நடிகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஜெமினி ஸ்டுடியோஸை எஸ்.எஸ்.வாசன் துவக்கியபோது, அங்கே பல்வேறு பொறுப்புகளில் 30 ஆண்டுகள் பணியாற்றினார்.

Story image

'மிஸ் மாலினி' திரைப்படத்தில் சுப்புவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஜெமினியின் 'ஒளவையார்' படத்தை இயக்கியவர் இவர்தான். இவர் எழுதிய தில்லானா மோகனாம்பாள் தொடர்கதை, விகடனின் விற்பனை உயர வழி வகுத்தது.

இவரது 'ராவ் பகதூர் சிங்காரம்' ('விளையாட்டுப் பிள்ளை' என்று திரைப்படமாக வந்தது), 'மிஸ் ராதா', 'பொன்னி வனத்துப் பூங்குயில், பந்தநல்லூர் பாமா போன்ற பிற நாவல்களும் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் எழுதிய கவிதைகளும், திரைப்படப் பாடல்களும் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வெளியிடப்பட்டன' என்றார்.

'பொன்னியின் செல்வன்', 'காஞ்சி மகா பெரியவர்' நாடகங்களை பிரம்மாண்டமான முறையில் மேடை ஏற்றிய இளங்கோ குமணன் பேசுகையில், 'கொத்தமங்கலம் சுப்புவின் கற்பனை வளம், எழுத்து நடை, இயல்பான நகைச்சுவை என அவரது பல்வேறு இலக்கிய பரிமாணங்களை அவரது கதைகள் மூலமாகவே அறியலாம். சுப்புவின் ஒவ்வொரு சிறுகதையும் நாடகக் காட்சியமைப்புகளோடும், உரிய வசனங்களோடும் எழுதப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே நாடகமாக மேடையேற்ற முடியும்'' என்று குறிப்பிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு பேசுகையில், 'ஒரு படைப்பை குறிப்பாக கொத்தமங்கலம் சுப்புவின் எழுத்து போன்ற வட்டார வழக்குகள் அதிகம் கொண்ட படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அதனை மிக நேர்த்தியாகவும், எளிமையாகவும் செய்திருக்கிறார் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்.

ஏற்கெனவே ஆர். சூடாமணி, இமையம், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரின் தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் பிரபா ஸ்ரீதேவன். இது அவரது பதினைந்தாவது மொழிபெயர்ப்பு ஆகும். தமிழ்நாடு அரசின் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான விருது பெற்றவர்'' என்றார்.

மொழிபெயர்ப்பு அனுபவம் குறித்து பிரபா ஸ்ரீதேவன் கூறியது:

'இந்தச் சிறுகதைகள் எல்லாம் கொத்தமங்கலம் சுப்பு 1930-களிலும், 1940-களிலும் எழுதியவை. ஏறத்தாழ எல்லா கதைகளிலும் வரும் கதாபாத்திரங்கள் வட்டார வழக்கில் பேசுகிறார்கள். இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பது பெரிய சவால்தான். மொழிபெயர்க்கப்பட்ட கதைகளில் மண் வாசனையும் இருக்க வேண்டும். அது படிப்பவர்களுக்கு நன்றாகப் புரிந்து, ரசிக்கும்படியாகவும் இருக்க வேண்டும்.

எனவே மிகுந்த கவனத்துடன் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினேன். உதாரணமாக, 'மச்சான்' என்ற வார்த்தையை அப்படியே ஆங்கிலத்திலும் பயன்படுத்தி, அதனையடுத்து அடைப்புக்குள் அதன் அர்த்தத்தையும் கொடுத்துவிட்டேன்.

பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள் ஒவ்வொன்றும் என் மனதைத் தொட்டன, எத்தனை நுட்பமாக கொத்தமங்கலம் சுப்பு மனித மனங்களை, அவர்களின் செயல்பாடுகளைக் கவனித்து, எழுதி இருக்கிறர் என்பது என்னை பெரும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

ஒரு சில சிறுகதைகளை, சிறிதளவு படித்தவுடனே மனது கனத்து, கண்களில் கண்ணீர் திரண்டு, அழுகை வந்துவிடும். என்னால் மேற்கொண்டு படிக்கவோ, எழுதவோ முடியாது. சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்து, அதன் பின் என் பணியைத் தொடருவேன்..

இந்தச் சிறுகதைகள் 75 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை என்பதால், மொழிபெயர்ப்பின்போது இந்தக் காலத்து ஆங்கில வார்த்தைகளுக்குப் பதிலாக அந்தக் காலத்து ஆங்கில வார்த்தைகளையே கவனத்துடன் பயன்படுத்தி இருக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.