மனித வாழ்க்கையில் தீபத்தின் ஒளி இன்றியமையாததாக விளங்குகிறது. கார்த்திகை மாதத்தில் திருக்கோயில்களிலும், நமது இல்லங்களிலும் விளக்குகளை ஏற்றி நம் துன்பங்கள் அகல இறைவனை வழிபடுகிறோம்.
சைவ சமயம் போற்றும் நாயன்மார்களில் நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம் புல்லாண்டார் போன்றோர் திருக்கோயில்களில் தீபத்தொண்டு செய்து இறைவனின் அருளைப் பெற்றதாக பெரியபுராணம் கூறுகிறது. திருக்கோயில்களில் எப்பொழுதும் விளக்குகள் எரிய தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் தானமளித்ததை திருக்கோயில்களில் காணும் பெரும்பாலான கல்வெட்டுகளின் வாயிலாக அறியமுடிகிறது.
பஞ்ச பூதத் தலங்கள்
நாம் வாழும் உலகம் மண், நீர், தீ, வளி, வான் என்ற ஐந்து சக்திகளால் ஆனது. இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என அழைக்கப்படுகின்றன. நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவன் இத்தகைய வடிவங்களாக காட்சி தருவதை அன்பர்கள் போற்றிப் பாடியுள்ளனர். இறைவன் அவ்வடிவங்களில் காட்சி தரும் தலங்கள் "பஞ்ச பூதத் தலங்கள்" எனச் சிறப்பித்தும் கூறுகின்றனர். காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகிய தலங்கள் தாம் அவை!
லிங்கோத்பவ மூர்த்தி
திருவண்ணாமலையில் "ஜோதி" வடிவாக இறைவன் காட்சி தருகிறார். "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி", "மாலறியா நான் முகனுங் காணா மலை', "போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்' என்றெல்லாம் மாணிக்கவாசகப் பெருமான் போற்றுகின்றனர். இது குறித்து ஒரு புராணவரலாறு கூறப்படுகிறது. திருமாலும் பிரம்மாவும் தங்களில் யார் உயர்ந்தவர் என்பதை அறிந்து கொள்ள சிவபெருமானிடம் செல்கின்றனர். சிவபெருமான் தனது முடியும், திருவடியையும் யார் காண்கிறார்களோ அவர்களே உயர்ந்தவர் என்று கூறி ஜோதி வடிவாக இறைவன் காட்சி தருகிறார். திருமால் பன்றி வடிவம் எடுத்து நிலத்தை அகழ்ந்து செல்கின்றார். பிரம்மா அன்னப்பறவை வடிவம் கொண்டு முடியைக் காண செல்கிறார். இறுதியில் இருவரும் தமது தோல்வியை ஒப்புக்கொண்டு சிவபெருமானைப் போற்றி வணங்குகின்றனர். "ஜோதி" வடிவாக காட்சி அளித்த இறைவன் சிற்ப வடிவில் "லிங்கோத்பவ மூர்த்தி" என அழைக்கப்படுகின்றார். திருக்கோயில்களில் கருவறையின் பின்புறம் உள்ள தேவகோட்டத்திலும் இவ்வடிவினைக் கண்டு வழிபடலாம். இதனை "அழலாகிய அண்ணல்", "தீயுருவாகிய நின்ற நிமலன்', "தேடிக்காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை", "வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும் சூழ எங்கும் தேட ஆங்கோர் சோதியுளாகி நின்றாய்" என்றெல்லாம் திருமுறைகள் போற்றுகின்றன. இங்கே இறைவன் ஒளிவடிவமாகக் காட்சி தந்த மலையே இறை வடிவமாகப் போற்றப்படுகின்றது. இம்மலை அருணாசலம், அருணை, சோணாசலம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அருணாசலம் என்றால் "அருள் வழங்கும் மலை" என்பது பொருளாகும்.
இலக்கியச் சிறப்பு
திருவண்ணாமலையைப் போற்றி பாடப்பட்டிருப்பதை பல இலக்கியங்களில் காணலாம். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அருணகிரிப் புராணம், அருணாசலபுராணம், திருஅருணைக்கலம்பகம், திரு அண்ணாமலைக்கோவை, சோணசைல மாலை, அண்ணாமலை சதகம், அருணாசல அட்சரமாலை, உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ், கார்த்திகைத்தீப வெண்பா போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களில் இத்தலத்தின் பெருமை பேசப்படுகிறது.
