பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தெய்வ வேடங்களில் தெய்வீக நடனம்

சங்கக் காலத்தில் இருந்தே மக்களின் பொழுதுபோக்கில் பெரும் பங்கு வகித்தது புராண நாடகங்கள்தான்.

News image
Updated On :8 பிப்ரவரி 2025, 6:30 pm

வி.என். ராகவன்

சங்கக் காலத்தில் இருந்தே மக்களின் பொழுதுபோக்கில் பெரும் பங்கு வகித்தது புராண நாடகங்கள்தான். ஆனால், காலப்போக்கில் கதைகளையும், உரையாடல்களையும் கேட்கும் தலைமுறை அருகிவிட்டதால், புராண நாடகங்கள் உள்ளிட்ட மேடை நாடகங்களுக்கு வரவேற்பு குறைந்துவிட்டது. இந்தப் புராண நாடகத்தைக் காலத்துக்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்தி மக்களைக் கவருவதற்காக உருவாக்கப்பட்டதுதான் தெய்வீக நடனம்.

புராண நாடகத்தில் பாட்டு, வசனம், நடனம் ஆகிய மூன்றையும் கலைஞர்களே நிகழ்த்துவர். கலைஞர்கள் தெய்வ வேடங்களை ஏற்று, ஒலிபெருக்கியில் பாடப்படும் சுவாமி பாடல்களுக்கு நடனமாடும் கலையே தெய்வீக நடனம். இந்தக் கலை 20 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, தற்போது கோயில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றில் இடம்பெறும் கிராமிய நிகழ்ச்சிகளில் இதுவும் ஒரு அங்கமாகிவிட்டது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பூதலூர் அருகேயுள்ள மைக்கேல்பட்டியைச் சேர்ந்த தெய்வீக நடனக் கலைஞர் ஏ. மதியழகனிடம் பேசியபோது:

'தெய்வீக நடனத்தில் விநாயகர், முருகன், அம்மன், சிவன் - பார்வதி, காளி, கருப்புசாமி உள்ளிட்ட தெய்வங்களைப் போன்று ஒப்பனைகள் செய்துகொண்டு நடனமாடுகிறோம்.

காளி வேடத்தில் பச்சைக்காளி, பவளக்காளி, கருப்புக்காளி போன்ற வேடங்கள் போடப்படுகின்றன. காளிக்கு குறைந்தபட்சம் பத்து கைகள் முதல் 18 கைகள் என பொம்மைக் கைகள் பொருத்தப்படும். பச்சைக்காளிக்கு உடை, முகம், கை உள்ளிட்டவை பச்சை நிறத்திலும், பவளக்காளிக்கு இளம் சிவப்பு நிறத்திலும், கருப்புக்காளிக்கு அனைத்துமே கருப்பாகவும் அரிதாரம் பூசப்படும். ஆபரணங்கள் மட்டும் பொன் நிறத்தில் இருக்கும்.

விநாயகர் வேடத்துக்கு கலைஞரின் சொந்த வேடத்தை மறைத்து, அதற்கென உள்ள துதிக்கை முகத்துடன் கூடிய பொம்மைத் தலை பொருத்தப்படுகிறது. முருகனுக்கு கிரீடம், வேல் உள்ளிட்ட அலங்காரங்கள் இருக்கும். இதேபோல, சிவன் - பார்வதி, அம்மன் உள்ளிட்ட வேடங்களுக்கும் அலங்காரம் செய்யப்படும்.

இந்தக் கலையை எங்களது ஆசான் போன்ற முன்னோர்கள் செய்ததைப் படிப்பினையாகக் கொண்டு, மற்றவர்களின் சிறப்பு அம்சங்களையும் உள்வாங்கிக் கொண்டு செய்து வருகிறோம். இந்தக் கலையைப் பெரும்பாலும் ஆண்களே நிகழ்த்துகின்றனர். பெண்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். அம்மன் உள்ளிட்ட வேடங்களுக்கு திருநங்கைகள் நிறைய பேர் முன் வருகின்றனர். திருநங்கைகளுக்குத்தான் அம்மன் வேடம் பொருத்தமாக இருக்கிறது.

Story image

அலங்காரத்துக்கு முன்பெல்லாம் கரியை தேங்காய் எண்ணெயில் கலந்து அரிதாரம் பூசப்படும். ஆனால், வியர்வை வழிந்தால் அரிதாரமும் கலைந்துவிடக் கூடிய நிலைமை இருந்தது. தற்போது பான் கேக், ஜிகினா போன்ற நவீன அரிதாரங்கள் வந்துவிட்டன. இதை போடும்போது 4 மணிநேரத்துக்கு கலையாமல் நீடித்து நிற்கிறது.

