/

சுற்றுவட்டம் செய்த உதவி...!

வீட்டிற்கு முன் ஆட்டோ வந்து நின்றதும் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க சதீஷ் குமார் கதவைத் திறந்தார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:38 am

சுதந்திரன்

வீட்டிற்கு முன் ஆட்டோ வந்து நின்றதும் யார் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க சதீஷ் குமார் கதவைத் திறந்தார். ஆட்டோவிலிருந்து பெண் ஒருவர் இறங்குவதற்குத் தடுமாறினார். ஓடிப் போய் சதீஷ்குமார் கை தாங்கல் கொடுத்து இறக்கினார். அந்தப் பெண்ணின் இடது கால் போலியோவினால் பாதிக்கப்பட்டிருந்தது. பெண்ணைத் தொடர்ந்து எட்டு வயது மதிக்கத் தக்க மகளும் ஆட்டோவிலிருந்து இறங்கினார்.

வீட்டிற்குள் அழைத்து அமர செய்து, "யார் நீங்கள்... என்னை சந்திக்க வந்த காரணம் என்ன' என்று சதீஷ்குமார் கேட்க வந்த பெண் அழுகையில் உடைந்தார். சிறிது நேரம் கழித்து "ஐயா... நான் திவ்யா. இது எனது மகள் மார்ஷியா ஜோன். நாங்க லால்குடி தாலுகாவில் ஆலம்பாடியைச் சேர்ந்தவங்க... மார்ஷியாவுக்குக் காது கேட்காது. அதனால் பேசவும் வராது. எங்களுக்கு சிகிச்சை செய்ய வசதி இல்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டோம். பிறகுதான் ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அரசு செலவில் இலவசமாக ஆண்டிற்கு 30 சிறார்களுக்கு காது கேட்க உதவும் கருவியை பொருத்துகிறார்கள் என்று சொல்லக் கேட்டு திருச்சி மருத்துவமனைக்கு 2017-இல் சென்றோம்.

அங்கு விசாரித்த போது, கேட்கும் திறன் இல்லாத குழந்தைகள் காதுக்குப் பின்புறத்தில் தலைக்குள் ஒரு கருவியும், காது மடலுக்கு மேல் ஒரு கருவியையும் பொருத்துகிறார்கள். அதனால் வெளிப்புறக் கருவி, ஒலியைப் பிடித்து தலைக்குள் இருக்கும் கருவிக்கு அனுப்ப...

அந்தக் கருவி அந்த ஒலித் துடிப்புகளை மூளைக்கு அனுப்பி ஒலியைப் புரியவைக்கிறது. தலைக்குள் உள்ளே வைக்கப்படும் கருவி பழுதாகாது. ஆனால், வெளியே இருக்கும் கருவி அதிக பட்சம் 2 ஆண்டுகள்தான் வேலை செய்யும். பிறகு பேட்டரியை மாற்ற வேண்டும். பேட்டரி மாற்ற குறைந்தது 80 ஆயிரம் ரூபாய் செலவாகும். குளிக்கும் போது வெளிப்புற கருவியை அகற்றிவிட வேண்டும். வெளிப்புறக் கருவிக்குள் தூசியோ, வியர்வையோ, தலைக்கு தேய்க்கும் எண்ணெய் கசிவோ அல்லது தண்ணீர் திவலைகள் சென்றுவிட்டால் கருவியைப் பழுது பார்க்க ஒரு லட்சம் வரை செலவு செய்ய வேண்டும்.

அரசு சுமார் எட்டரை லட்சம் செலவு செய்து கருவி பொருத்துகிறது. பொருத்தப்பட்ட ஒரு ஆண்டுக்குள் கருவியில் ஏதும் கோளாறு ஏற்பட்டால் அரசே சரி செய்து தரும். கருவி பொருத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு முதல் கருவியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் பொருத்தப்பட்டவரே செலவு செய்து சரி செய்து கொள்ளவேண்டும். சிறிய கோளாறுகளுக்கே சரி செய்ய இருபதாயிரம், முப்பதாயிரம் ஆகும். கருவியின் நுட்பமான பாகங்களை மாற்றி வேறு புதிதாக வைக்க, லட்சங்கள் ஆகுமாம்.." என்றார் திவ்யா.

