புத்தக ஆர்வலர் ஒருவரின் இடைவிடாத முயற்சியாலும், 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த அர்ப்பணிப்பாலும், 10 லட்சம் புத்தகங்களுடன் கூடிய புத்தக இல்லம் உருவாகி இருக்கிறது.
பெங்களூரில் இருந்து மைசூரு செல்லும் வழியில் 125 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் மண்டியா மாவட்டம், பாண்டவபுரா வட்டத்தின் ஹரலஹள்ளி கிராமத்திற்குள், புத்தக மணம் வீசும் திசைநோக்கி நடந்தால், அங்கு 72 வயதான முதியவர் ஒருவர் பழுப்பேறிய கைச்சட்டை, வேட்டியுடன் புத்தகங்களில் புதைந்திருப்பார். அவர்தான் அங்கே கெளடா.
இவரது வீட்டை எல்லோரும் அன்பாக "புத்தக இல்லம்' (புஸ்தக மனே) என்றே அழைக்கிறார்கள்.
அதிகமான தனிநபர் புத்தகச் சேகரிப்புப்பிரிவில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள அங்கே கெளடா, தனது 21 வயதில் புத்தகங்கள் மீது காதல் கொண்டார்.
பாடப் புத்தகங்களைக் கூட வாங்க முடியாத அளவுக்கு வறுமையில் உழன்றார். படிக்க வேண்டிய வயதில் தனக்குக் கிடைக்காததுபோல, வேறு யாருக்கும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, எம்.ஏ. (கன்னடம்) பட்டம் பெற்று பாண்டவபுரா சர்க்கரை ஆலையில் நேரக்காப்பாளராக வேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்தில் இருந்து ஊதியத்தைப் புத்தகங்களை வாங்கவே செலவிட்டு வந்திருக்கிறார்.
பெங்களூரு, மைசூரு சென்று சிறுகச் சிறுக சேகரித்தநூல்களின் எண்ணிக்கை, இன்றைக்கு 22 இந்திய மொழிகள், பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் 10 லட்சத்தைக் கடந்துள்ளது. கௌடா சொல்கிறார்:
""எனது தந்தை மரி கெளடா, தாய் நிங்கம்மா இருவரும் 2 ஏக்கர் நிலத்தில் உழுது பிழைத்துக் கொண்டிருந்தார்கள். ஏழைக் குடும்பம். புத்தகம் என்றால் என்ன என்பதே அவர்களுக்குத் தெரியாது. நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது படிக்க பாட நூல்களை வாங்கும் வசதி கூட இருக்கவில்லை.
மைசூரு மகாராஜா கல்லூரியில் படித்தபோது புத்தகங்கள் அத்தியாவசியமானதாக இருந்தன. அவற்றை வாங்குவதற்கு பணமில்லை. அப்போது ராமகிருஷ்ண ஆசிரமம் என் கண்ணில் பட்டது. அங்கு சென்று ஆன்மிக நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். அப்பா அளித்த கைச்செலவு பணத்தில் 25 காசுகளுக்கு விவேகானந்தரின் நூலை வாங்கினேன். அவற்றைப் படித்துவிட்டு பத்திரப்படுத்தும் வழக்கம் ஏற்பட்டது.
புத்தகங்கள் மீதான எனது காதலைத் தெரிந்துகொண்ட எனது பேராசிரியர் அனந்தராமு, புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தியதோடு, பணத்தைச் சேர்ப்பது மட்டும் வாழ்க்கை அல்ல, மனதுக்குப் பிடித்ததில் முழுமையாக ஈடுபடுவதும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் என்று கூறி, என்னை ஊக்கப்படுத்தினார். அது என் ஆழ்மனதில் பதிந்து, புத்தகங்களைச் சேகரிக்கும் ஆர்வத்தைப் பன்மடங்காக்கியது.
சர்க்கரை ஆலையில் நேரக்காப்பாளராக வேலை பார்த்தாலும், அடிக்கடி வெளியூர் சென்று புத்தகங்களை வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இளம் வயதில் புத்தகங்கள் இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவ வேண்டுமென்பதே அடிப்படை நோக்கமாக இருந்தது.