நினைக்க முக்தி தரும் தலம்
திருவாரூரில் பிறந்தவர்களுக்கு முக்தியும், காசியில் இறந்தவர்களுக்கு முக்தியும், சிதம்பரம் தலத்தை தரிசித்தவர்கள் முக்தியை அடைவார்கள் எனக் கூறப்படுகிறது.
இத்தலத்தை "நினைத்தாலே முக்தி தரும்; தலம்' என்ற பெருமை உடையது. பல ஞானிகள் அருளாளர்கள் வந்து தங்கி இறையருள் பெற்ற புனித பூமியாக திருவண்ணாமலை விளங்குகிறது. "ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே' என அப்பர் பெருமானும், "அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே" என ஞானசம்பந்தர் பெருமானும் இத்தலத்தைப் போற்றுகின்றனர். "ஞானத்தபோதரரை வா என்று அழைக்கும் மலை அண்ணாமலை' என குரு நமசிவாய சுவாமிகள் போற்றுகின்றார். மாணிக்கவாசகர் பெருமான் "திருவெம்பாவையை இயற்றிய தலம் இது என்ற பெருமை உடையது. அருணகிரிநாதர் முருகன் அருளைப்பெற்று "திருப்புகழ்' பாடியத் தலமாகவும் இது விளங்குகிறது. "அஞ்செழுத்தாய் வேதமாய் ஆகமமாய் நின்றமலை - நாளும் தொழுவோர் எழு பிறப்பை மாற்றுமலை அண்ணாமலை' என அண்ணாமலை வெண்பா புகழ்ந்து போற்றுகின்றது.
கிரிவலம்
இங்கு மலையே இறைவனின் வடிவமாகக் காட்சி தருவதால் மலையைச் சுற்றி கிரிவலம் வருவது சிறப்பாகும். ஆகிய அஷ்ட (எட்டு) லிங்க கோயில்கள் உள்ளன. அடி அண்ணாமலைக் கோயிலும் உள்ளது. கிரிவலம் வருவதற்கு ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் சிறப்பானதாகும். மேலும் உகந்த நாட்களாக சித்திரை முதல் நாள், மாசி சிவராத்திரி, கார்த்திகை பெளர்ணமி நாட்கள் சிறப்புடையதாக கூறப்படுகிறது. பெளர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனை வழிபடுவதைக் காணலாம்.
இவ்வாறு கிரிவலம் வந்து ஒவ்வொரு கிழமைக்கும் பலன் இருப்பதாகவும் கூறப்படுகிறது: ஞாயிறு - சிவபதம், திங்கள் - (பெளர்ணமி நாளாக இருந்தால் மேலும் சிறப்பு) - இறையருள் - ஆற்றல் கிடைக்கும், செவ்வாய் - எண்ணிய எண்ணம் நிறைவேறும். புதன் - அறிவுக்கூர்மை, வியாழன் - நல்ல வளம், எண்ணம் பெறுதல், வெள்ளி - அன்பும் இன்பமும் நிகழும், சனிக்கிழமை - நவக்கிரகங்களை வழிபட்ட பலன் ஆகியன.
வரலாற்றுச் சிறப்பு
திருவண்ணாமலை கோயிலை சோழ, பாண்டிய, போசள, விஜயநகர - நாயக்க மன்னர்கள், பிற்கால பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் ஆகிய மன்னர்கள் போற்றியுள்ளனர். வழிபாடுகள் சிறப்பாக நடைபெற தானம் அளித்ததையும் இங்கு காணும் கல்வெட்டுகளினால் அறிய முடிகிறது. இக்கோயிலுக்கு நகரத்தார் செய்துள்ள பணிகள் மகத்தானது. இறைவன் "திருவண்ணமாலை ஆண்டார்', "திருவண்ணாமலை மகாதேவர்", "திருவண்ணாமலை ஆழ்வார்' எனவும், அம்பாள் "உண்ணாமுலை நாச்சியார்" எனவும், "திருக்காமக்கோட்ட நம்பிராட்டியார்' என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை என்றாலே இக்கோயிலில் காணும் உயர்ந்த கோபுரங்களே நம் கண் முன்னே தோன்றும்! அருணகிரிநாதர் வரலாற்றிலும் கோபுரம் முக்கிய இடம் பெறுகிறது. அண்ணாமலை திருக்கோயிலின் கிழக்கு கோபுரம் தஞ்சையை ஆண்ட செவப்ப நாயக்கர் காலத்தில் (கி.பி.1572) சிவநேசன், லோகநாதன் என்ற இரு சகோதரர்கள் கட்டி முடித்தார்கள் என ஒரு பாடல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. எல்லப்ப நாயனார் என்ற புலவர் பாடிய பாடலால் அறிய முடிகிறது. கோபுர நுழைவு வாயிலின் பக்கச்சுவரில் இருவரது உருவங்களும் கை தொழும் நிலையில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளதையும் கண்டு மகிழலாம். இவர்கள் இக்கோபுரத்தைக் கட்டியவர்களாக இருக்கலாம். ஒருவர் கையில் முழக்கோல் உள்ளது. இதனை "திருவண்ணாமலை முழம்" எனக்கூறுவர்.
