/

தாக்குதல் இல்லை... உண்மைகள் உண்டு!

""பணம் ஒருவனுக்கு நிம்மதியை தரும் என்கிற கருத்து எத்தனை பெரிய பொய். எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான், மனிதம் இங்கே மலிவாகி விட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:12 am

ஜி. அசோக்

""பணம் ஒருவனுக்கு நிம்மதியை தரும் என்கிற கருத்து எத்தனை பெரிய பொய். எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான், மனிதம் இங்கே மலிவாகி விட்டது. வசதி வாய்ப்புகள், அநீதிகள் பெருகி வரும் சூழலால் அத்தியாவசியத் தேவைகள் கூட எட்டாக் கனியாக மாறி விட்டன. அதை அடித்துக் காட்டும் ஓர் அபாய ஒலிதான் இந்தப் படம்.'' கதையின் மேலோட்டத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். "அய்யா வழி', "காமராசு' படங்களை இயக்கியவரின் மூன்றாவது படம் "நதிகள் நனைவதில்லை.'

 "நதிகள் நனைவதில்லை....' கவித்துவமான தலைப்பு... ஆனால், நடப்பு சமூகத்தை விமர்சிக்கும் அளவுக்கு விஷயங்கள் இருக்கும் போலிருக்கிறதே...?

 வாழ்க்கையில் பணம் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் நம்ம வாழ்க்கையில் பாதிப் பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள். நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள்.

ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சரி பாதி குற்றங்கள் தொலைந்து விடும். ஆனால் அது மட்டுமே வாழ்க்கையின் முதன்மை பொருள் ஆகி விட்டதால், நம் மன நிலையும் மாறி விட்டது. அதுதான் எதுவும் சுலபமாக கிடைத்து விட வேண்டும் என்கிற மன நிலையை நமக்குள் உருவாக்கி விட்டது. அந்த மனப்பான்மைதான் எல்.கே.ஜி. சிறுவனிடம் டிகிரியை எதிர்பார்த்து நிற்கும் பெற்றோர்களை உருவாக்கி தந்திருக்கிறது. வரமோ, சாபமோ... காதல் ஓர் அனுபவம் மட்டுமே என கடந்து போகிற தலைமுறையும் உருவானதற்குக் காரணமும் அதுதான். இந்தப் படத்தில் யார் மீதும் எந்த தாக்குதலும் இருக்காது. ஆனால், நிறைய உண்மைகள் இருக்கும். அந்த உண்மைகள் மக்களுக்குச் சரியான வழிகாட்டுதலாக இருக்கும்.

இப்போதுள்ள சினிமாவை எடை போட முடியவில்லை.... நல்ல கருத்துக்களைச் சென்று சேர்க்க முடியாத இடமாக சினிமா மாறியிருப்பது போல் தெரிகிறதே...?

 அதை உணர்ந்தே இருக்கிறேன். நாளுக்கு நாள் ரசிகர்களின் மன ஓட்டங்களை உணர்ந்து வந்தேன். கிட்டத்தட்ட நான் படம் எடுத்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன. இந்த இடைவெளிக்குப் பின் படைப்பாளியாக அமரும் போது கொஞ்சம் கூடுதல் நிதானம் தேவைப்பட்டது. யார்? எப்படி? எந்தப் படங்கள் ஓடின? காரணங்கள் எவை? என விடைத் தேடிக் கொள்ளவே ஆறு மாதங்கள் பிடித்தன. அதன் பின்தான் உள்ளுக்குள் இருந்த கதைக்கு உருமாற்றம் தந்தேன். எப்போதுமே கலைஞனின் பங்களிப்பு பாதிதான். மீதியை ரசிகர்கள்தான் கரை சேர்க்க வேண்டும். தமிழ் ரசிகர்கள் மீது அந்த நம்பிக்கை இருக்கிறது. இந்த கதையில் இருக்கும் உன்னதம் மக்களுக்கு பிடிக்கும். ஏனென்றால் சமகால பிரச்னைதான் படம். அதே நேரத்தில் இன்றைய ரசிகர்களுக்கு தேவையான விஷயங்களும் படத்தில் இருக்கின்றன. அது வியாபார பொருளாக இல்லாமல், உணர்ந்து வாழப் போகிற வாழ்க்கையாக இருக்கும்.

 வேறு என்ன புதுமை இருக்கு... என கேட்பவர்களுக்கு...?

 சண்டைக் காட்சிகளில் நிறைய புதுமைகள் காத்திருக்கின்றன. பாதுகாப்பு என்கிற பெயரில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் மட்டுமே அதிகப்படியான சண்டைக் காட்சிகள் வந்திருக்கின்றன. ஆனால், இளம் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் கூட்டுகிற அளவுக்கு ஹாலிவுட் பட சண்டைக் காட்சிகள் போல் அமைக்கத் திட்டமிட்டோம். சண்டை பயிற்சியாளர் தவசிராஜ். ஒரு திருப்புமுனைக்காக காத்திருக்கும் கலைஞன். திட்டத்தை சொன்னதும், என்ன செய்ய வேண்டும்? என்றார். முக்கிய காட்சிகளில் அவரின் பங்கு வேண்டும் என்பதால், அவரையே கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்க செய்து விட்டேன். காரின் முன் பக்க கண்ணாடிகளை உடைத்து கொண்டு பின் பக்க கண்ணாடி வழியாக வெளியே வருவது. சுழல்கிற ராட்டினத் தொட்டிகளை தாவிப் பிடித்து மேலே செல்வது என யூனிட்டையே கலங்கடித்தார். பார்ப்பவர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. ஒரு மேஜிக் போல், ஒரு சர்க்கஸ் போல் இருக்கும் அந்த சண்டைக் காட்சிகள். இசை சௌந்தர்யன். எல்லா பாடல்களும் நல்லாவே வந்திருக்கிறது.

மோனிகா தவிர, மற்றவர்கள் புதுமுகங்கள்தானே....?

 எப்போதுமே புதுமுகங்கள்தான் என் சாய்ஸ். இவரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் திட்டம் போட்டதில்லை. முகங்களுக்காக இல்லாமல் கதைக்காகவே நடிகர்களைத் தேடிப் பிடித்தேன். ஹீரோ பிரணவ். கேரள இளைஞர். அங்கே பரிச்சயமான முகம். தமிழில் நல்லதொரு வாய்ப்புக்காகக் காத்திருந்தார். தேடி வந்தார். வாய்ப்பு தந்தேன். மோனிகா உங்களுக்கு தெரிந்தவர். தகுதிகள் இருந்தும் மேலே வர முடியாத தமிழ்ப் பொண்ணு. மோனிகாவின் கடைசிப் படம் இது. இன்னொரு முக்கியமான இடத்துக்கு ரிச்சா. மற்றபடி கதையின் போக்கை தீர்மானிக்கிற இடத்தில் பாலாசிங் மாதிரியான அனுபவ நடிகர்கள் இருக்கிறார்கள்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.