ஒரு நாள் ஜெயிக்கலாம்
இணையம் வளர்ச்சி அடையத் தொடங்கிய பிறகு யூ-டியூப் தளம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.


இணையம் வளர்ச்சி அடையத் தொடங்கிய பிறகு யூ-டியூப் தளம் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.
அப்போது பலருக்கும் தெரியாத ஒன்று, அது வேலைவாய்ப்பு வழங்கும் தளமாக அமையப் போகிறது என்பது. அதுவும், காட்சி மொழியில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் தங்களது திறமையை உலகுக்கு வெளிப்படுத்த யூ-டியூப் உதவும் என்பது கூட அப்போது தெரியாது.
முன்பெல்லாம் ஒரு வீடியோவை உருவாக்குவது என்றால் கடினம். ஆனால், இப்போது அதிநவீன கைபேசியில் உயர் தரத்திலான வீடியோவை உடனடியாகப் பதிவு செய்து, அதை அந்தக் கைபேசியிலேயே படத்தொகுப்பும் செய்து யூ-டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யக் கூடிய அளவுக்கு வசதிகள் பெருகிவிட்டன.
இணைய வசதி கைக்குள் வந்த பிறகு யூ-டியூப் வீடியோ தளமும் அசுர வளர்ச்சி அடையத் தொடங்கியது. பலர் மின்னஞ்சல் கணக்கு மூலம் யூ-டியூப் தளத்தில் தங்களுக்கெனத் தனிச் சேனலை உருவாக்கிக் கொண்டு வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கினர். அந்த வகையில் யூ-டியூப் தளத்தையே வாழ்க்கையாக எடுத்துக் கொண்டு மற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் தருமபுரியைச் சேர்ந்த ஹரிபிரகாஷ்.
சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை மையப்படுத்தி "அவள் நங்கை', "டச் மீ நாட்' ஆகிய குறும்படங்களை உருவாக்கியதன் மூலம் ஹரிபிரகாஷ் குழுவினர் இணையவெளியில் நன்கு அறிமுகமானார்கள்.
ஹரிபிரகாஷிடம் பேசுவோம்...
"ரோட்சைட் ரோமியோ' சேனல் உருவானது எப்படி?
கல்லூரியில் படிக்கும் காலத்தில் சினிமா ஆர்வம் பிறந்தது. அந்தச் சமயத்தில் சினிமா துறைக்குள் எப்படி நுழைவது என்று தெரியாமல் இருந்தேன். அந்தச் சூழலில்தான் என்னுடைய நண்பர் ராஜா ரவிவர்மா ஒரு பாடல் உருவாக்கலாம் என்றார். நாங்கள் அந்தப் பாடலை வெளியிடுவதற்காக உருவாக்கியதுதான் ரோட்சைட் ரோமியோ சேனல். எப்படியாவது சினிமா துறைக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதற்காக எங்களைத் தயார்படுத்திக் கொள்ளவே இந்தச் சேனலை இருவரும் சேர்ந்து தொடங்கியிருக்கிறோம்.
சமூகக் கருத்துகள் அடங்கிய குறும்படம் எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்க முடியும். ஆனால் சினிமாவில் தொடர்ந்து நமது பெயர் நிலைக்க வேண்டுமானால், தனித்துவமான பாணியைப் பின்பற்றினால்தான் முடியும். எங்களுக்கான தனித்தன்மை என்ன என்று தீவிரமாக யோசித்தோம். மகளிர் தினத்தையொட்டி, நாப்கின் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வீடியோவை உருவாக்கினோம்.
ஒரே நாளில் 50,000 பார்வையாளர்கள் யூ-டியூப் தளத்தில் கிடைத்தனர். அதன்பிறகு, சிறார் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக "டச் மீ நாட்' என்ற குறும்படத்தை எடுத்தோம். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உருவாக்கப்பட்ட இந்தக் குறும்படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் குறும்படம் திரையிடப்பட்டது. திருநங்கைகளைச் சினிமாவில் கிண்டல் செய்வதற்காகப் பயன்படுத்துவதற்கு எதிராக "அவள் நங்கை' என்ற குறும்படத்தை உருவாக்கினோம். நடிகர் மாதவன், இயக்குநர் சீனு ராமசாமி, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் இந்தக் குறும்படத்தைச் சுட்டுரையில் பகிர்ந்து வாழ்த்து கூறினர். இந்தக் குறும்படத்தில் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த திருநங்கை ஜீவா சுப்ரமணியம், மீண்டும் அவர்களின் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். கேரளத்தைச் சேர்ந்த திருநங்கையும் என்னைப் பாராட்டினார்.
யூ-டியூப் தளத்தில் நீங்கள் செய்த சாதனை?
"டச் மீ நாட்' குறும்படத்தை யூ-டியூப் தளத்தில் மட்டும் சுமார் 2.3 கோடி பேர் பார்த்தனர். அதுதான் யூ-டியூப் தளத்தில் நாங்கள் செய்த மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறோம். எங்களுக்குப் பொறுப்பும் அதிகமானது. தொடர்ந்து வீடியோக்களை உருவாக்கத் தொடங்கினோம். இப்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் எங்கள் சேனலை பின் தொடர்கின்றனர். இதற்காக யூ-டியூப் நிறுவனம் எங்களுக்கு “"சில்வர் பிளே பட்டன்'”அளித்துக் கௌரவித்தது.
யூ-டியூப் மூலம் வருமானம் ஈட்ட முடிகிறதா?
யூ-டியூப் தளத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வருவாய் ஈட்டுவது சாத்தியம். கிரியேட்டிவாகச் செயல்படுபவர்களுக்கு யூ-டியூப் தளம் வரப்பிரசாதம். நம்பிக்கையும், திறமையும் இருப்பவர்கள் இந்தத் துறையைத் தேர்வு செய்யலாம். இந்தத் துறையைப் பொருத்தவரை, ஒரே நாளில் ஜெயிக்க முடியாது; ஆனால் ஒரு நாள் நிச்சயம் ஜெயிக்கலாம். நம்பிக்கையுடன் சொல்கிறார் ஹரிபிரகாஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...