கார்த்திகைத் தீபத்திருவிழா
திருவண்ணாமலை திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகைத் தீபத்திருவிழா மிகவும் சிறப்பானது. கார்த்திகை மாதத்தின் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரத்தன்று "தீபம்" மலை உச்சியில் ஏற்றப்படும். இறைவன் ஜோதி வடிவாகக் காட்சி அளித்ததை எடுத்துக்காட்டும் வகையில் இத்தீபத்திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வந்திருக்கவேண்டும். இக்கோயிலில் காணப்படும் முதலாம் இராஜேந்திரச் சோழன் கால கல்வெட்டில் திருவண்ணாமலை உடையார் கார்த்திகைத் திருநாளில் திருவேட்டை எழுந்தருளவும், அகல்விளக்குகள் ஏற்றவும், திருவிழாவிற்கு வரும் அடியார்களுக்கு அமுது வழங்கவும் தானம் வழங்கப்பட்டது. மேலும் இராஜேந்திர சோழனுடைய பணிமகன் பாண்டிய உதய திவாகரன் என்பவன் இக்கோயிலில் பிட்சாடனர் திருமேனி செய்து அளித்து அமுது படைப்பதற்கும் தானம் அளித்தான். இன்றும் தீபத்திருவிழாவில் எட்டாம் நாள் விழாவில் பிட்சாடனர் தங்க மேரு வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
கார்த்திகைத் தீபவிழா சிறப்பினை சைவ எல்லப்ப நாவலர் அருணாசலப்புராணத்தில் கூறும்பொழுது, "தீப தரிசனம் கண்டால் பசி பிணி இல்லாது, இடையூறுகள் நீங்கும்' என்று புகழ்ந்து போற்றுவதைக் காணலாம். புராணீகர் சோணாசல முதலியார் அருளிய கார்த்திகைத்தீப வெண்பா என்ற இலக்கியத்தில்,
அன்னம் அளிக்கும் தீபம்
சிந்தை தெளிவிக்கும் தீபம்
வெவ்வினையைப் போக்கும் தீபம்
என்று தீபதரிசனத்தைப் போற்றுகின்றார்.
கார்த்திகைத் தீபத்தை கண்டு வழிபட்டவர்களுக்கு அகத்திருள் அகலவும், மற்றும் உலக முழுமைக்கும் ஒளி வழங்கும் ஒளிவிளக்காகவும் விளங்குகிறது என்று சிவப்பிரகாச சுவாமிகள் கூறுகின்றார்.
தீப தரிசனத்தின் போது பக்தர்கள் அனைவரும் "அண்ணாமலைக்கு அரோகா" என்று பக்தியுடன் அழைத்து வணங்குவதைக் காணலாம். "அரகர என்பது கடலின் முழங்குவது அருணைவளம் பதியே" என்று சைவ எல்லப்ப நாவலர் அருணாசலப்புராணத்தில் குறிப்பிடுகிறார்.
நம் துன்பங்கள் அகலவும், வாழ்க்கை ஒளிமயமாக விளங்கவும், இல்லங்களிலும் திருக்கோயில்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவோம்! நம் வினைகளை அகற்றும் திருவண்ணாமலைத் தீப தரிசனத்தைக்" கண்டு வணங்குவோம்! நலம் பெறுவோம்!
கட்டுரையாளர் : தொல்லியல் துறை (ஓய்வு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