2004-இல் 2 லட்சம் புத்தகங்களைச் சேர்த்திருந்தேன். கடந்த 50 ஆண்டுகளாக எனது ஊதியத்தின் 80 சதவீதத்தை நூல்களை வாங்கவே செலவழித்திருக்கிறேன். இந்த முயற்சிக்கு என் மனைவி விஜயலட்சுமி பெரும் துணையாக இருந்து வருகிறார். இப்போதும் என்னிடம் 2 பேண்ட், 2 சட்டை மட்டும் தான் உள்ளன. எளிமையான வாழ்க்கை தான். நானும் என் மனைவியும் தரையில் தான் படுத்து உறங்குகிறோம். சிறிய அறையில் தான் வசித்து வருகிறோம்.
என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட தொழிலதிபர் ஹரிகோடே, 2005-இல் 2.5 சென்ட் நிலத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் புத்தகங்களை வைக்க பெரிய கட்டடம் கட்டிக் கொடுத்தார். அது எனது ஆர்வத்தைத் தூண்டியதால், கிடைத்த புத்தகங்களை எல்லாம் கொண்டுவந்து சேகரித்தேன். இதனால் 2016-ஆம் ஆண்டில் எனது சேகரிப்பில் இருந்த புத்தகங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்தது.
அது லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்தது. 1800-ஆம் ஆண்டில் வெளியிட்ட நூல்களும் என்னிடம் உள்ளன. அரிய வகை புத்தகங்களுக்காகவே தனி இடத்தை ஒதுக்கி பத்திரப்படுத்தி வருகிறேன்.
ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி, வங்கம், உருது உள்ளிட்ட 22 இந்திய மொழிகள், ரஷ்யன், கொரியன், சீனம் உள்ளிட்ட பல வெளிநாட்டு மொழிநூல்களும் என்னிடம் உள்ளன. இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், புராணம், விமர்சனம், பயணம், ஆராய்ச்சி, ஆருடம், மகளிர்நலம், குழந்தை இலக்கியம் போன்ற அனைத்து வகையான தலைப்புகளிலும் நூல்கள் உள்ளன.
35,000 பன்னாட்டு சஞ்சிகைகள், 2,500 கன்னட சஞ்சிகைகள், மகாத்மா காந்தி பற்றிய 2,500நூல்கள், பகவத்கீதை குறித்து 2,500 நூல்கள், நூற்றுக் கணக்கான விவிலியங்கள், கலைக்களஞ்சியங்கள், பேரகராதிகள், பல்வேறு மொழிகளில் ராமாயணம், மகாபாரதம், வரலாற்று நூல்கள், தன் வரலாற்று நூல்கள் போன்ற நூல்களும் எனது நூலகத்தில் உள்ளன.
என்னிடம் இருக்கும் புத்தகங்களை யார் வேண்டுமானாலும் வந்து கட்டணமின்றிப் படித்துச் செல்லலாம். இரு புத்தகங்கள் இருந்தால் மட்டும் விலைக்குத் தருவேன். ஆராய்ச்சி மாணவர்கள். போட்டித்தேர்வு எழுதுவோர், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பொதுமக்கள் என்ற பெரும்பாலானோர் தினமும் எனது புத்தக இல்லத்திற்கு வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் புத்தக இல்லத்துக்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, முன்னாள் எம்.பி. சி.எஸ்.புட்டராஜு இருவரும் சேர்ந்து ரூ. 1 கோடியை அளித்து, புதிய கட்டடம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்பேரில், புதிய கட்டடம் கட்டி வருகிறேன். அதில் புத்தகங்களைக் குவித்து வைக்காமல், முறையாக பிரித்து, வரிசைப்படுத்தி வைக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.
இப்போது நானும் என் மனைவியும் புத்தகங்களைப் பராமரித்து வருகிறோம். எதிர்காலத்தில் ஆட்களை வைத்துக்கொண்டு, மேலும் பல ஆயிரம் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகத்தை அமைப்பேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