பூவாளூர் அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கும் சதீஷ் குமார் தொடர்ந்தார்:

""அரசு மருத்துவமனையில் தரப்படும் "காக்லியர் இம்பிளாண்ட்' காது அறுவை சிகிச்சைக்கு ரூ.8 லட்சத்திற்கும் மேல் அரசுக்கு செலவாகும். இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்ய 14 லட்சம் ஆகுமாம். காதுக்கு சிகிச்சை லட்சங்களில் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. கருவி பழுது காரணமாக மார்ஷியா வாய்பேச இயலாமல் காது கேளாமல் பள்ளி சென்று வருவது என் மனதை மிகவும் வருத்தியது. ஏழ்மை நிலையால் அவரது குடும்பத்தாரால் அதை சரி செய்ய முடியாமல் போனதால், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காது கேட்கும் கருவியை அவள் அணியாமல் ஊமையாகவே அந்த சிறுமி இருந்துள்ளார்.

என்னை நம்பி திவ்யா வந்ததால் நான் இருபதாயிரம் போட்டு தெரிந்தவர்களிடத்தில் நண்பர்களிடத்தில் சொல்லி தேவையானத் தொகையைத் திரட்டி, திருச்சியில் செவிக் கருவி பழுது பார்க்கும் இடத்தில் பணத்தைக் கொடுத்து பழுது பார்க்கப்பட்ட கருவியை மார்ஷியா. ஜோன்னுக்கு மார்ச் 3-இல் பொருத்தினோம். சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நடுவில் இரண்டு ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டுள்ளதால் பேச கொஞ்ச நாள் பிடிக்குமாம். இப்போது பழுது பார்த்தாலும், மீண்டும் எப்போது பழுதாகும் என்று சொல்ல முடியாது. அப்படிப் பழுதானால் மீண்டும் செலவு அதிகமாகும்'' என்றார்.

""மார்ஷியா ஜோன் பிறக்கும் போது ஒரு குறையும் இல்லை. ஒரு வயது ஆனபோது வலிப்பு ஒரே நாளில் 6 முறை வந்தது. வாந்தி பேதி... வாயில் நுரை வந்து மார்ஷியா வாடித் துவண்டு போனாள். அந்த வலிப்பு, மகளின் கேட்கும் திறனைப் பறித்துக் கொண்டது. எனது இடது கால் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளது. நடக்கவும் படி ஏறவும் சிரமம். சிறு கல் இடறினால் கூட நான் கீழே விழுந்துவிடுவேன். இந்த சிரமம் போதாது என்று மூத்த மகளுக்கு காது கேட்காத குறை வேறு. கடன் வாங்கி செவிக் கருவியைப் பழுது பார்த்தோம். இனி கடன் வாங்க முடியாத நிலை.

நான் என் மகளுக்காக மட்டும் கோரிக்கை வைக்கவில்லை. என் மகளைப் போல ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக நூற்றுக் கணக்கான குழந்தைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றன. அதில் பெரும்பாலோர் பராமரிப்பு செலவை ஏற்க முடியாமல் குழந்தைகளை அப்படியே விட்டுவிடுகிறார்கள். இதனால் இந்தப் பயனுள்ள திட்டம் தொடங்கிய அரசுக்கு என்ன லாபம்? அரசு செலவு செய்யும் கோடிக்கணக்கான ரூபாய் வீணாகிறது. அதனால் பராமரிப்பு செலவையும் அரசு ஏற்றுக் கொண்டால், திட்டம் முழுமை பெறும்'' என்கிறார் திவ்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.