/

சிதைந்து விடாத சினிமாக் கனவு!

""கூடுவதும் பிரிவதும்தான் வாழ்க்கை.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:04 am

ஜி. அசோக்

""கூடுவதும் பிரிவதும்தான் வாழ்க்கை. பிறப்பு, இறப்பு போன்று மனித வாழ்க்கையில் இரண்டும் தவிர்க்க முடியாத விஷயம். எதற்காகக் கூடினோம், எப்படிப் பிரிந்தோம் என்பதுதான் முக்கியம். மனிதனின் வாழ்க்கையின் தொடக்கமும், முடிவும் தனிமைதான். இதுதான் இந்தக் கதையின் அடிப்படை. அதை எல்லாருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாகக் கொடுப்பதில் நிறைய சவால்கள். எல்லாம் முடித்து "ரஷ்' பார்க்கிற போது அவ்வளவு திருப்தி. உங்களுக்கும் அந்த திருப்தி நிச்சயம் வரும்.'' கதையின் உள்ளடக்கத்தை உள்ளதுபடி பேசுகிறார் இயக்குநர் பரசுராம். "கலைவேந்தன்' படத்தின் இயக்குநர். நீண்ட நெடிய சினிமா அனுபவங்களுடன் அவர் இயக்கும் முதல் படம் இது.

நீங்கள் பேசுகிற விதம் இந்தப் படத்துக்கு ப்ளஸ்ஸாக கூட இருக்கலாம்... ஆனால், இப்போதுள்ள டிரெண்டுக்கு எந்த விதத்தில் இது சரி வரும்....?

எல்லாவற்றையும் தீர்மானிக்க சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால், நாளடைவில் எல்லாவற்றிலுமே சலிப்பு. பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களைச் சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும்? அப்படியோர் பாதையில்தான் இந்த கதை பயணமாகும். காமெடி, த்ரில்லர் என இந்த கதைக்கும் வழக்கமான பார்வைதான். ஆனால் அதைத் தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

ரசிகர்களுக்குப் பரிச்சயமான முகங்களாக நடிகர்கள் இருந்தால் நீங்கள் சொல்ல வருகிற விஷயத்துக்கு தகுந்த வரவேற்பு கிடைக்கும்.... இது இப்போதைய சினிமா நிலை...?

அப்படி ஒரு விஷயம் இப்போதுமா இருக்கிறது?

அப்படி எனக்குத் தோன்றவில்லை. கதைக்குப் பொருந்துகிற முகங்கள் இருந்தால் அந்தப் படம் ஹிட். இதுதான் இப்போதைய சினிமா என நினைக்கிறேன். கடந்த சில வருடங்களில் முன்னுக்கு வந்து நிற்கிற நடிகர்களில் அழகன் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு யாரும் இல்லை. நடிகராக ரசிகர்களுக்கு அவர்களைப் பிடிக்கிறது. படம் நன்றாக இருந்தால் அந்தப் படத்தை ரசிகர்கள் ஹிட்டாக்குகிறார்கள். அது போல் வில்லன், ஹீரோ என்றெல்லாம் இப்போது பிரித்துப் பார்ப்பதில்லை. கதையில் அவருக்கான பங்கை அவர் சரியாகச் செய்திருந்தால், அவரைப் பற்றித்தான் பேசுகிறோம். அந்த அளவுக்கு சினிமா மாறியிருக்கிறது. இதில் வரும் ஹீரோ அஜய் நம் ரசிகர்களுக்கு அந்நியமில்லை. எல்லாரையும் கவர்ந்திழுத்த "ஃ' படத்தில் நடித்தவர். நல்லதொரு திருப்பு முனைக்காகக் காத்திருந்தவர். இந்தக் கதைப் பிடித்து போகவே நடித்திருக்கிறார். ஹீரோயின் சனம் ஷெட்டி பரிச்சயமானவர்தான். "அம்புலி', "கதம் கதம்' என வரிசையாக ரசிகர்களின் பார்வையில் இருக்கிறவர். இந்த இரண்டு பேரையும் தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் ரசிகர்களுக்கு வெகுவாக அறிமுகமானவர்கள். கலாபவன் மணி, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், நளினி, "தலைவாசல்' விஜய், யுவராணி இப்படி எல்லா இடங்களிலும் எல்லாருடைய மனதையும் கவர்ந்த நட்சத்திரங்கள். இதனால் எந்த விஷயமும் யாருக்கும் அந்நியப்படாது.

இத்தனை ஆண்டு கால சினிமா அனுபவம்... கோடம்பாக்கம் முழுவதும் தெரிந்த முகங்கள்... அறிந்த விலாசங்கள்... இருந்தும் ஏன் இந்த தாமதம்...?

சினிமாக்காரனுக்குக் கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற நிமிடங்கள் இருக்கே... அது ரொம்பவே துயரமானது. ஏனென்றால் அது உண்மையான கண்ணீரா...? இல்லை வெறுமனே நடிப்பா...? என்கிற சந்தேகம் ஒரு விநாடி எல்லாருடைய மனதிலும் எட்டிப் பார்த்து விட்டுப் போகும். வாய்ப்புகள் என்னைத் தேடி வந்ததா? நான் தேடிப் போகவில்லையா? என்பதை இப்போது கணக்குப் போட்டுப் பார்க்க முடியாது. அடையாறு திரைப்படக் கல்லூரி படிப்பு முடிந்து 25 வருடங்கள் உருண்டோடி விட்டன. சினிமா கனவு தேடி அடைந்த எல்லா இடங்களிலும் சின்னச் சின்ன தோல்விகள். இருந்தும் சினிமா தவிர வேறு எதையும் தேடிப் பிடிக்க மனசு இல்லை. குடும்பம், மனைவி, மக்கள் என சமூகச் சூழல்களின் துரத்தல் ஒரு புறம். சிதைந்து விடாத சினிமா கனவு ஒரு புறம். இந்த இரண்டுக்குமான போராட்டங்களை வார்த்தைகளில் சொல்லி முடித்துவிட முடியாது. அதை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். இத்தனை வருட போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் இருக்கை கொடுத்திருக்கிறது காலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.