பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சேவையே  எனது மூச்சு

முப்பத்து மூன்று ஆண்டுகளாக ஐந்து லட்சம்  தொழுநோயாளிகளுக்கான சிகிச்சை அளித்துள்ளார் மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன். ""சேவையே எனது மூச்சு'' என்கிறார் அவர்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:22 am

பிஸ்மி பரிணாமன்

முப்பத்து மூன்று ஆண்டுகளாக ஐந்து லட்சம் தொழுநோயாளிகளுக்கான சிகிச்சை அளித்துள்ளார் மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன். ""சேவையே எனது மூச்சு'' என்கிறார் அவர்.

சென்னை சேத்துப்பட்டு செயின்ட் தாமஸ் தொழுநோய் மையத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கி, தற்போது ஷெனாய் நகரில் இயங்கி வரும் "ஜெர்மன் லெப்ரசி அண்ட் டிபி ரிலீஃப்அசோசியேஷன்' மருத்துவமனையில் சேவை புரிந்து வருகிறார்.

அவருடன் பேசியபோது:

""கும்பகோணம்தான் எனது சொந்த ஊர். ஒரு நாள் மகாமகக் குளம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது பலரும் மூக்கை மூடிக் கொண்டு, அவசரம் அவசரமாக கலைந்து சென்று கொண்டிருந்தனர். நான் எட்டிப் பார்க்க, படிக்கட்டில் தொழுநோயாளி ஒருவர் இறந்து கிடந்தார். எனது துப்பட்டாவை எடுத்து உடலின் மீது விரித்தேன்.

மயானத்துக்குக் கொண்டு சென்று தகனம் செய்ய வருமாறு பலரிடம் கேட்டபோதும், யாரும் முன்வரவில்லை.

கடைசியில் ஒரு ரிக்ஷாக்காரர் உதவிட முன்வந்தார். இருவரும் கைகளில் பழைய துணியைச் சுற்றிக் கொண்டு சடலத்தை எடுத்து , ரிக்ஷாவில் வைத்து மயானத்துக்குக் கொண்டு சென்றோம். மயான ஊழியரும் தொழுநோயாளியின் உடலை தகனம் செய்ய முடியாது' என்று சொல்ல, இன்னொரு மயானத்துக்குச் சென்று அங்கிருப்பவரிடம் பேசி தகனம் செய்தோம்.

வீடு திரும்பியதும், ஓய்வு பெற்ற ராணுவ அலுவலரான என தந்தையிடம் சொன்னேன். அவரோ, "இதை வேறு யாரிடமும் சொல்லாதே! உன்னை ஒருமாதிரியாகப் பார்ப்பார்கள். உன்னைவிட்டு விலகவும் செய்வார்கள்" என்றார். உடனே நான் "மருத்துவம் படித்து, சமுதாயம் தள்ளிவைக்கும் தொழுநோயாளிகளை அந்த நோயிலிருந்து விடுவிப்பேன்' என்றேன்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றதும், தொழுநோய் சிகிச்சைக்கான சிறப்புப் படிப்பை முடித்து சருமநோய் மருத்துவரானேன். தொழு நோயாளிகளுக்கு சிகிச்சையில் முன்னுரிமை அளிக்கத் தொடங்கினேன்.

தொழுநோயாளிகளைத் தேடி கிராமங்களுக்குச் சென்று சிகிச்சைகளை இலவசமாகத் தொடங்கினேன். அவர்கள் குடும்பத்தினருக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் விழுப்புணர்வு வழங்கவும் ஆரம்பித்தேன்.

தொழுநோய் காச நோய் போன்று, காற்றில் உள்ள பாக்டீரியாக்களால் ஏற்படுவதாகும். தொழுநோயாளிகளின் எச்சில் மூலமாகவும் பரவும். இந்த நோயைக் குணப்படுத்தலாம். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி போதுமான அளவுக்கு இல்லாதவர்களுக்குதான் வரும். தொடர்ந்து சிகிச்சை செய்தால் சில ஆண்டுகளில் நோயைக் குணப்படுத்திவிடலாம். நோயாளிகளின் குடும்பத்தினரையும், அவர் வசிக்கும் பகுதியில் வாழும் மக்களையும் நோய் தொற்றிக் கொண்டுள்ளதா என்று அவ்வப்போது பரிசோதனை செய்து கண்காணிக்க வேண்டும்.

அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் தொழுநோயாளிகள் என்னிடம் ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர். இந்தத் துறையில் ஆர்வமாகச் செயல்பட மறுப்பு சொல்லாமல் ஒத்துழைக்கும் கணவர், மகள், மகன், மாமியார் உள்ளிட்ட உறவினர்களுக்கு நன்றி கூறுகிறேன். ஷெனாய் நகர் மருத்துவமனைக்கு எதிராகத்தான் எனது வீடு.

குழந்தைகள் பிறந்தபோது, குழந்தைகளுக்குப் பால் புகட்ட மாமியார்தான் குழந்தைகளை மருத்துவமனைக்குக் கொண்டு வருவார். நான் தாய்ப் பால் புகட்டியதும் வீட்டுக்குக் கொண்டு போவார். அந்த அளவுக்கு மாமியார் ஒத்துழைப்பு தந்தார்.

எனது சேவைகளுக்காக, பல விருதுகளைப் பெற்றுள்ளேன். எனக்கு உதவியாக இருக்கும், செவிலியர்கள், உதவியாளர்கள், இலவச முகாம்களை ஏற்படுத்தி உதவுபவர்கள் அனைவரையும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஜி 20 மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில் எனது பணிகள் குறித்த கட்டுரை பிரசுரமாகியுள்ளது. தவிர, "சண்டே போஸ்ட்' என்ற அமெரிக்க செய்தி இதழிலும் என்னைக் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.

தொழுநோயாளிகளுக்கு மருந்துகள் மட்டுமல்ல; உணவுப் பொருள்களும் வழங்கி வருகிறேன்.

சென்னை வெள்ளத்தால் 2015-இல் சூழப்பட்ட போது இலவச மருத்துவ முகாம்களை நடத்தினேன். கல்பாக்கத்தில் இருக்கும் இருளர் குடியமைப்பிற்குச் சென்று மருத்துவ சிகிச்சைகள் வழங்கினேன். எனக்கு வாட்ஸ்அப் குழு ஒன்று இருக்கிறது. அதன் மூலம் ரத்ததானம் செய்து வருகிறோம். ரத்தம் தேவை என்றால் என்னைத் தொடர்பு கொள்வார்கள். அதை வாட்ஸ்அப்பில் நான் பதிவு செய்வேன். அதைப்பார்க்கும் வாட்ஸ்அப் குழுவின் ஆர்வலர்கள் உதவுவார்கள்...'' என்கிறார் ரேணுகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.