நல்ல படம் எடுத்தால் மன உளைச்சல்தான்!
""ஊர் பக்கங்களில் வேலையில்லாமல் சும்மா திரியும் பந்தா பார்ட்டிகளை ""இவரு பெரிய வெள்ளைக்காரத்துரை...'' என்பார்கள்.


""ஊர் பக்கங்களில் வேலையில்லாமல் சும்மா திரியும் பந்தா பார்ட்டிகளை ""இவரு பெரிய வெள்ளைக்காரத்துரை...'' என்பார்கள். அப்படியோர் ஆள்தான் நம்ம ஹீரோ. பொறுப்புகள், துயரங்கள், லட்சியவாதங்கள்... அடுத்த நிமிடங்கள் பற்றிய எந்த நிர்பந்தங்களும் இல்லாத, ஆனால் மிகுந்த பரபரப்பான ஆள் விக்ரம் பிரபு. அதே நேரத்தில் சுவாரஸ்யங்களும், ஆச்சரியங்களுக்கும் குறைவில்லாத மனுஷன். சும்மா இருந்தாலே பிரச்னைதானே... அப்படியொரு பிரச்னைக்கு அவரே தீர்வு தேடிக் கொள்வதுதான் கதை. கதையின் உள்ளடக்கத்தில் ஆங்காங்கே சீரியஸ் தென்படுமே தவிர, மற்றபடி இது காமெடி படம்.'' "வெள்ளைக்காரத்துரை' படத்தின் கிறிஸ்துமஸ் ரிலீஸýக்காக விரைந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் எழில். ஆக்ஷன், த்ரில் என பயணிக்கும் விக்ரம் பிரபுவை கமர்ஷியல் பக்கம் திருப்பியிருக்கிறார்.
விக்ரம் பிரபு - ஸ்ரீதிவ்யா காதல் ஸ்டில்ஸ் அவ்வளவு அழகு...?
கமர்ஷியல் சினிமாவுக்கு காதல்தானே அழகு. இதுவரை பொருந்தி வராத ஒரு ஜோடி, இதற்கு வேண்டும் என்ற தேடலில் விக்ரம் பிரபு - ஸ்ரீதிவ்யா ஜோடியைப் பிடித்தேன். விக்ரம் பிரபு கொஞ்சம் கூச்சமுள்ளவர். எதையும் தெளிவாக கேட்ட பின்னால், கேமிரா முன்பு நிற்கும் போது கொஞ்சம் நெளிவார். ஏனென்றால் அவருக்கு அமைகிற படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். "கும்கி' காதல் படமாக இருந்தாலும், பெரிய அளவில் ரொமான்ஸ் இருக்காது. காதலின் உள்ளுணர்வுகளைப் பேசுகிற படமாகவே அது இருந்தது. அதற்கு பின்னால் வந்தவை எல்லாம் ஆக்ஷன்... ஆக்ஷன்... சொல்லப் போனால் அவர் காதலிக்கவே இல்லை. ஆனால் இதில் காதலிப்பதை தவிர விக்ரம் பிரபுவுக்கு வேறு வேலை இல்லை. ஸ்ரீதிவ்யா தைரியமான பொண்ணு. இந்த சின்ன வயதில் அவ்வளவு பக்குவம். அதே நேரத்தில் அவ்வளவு அழகு. கேமிரா முன் நிற்க வைத்து பார்த்தால் இன்னும் அழகு. படமாக பார்க்கும் போது இன்னும் அள்ளும். விக்ரம் பிரபுவுக்கு காமெடி எப்படி செட்டாகும் என்பதும் எனக்கு வந்த பிரதான கேள்விகளில் ஒன்று. ஆனால் நானே எதிர்பார்க்காத காமெடி அவருக்கு கை சேர்ந்திருக்கிறது. "கல்யாண கலாட்டா' சிவாஜி, "அரங்கேற்ற வேளை' பிரபு மாதிரி விக்ரம் பிரபு இதில் ஒளிர்வார்.
இப்போது இருக்கிற தமிழ் சினிமா பாணிக்கு, காமெடிதான் சரியென முடிவு செய்து விட்டீர்களா....? "மனம் கொத்திப்பறவை', "தேசிங்கு ராஜா', இப்போது "வெள்ளைக்காரத்துரை' என எல்லாவற்றிலும் காமெடி வாசம்...?
