வெற்றி நிச்சயம்
ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முஹம்மதி, 2023ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காகத் தேர்வாகியுள்ளார்.


ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முஹம்மதி, 2023ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காகத் தேர்வாகியுள்ளார். பெண்கள் உரிமைக்காகவும், மக்கள் ஆட்சிக்காகவும், மரணத் தண்டனைகளுக்கு எதிராகவும் போராடி வருபவர். ஈரான் அரசால் இதுவரை 13 முறை கைது செய்யப்பட்ட அவர், 2015ஆம் ஆண்டு முதல் சிறைக் கைதி. பதினாறு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ள அவர், இன்னும் எட்டு ஆண்டுகள் சிறையில் இருப்பார். 154 கசை அடிகளுக்கும் ஆளாகியுள்ளார்.
"122 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக நோபல் விருது பெறும் கைதி, விருதைப் பெறும்
19 ஆவது பெண், ஈரானின் இரண்டாவது பெண்' போன்ற சிறப்புகளையும் பெற்றுள்ளார். பொறியாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், பெண்ணியவாதி என்று பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட அவருக்கு ஐம்பத்து ஒன்று வயதாகிறது.
நர்கீஸ் பிறந்தபோது, ஈரான் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஈரான் குடியரசாக வேண்டும் என்று புரட்சி வெடித்த போது, நர்கீஸ் குடும்பத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். மன்னர் ஷா நாடு விட்டு ஓட, புதிய ஆட்சி மலர்ந்தபோதும், நர்கீஸ் குடும்பத்தினர் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதிகள் பெயர்களை தொலைக்காட்சியில் வாசிப்பார்கள். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யார், யார் கொல்லப்பட்டார்கள் என்று தெரிந்துகொள்ள வீட்டில் தொலைக்காட்சி செய்திகளை இவரது குடும்பத்தினர் கேட்பார்கள். புரட்சி வெடித்த காலத்தில் வளர்ந்த நர்கீஸ் பின்னாளில் புரட்சியாளராகவே மாறினார்.
லட்சியங்கள், போராட்டங்கள், எதிர்கொண்ட சிரமங்களைத் தாண்டி, நர்கீஸின் மன உறுதியே நோபல் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது.
ஈரானின் கொடிய சிறையான "எவின்' சிறையிலிருந்து நர்கீஸ் இணையம் மூலம் தனது கருத்துக்களை வெளியிடுகிறார். பத்திரிகை பேட்டிகளுக்கான கேள்விகளை அலைபேசியில் பெற்று பதில்களை எழுத்து மூலம் வழங்குகிறார்.
நர்கீஸ் கல்லூரியில் அணு இயல் படித்தபோது, சக புரட்சியாளரான தகி ரஹ்மானியை திருமணம் செய்து கொண்டார். ஒரு மகன் ஒரு மகள். தகியும் 14 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். தற்சமயம் தகி மகன், மகளுடன் ஈரானிலிருந்து குடி பெயர்ந்து பிரான்ஸில் வசிக்கிறார்.
அமைதிக்காக நோபல் பரிசை 2003இல் பெற்ற முதல் ஈரான் பெண் ஷிரின் எபாதியின் அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து நர்கீஸ் பணியாற்றினார். அடக்குமுறையால், ஷிரின் எபாதி லண்டன் சென்றுவிட்டார். 2022இல் நர்கீஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட சிகிச்சைக்காக சிறையிலிருந்து வீடு திரும்பினார்.
அப்போதுதான் சிறையில் பெண் கைதிகளுக்கு நடக்கும் பல்வேறு கொடுமைகள் குறித்த "வெள்ளை கொடுமைகள்' என்ற நூலை வெளியிட்டார். இதற்காக "பேன்' விருதுக்குத் தேர்வாக, அவரது கணவர் தகி ரஹ்மானி பெற்றுகொண்டார்.
போராட்டங்களில் நர்கீஸ்ஸின் ஒரு கண் பாதிப்புக்கு உள்ளானது. 18 மாதங்களாக அவர் நர்கீஸ், கணவர், வாரிசுகளுடன் பேச அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து நர்கீஸ் முஹம்மதி கூறுகையில்:
""மகன், மகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தைகூட இல்லை. குடும்பத்திலிருந்து நான் அந்நியமாகிக் கொண்டிருக்கிறேன். ஒரு தாய்க்கு குழந்தைகளை வளர்க்கும் காலம் பொற்காலம். அன்பைக் கொடுத்து அன்பைப் பெறும் காலம். அதை நான் இழந்து நிற்கிறேன். இழந்தது இனி திரும்ப வராது. மறுபக்கம் சுதந்திரம், சமநிலை, அமைதி இல்லாத உலகத்தில் வாழுவது வீண். அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெறுவது அத்தனை எளிதல்ல; ஆனால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...