/

கிரிக்கெட்டில் வாழ வேண்டும்

அண்மையில் மறைந்த  பிஷன் சிங் பேடி,   இந்திய கிரிக்கெட்டில் திறமையான "லெக் ஸ்பின்னர்' என முத்திரை பதித்தவர்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:14 am

சுதந்திரன்


அண்மையில் மறைந்த  பிஷன் சிங் பேடி,   இந்திய கிரிக்கெட்டில் திறமையான "லெக் ஸ்பின்னர்' என முத்திரை பதித்தவர். 1966இல்  இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கிய அவர், 1979ஆம் ஆண்டு வரை  விளையாடி  பெரும் பங்களிப்பை செய்தார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்த  பேடி "கிரிக்கெட்டை வெறுமனே ஆடினால் மட்டும் போதாது;   கிரிக்கெட்டில் வாழ  வேண்டும்'  என்று சொல்லி வந்ததுடன்,  வாழ்ந்தும் காட்டினார்.

இந்திய அணிக்காக  பிஷன் சிங் பேடி  67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  266 விக்கெட்டுகளையும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும்  வீழ்த்தியவர். 

1971இல்  இங்கிலாந்து அணிக்கு எதிரான  டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்று,   சரித்திரம் படைத்ததற்கு  பேடியும் ஒரு முக்கிய காரணம்.  அன்றைய இந்திய அணியின் கேப்டன் அஜித் வடேகர் காயம் ஏற்பட்டு  பாதியில் ஆட்டத்தைவிட்டு வெளியேறியதால் தற்காலிக கேப்டனாக  பேடி  ஆடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். 

1975 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஒருநாள் ஆட்டத்தில் கிழக்கு  ஆப்பிரிக்கா அணியை  தோற்கடித்தது.  அந்தப் போட்டியில் பேடியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க விதத்தில் அமைந்தது.

பஞ்சாபின்  அமிர்தஸ்சரஸில் பிறந்த அவர்,   பதினைந்தாம் வயதில்  வட மேற்கு பஞ்சாப் அணிக்காக கிரிக்கெட் ஆடத்  தொடங்கினார்.  பிறகு,  தில்லி அணிக்காக  தனது பதினேழாவது வயதில் ஆடத்  தொடங்கினார்.  முதல்தர கிரிக்கெட் ஆட்டத்தில்  370 போட்டிகளில் அவர் விளையாடி 1,560 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தன்னை  உயர்த்திக் காட்டிய தில்லி அணிக்கு கேப்டனாக பொறுப்பு ஏற்ற பேடி, இரண்டு முறை ரஞ்சி டிராபி தொடரில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றினார்.

இவரது மகன்  அங்கத் பேடிக்கு  கிரிக்கெட்டில்  நாட்டம் இல்லாமல்,  ஹிந்தி திரைப்படங்களில் நடிப்பதில் கவனம்  செலுத்துகிறார். அங்கத்தின் மனைவி நேஹா தூபியாவும்  திரைப்பட, விளம்பரப்  படங்களில் நடிப்பதுடன் மாடலாகவும் இருக்கிறார்.

மன்சூர் அலிகான் பட்டோடி  இந்திய அணியின்  கேப்டனாக  விலகியதும் 197576இல் இடது கை  பந்து வீச்சாளரான  பேடி  கேப்டன் ஆனார்.  பந்து வீச்சாளரை  கேப்டனாகத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்ற மரபு மாறி, பேடியின் தலைமையிலான இந்திய அணி மேற்கு இந்திய அணியை வென்றது. பேடி வர்ணனையாளராக மாறியபோது,  கிரிக்கெட் ஆட்டத்தை உணர்ச்சிபூர்வமாக  வர்ணனை செய்வார்.  அதுபோல் ஆங்கிலத்தில்  பந்து அடிப்பவரை "பேட்ஸ்மேன்' என்று கூறாமல், "பேட்டர்'   என்ற  சொல்லை  தந்து வர்ணனையில் அறிமுகப்படுத்தினார்.

பேடிக்கும் காவஸ்கருக்கும்  களத்தில் ஒத்துப் போகாது.  ஆனாலும், கவாஸ்கரின் திறமை மீது மதிப்பும் மரியாதையும் பேடிக்கு இருந்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  தனது  முதல் மனைவிக்குப் பிறந்த  முதல் மகனுக்கு "காவஸ் இந்தர் சிங்'  என்று பெயர் வைத்தபோதுதான்  பேடி கவாஸ்கரை  எந்த அளவுக்கு  மதிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. கிரிக்கெட்டிலிருந்து  ஓய்வு பெற்றாலும்,  இளைய தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகப்படுத்தி வந்தார்.

தெற்கு இந்திய  உணவுகளின்  செய்முறைகளை தென் இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்களின்  மனைவிகளிடமிருந்து பேடி கேட்டு  சமைப்பார்.  அவருக்கு தயிர் சாதம் ரொம்பப் பிடிக்கும்.  புத்தகப் பிரியரான பேடி தனது வீட்டில் நூலகமே வைத்திருந்தார்.  தனது  75ஆவது   வயது நிறைவடைந்ததைத் தொடர்ந்து,   2021 செப்டம்பரில்  "சர்தார் ஆஃப்  ஸ்பின்'  என்ற தலைப்பில் கிரிக்கெட் அனுபவங்களை  எழுதி  வெளியிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.