நல்ல சினிமா எடுக்கிறவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு, வெற்றியின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஆபாசமான, வன்முறையான, அசிங்கமான படத்தை எடுத்துக் கொண்டு வெற்றிக் கிடைத்து விடும் என்று சிலர் ரொம்ப நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இந்த இரண்டுமே இப்போது ரொம்பவே ஆபத்து என்பதுதான் உண்மை. ஆயிரங்களில் இருந்து லட்சத்துக்கு என் வாழ்க்கை மாறிய போது மகிழ்ச்சிதான். ஆனால் அதே நேரத்தில் கிட்டத்தட்ட 5 வருடங்கள் படங்களே இல்லாமல் வீட்டில் சும்மா இருந்திருக்கிறேன். வீட்டு வாடகை கட்ட முடியாமல், குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கூட கட்ட முடியாமல் இதே சினிமாவில்தான் இருந்திருக்கிறேன். இத்தனைக்கும் நான் கடைசியாக கொடுத்த "தீபாவளி' ஹிட் படம்தான். ஆனால், என்னவோ தெரியவில்லை, கதையை நம்பி பயணம் போகவே பயம் வந்து விட்டது. சரி, இனி காசு போடுகிற தயாரிப்பாளருக்கும், நமக்கும் உத்திரவாதம் கிடைக்குமாறு சினிமா எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அந்த முடிவின் பாதிப்புதான் இது. என் நேரத்துக்கும், நான் செலவு செய்கிற பணத்துக்கும் ஏதோ ஓர் அர்த்தம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இருந்தாலும், காமெடி சினிமாக்கள்தான் தமிழ் சினிமாவின் அடையாளம் என மாறி விடும் போலிருக்கிறதே....?
வெற்றி ஒரு மனிதனை அழகாக்க வேண்டும். அசிங்கமாக்கிவிடக் கூடாது. நூறு பேரை நம்பி டீக்கடை நடத்துகிறவர், தன் கடைக்கு வருகிற ஒவ்வொரு கஸ்டமருக்கும் நல்ல டீ போட்டுத் தர வேண்டும் என நினைக்கிறார். லட்சகணக்கான மக்களைச் சென்று சேரக் கூடிய சினிமாக் கலைஞனுக்கும் அதே பொறுப்புணர்வு வேண்டும்தான். ஆனால் எந்த ரசிகனும் அதற்கு மரியாதை தருவதில்லை. வசந்தபாலனின் "காவியத்தலைவன்' நல்ல படம்தான். நானும் பார்த்தேன். ஆனால் ரிசல்ட் வேறு மாதிரி இருக்கிறது. நான் சந்திக்கிற இயக்குநர்கள் ஒவ்வொருவரும் கனவு சினிமாவாக ஒரு கதையை மனதுக்குள் வைத்திருக்கிறார்கள். ஏன் என்னிடமும் சில கதைகள் இருக்கின்றன. சில கோடிகள் வேண்டும். அதை விட அது திரும்பி கைக்கு கிடைக்குமா? என்கிற உத்திரவாதமும் வேண்டும். இது இல்லாமல் அந்தப் படங்களை எடுக்க முடியாது. கொள்வாரில்லாத இடத்தில் கடை விரிக்க முடியாது. வக்கிரமான விஷயங்களை கமர்ஷியலுக்காக தன்னுடைய படத்தில் சேர்க்கிற ஒவ்வொருத்தருமே, படம் ஜெயிச்சதும் "அப்பாடா எஸ்கேப்'னு பெரு மூச்சு விடுவதை பார்த்திருக்கிறேன். விபத்தில் இருந்து தப்பிக்கிற மாதிரிதான் இந்த வெற்றி. நல்ல படங்கள் எடுப்பவர்களுக்கு இப்போது மன உளைச்சல்தான் அதிகம்.
கடந்த வருடம் 160-க்கும் மேலாக, இந்த வருடம் 200-க்கும் மேலாக எண்ணிக்கைதான் அதிகம்... இருந்தும் வெற்றிகளின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவுக்குதானே இருக்கிறது...?
ஓப்பனிங், ஒரு வார கலெக்ஷன் என இப்போதைய சினிமா முகம் வேறு. காத்திருந்து அடைந்த வெற்றிகளுக்கு இப்போது வேலை இல்லை. கலைஞனுடைய கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகனுடைய ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவடையும். பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என்ற எந்த வித்தியாசங்களும் இல்லாமல் நல்ல படங்களைப் பார்க்க தமிழ்நாட்டில் சில சதவீதம் ரசிகர்கள் தியேட்டருக்குள் வந்தால் போதும், இந்த எல்லாமே மாறி விடும். அப்போதுதான் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...