ஒப்பனைகள் செய்யப்படுவதற்கு முன்பு சாதாரண மனிதர்களாகத்தான் இருப்போம். ஒப்பனைகள் செய்யப்பட்டவுடன் அந்தந்த தெய்வக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம். ஒப்பனைக்குப் பின்னர் தெய்வத்துக்குரிய நளினமும் கலைஞர்களுக்கு வந்துவிடும். இதனால், மேடையில் தோன்றும்போது மக்களுக்கு உண்மையில் தெய்வமாகவே காட்சி தருகிறது. அம்மன், காளி, பார்வதி உள்ளிட்ட வேடங்களை ஆண்கள் ஏற்றால் கூட, ஒப்பனை செய்யப்பட்ட பிறகு பெண் தெய்வம் போன்று காணப்படுவர்'' என்கிறார் மதியழகன்.

தஞ்சாவூரைச் சேர்ந்த சோழர் கலை மன்றத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் கூறியது:

'காளி, கருப்புசாமி (கருப்பசாமி) நடனங்களை மக்கள் அதிக அளவில் விரும்பி ரசிக்கின்றனர். இதில், காளி, கருப்புசாமி நடனங்கள்தான் சற்று கடினம். இதற்கு இடமும் சற்று விசாலமாகத் தேவைப்படும். மற்ற நடனங்களைவிட காளி, கருப்பசாமிக்கு இசை, பாட்டு, சொற்கள் ஆக்ரோஷமாகவும், வேகமாகவும் இருக்கும். அதற்கு தகுந்தாற்போல சூலாயுதம், வேல், அரிவாள் போன்றவற்றை ஏந்திக் கொண்டு வேகமாக நடனமாட வேண்டும். இதில், கருப்புசாமி மக்களைக் காப்பாற்றும் எல்லைச்சாமி என்பதால், அந்த நடனத்தின்போது, சப்தமாக ஒலியையும் எழுப்ப வேண்டும். சுற்றியும், வேகமாக ஓடியும், குதித்துக் குதித்தும் நடனமாட வேண்டியிருக்கும். அப்போதுதான் கருப்புசாமிக்கான இயல்பை வெளிப்படுத்த முடியும். பாட்டுக்கேற்ப நடனமும் தத்ரூபமாக இருப்பதால், பொதுமக்களில் சிலர் அதனுடன் ஒன்றி, ஆடத்தொடங்கிவிடுவர்.

இதேபோல, பச்சைக்காளி, பவளக்காளி நடனங்களும் வேகமாக இருக்கும். வலது புறம் 9 கைகள், இடது புறம் 9 கைகளுடன் ஆடும்போது, அதுவும் தத்ரூபமாக இருப்பதால், அதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சிவன் - பார்வதி வேடத்திலும் நடனம் அதிகம். ஆனால், அதற்கேற்ப ஆடத் தெரிந்தவர்கள் ஆடினால், அதுவும் சிறப்பாக இருக்கும்'' என்கிறார் ரவிச்சந்தர்.

'ஒரு நிகழ்ச்சி 3 முதல் 5 மணிநேரம் நடைபெறும். இந்தக் கலையைச் சார்ந்து திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏறத்தாழ 500 கலைஞர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் தை மாதத்தில் தொடங்கி ஆடி மாதம் வரை திருவிழாக்கள், சுவாமி வீதி உலா உள்ளிட்டவற்றில் வாய்ப்பு கிடைக்கும். மற்ற மாதங்களில் சொந்த தொழில் உள்ளிட்ட மாற்றுத் தொழிலை மேற்கொண்டு பிழைத்து வருகிறோம். சீசனில் மாதத்துக்கு 20 முதல் 25 நிகழ்ச்சிகள் கிடைத்தாலும், வருவாய் குறைவுதான்.

ஒரு கலைஞருக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதில், அம்மன் போன்ற வேடங்களுக்கான ஒப்பனைக்கே பாதி செலவாகிவிடும். அதுபோக மிஞ்சுவது குறைவே. என்றாலும், இக்கலைதான் நம்மை வாழ வைக்கிறது என்கிற ஆத்ம திருப்தி கிடைக்கிறது. வருவாய் குறைவாக இருந்தாலும், நிறைய இளைஞர்கள் ஆர்வமுடன் முன் வருகின்றனர்'' என்கின்றனர் தெய்வீக நடனக் கலைஞர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.