எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இருக்கும் வரை இலவசப் பயிற்சி வகுப்பு..!

அரசுப் பணிகளுக்காக  பதினாறு  ஆண்டுகளாக இலவசப்  பயிற்சி வகுப்புகளை விடுமுறை நாள்களில்  நடத்திக் கொண்டிருக்கிறார் வட்டாட்சியர் மாரிமுத்து.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:48 pm

பிஸ்மி பரிணாமன்

அரசுப் பணிகளுக்காக பதினாறு ஆண்டுகளாக இலவசப் பயிற்சி வகுப்புகளை விடுமுறை நாள்களில் நடத்திக் கொண்டிருக்கிறார் வட்டாட்சியர் மாரிமுத்து. "ஓய்வு பெற்றாலும் மண்ணில் இருக்கும் வரை பயிற்சி வகுப்புகள் எடுப்பதை நிறுத்த மாட்டேன்'' என்கிறார் மாரிமுத்து.

அவரிடம் பேசியபோது:

"விருதுநகர் மாவட்டத்தின் கூமாபட்டி ஊரைச் சேர்ந்தவன் நான். சாதாரண குடும்பம். அண்ணன்தான் படிக்க வைத்தார். வணிகவியலில் பட்டயப் படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாடு அரசின் ஆலங்குளம் சிமென்ட் ஆலையில் பயிற்சியாளராகச் சேர்ந்தேன். அங்கே தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தினேன். தொலைதூரக் கல்வி வழியாக, தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றேன். நுழைவுத் தேர்வை எழுதி , வருவாய்த் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன்.

ஒருமுறை மதுரைக்கு தொடர்வண்டியில் சென்றபோது, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த தாய் தனது ஐந்து வயது மகனைத் திட்டினார். "ஏன்' என்று கேட்டேன்.

"பக்கத்து வீட்டில் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஒரு இளைஞன் இருக்கிறான். அவனை வீட்டில் தண்டச் சோறு என்பார்கள். அதை ஒரு தின்பண்டம் என்று நினைத்து, கேட்கிறாள் குழந்தை' என்றார். எனக்கு மனம் பதறியது. நான் ஏளனத்துக்கு ஆளான காலங்கள் நினைவுக்கு வந்தது.

2006-ஆம் ஆண்டில் அரசு வேலை தேடும் இளையதலைமுறைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஹிந்து உயர்நிலைப் பள்ளி வகுப்பு அறையில் வகுப்பை இலவசமாக நடத்தத் தொடங்கினேன். முதலில் 4 பேர் சேர்ந்தனர்.

அடுத்தவாரம் திருச்சுழியிலிருந்து ஒரு மாணவன் மட்டுமே வந்திருந்தார். அவர் பெயர் கண்ணன். துவண்டுபோன நான் வகுப்பை நிறுத்திவிட்டேன்.

அந்த சமயத்தில் நாளிதழ் ஒன்றில், இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற தொடர் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தேன். அதை வாசித்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் நூலக விழாவில் பேச அழைத்தனர். அங்கு பேசியபோது, இலவச வகுப்புகளை மீண்டும் நடத்தக் கோரினர்.

சில வாரங்கள் வகுப்புகள் நடந்தன. திருச்சுழி மாணவன் கண்ணனும் சேர்ந்து கொண்டார். எனக்கோ ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அருப்புக்கோட்டை போய்வருவதில் பல பேருந்துகள் மாறி பயணிக்க வேண்டிய கட்டாயம். உடல் ஒத்துழைக்கவில்லை. அதனால் வகுப்பை விருதுநகருக்கு வெளியே அமைந்திருக்கும் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க வளாகத்துக்கு மாற்றினேன்.

மர நிழலில் இலவசப் பயிற்சி வகுப்புகள் என்பதால், அருகேயிருந்த ஊர்களிலிருந்தும் பலர் வரத் தொடங்கினர். கண்ணனும் வந்து சேர்ந்தார். அந்தக் கண்ணன் இன்று தேனி நகரத்தில் வருமானத் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.

அப்போது தமிழ்நாடு அரசில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்தவர்கள், "டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேறினால்தான் அரசு ஊழியர்களாகச் சேர முடியும்' என்று அறிவிக்கப்பட்டது. 40 வயதுக்கு மேற்பட்ட பலர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தனர். இவர்களில் சுமார் 150 பேர் தேர்ச்சி பெற்றனர். இதையறிந்த பலரும் திரளாக வருகை தந்து, எனது வகுப்பில் கலந்து கொண்டனர்.

இதை பார்த்து நெகிழ்ந்த சங்கத்தினர் பெரிய தகரக் கொட்டகை போட்டு தகரக் கூரைக்கு கீழ் ஓலை வேயப்பட்ட கூரை அமைத்தனர். ஒலிபெருக்கிகள், இருக்கைகளையும் அளித்தனர்.

வெளிமாவட்ட மாணவர்களுக்காக சனிக்கிழமையும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தேன். 50 பேருக்கு எடுக்கப்பட்ட வகுப்பில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்காகப் பயிற்சியை அளித்து வருகிறேன்.

பயிற்சி வகுப்பு வரும் ஏழை தேர்வர்களுக்காக, மதிய உணவை இலவசமாக வழங்கும் "வள்ளலார்' திட்டத்தைத் தொடங்கியிருக்கிறேன். யாரிடமும் நன்கொடை கேட்டதில்லை. ஆனால் எனது அர்ப்பணிப்பை உணர்ந்து கொண்டவர்கள் உணவுப் பொருள்களை வழங்குகிறார்கள்'' என்றார் மாரிமுத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.