எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை!இயக்குநர் எழில்
பல படங்கள் இயக்கும் போதுதான் ஆரம்பத்திலேயே நம்பிக்கை வரும். இந்தப் படம் இயக்கும்போது அந்த மனநிலை வந்தது.


பல படங்கள் இயக்கும் போதுதான் ஆரம்பத்திலேயே நம்பிக்கை வரும். இந்தப் படம் இயக்கும்போது அந்த மனநிலை வந்தது. எதிர்பார்க்காத ஹிட்டை தந்தது "மனம் கொத்திப்பறவை'. இப்போது காமெடி படங்கள்தானே தமிழ் சினிமாவின் பூஸ்டர். அதனால்தான் அடுத்ததும் காமெடியையே பிரதானமாக எடுத்து வருகிறேன். இந்தப் படம் நிச்சயம் ஹிட்டாகும். அந்த
அளவுக்கு நம்பிக்கையான உழைப்பைத் தந்திருக்கிறேன்.'' "தேசிங்கு ராஜா' மூலம் மீண்டும் நம்பிக்கை வண்டி பூட்டுகிறார் இயக்குநர் எழில்.
தற்போதைய சினிமா சூழலில் காமெடி நம்பிக்கை
தான்... ஆனால் நீங்கள் கதைக்காக மெனக்கெடுகிற இயக்குநராச்சே...?
சினிமாவில் எது சார் உச்சம்? வெற்றிதானே. அந்த வெற்றிக்காகத்தானே எல்லோரும் இந்த இடத்துக்கு கஷ்டப்பட்டு வந்தோம். காதலை இழந்தவன் மிச்சமிருக்கிற வாழ்க்கையை நேசிப்பது போல, நான் சினிமாவை நேசிக்கிறேன். பெரிதாக இதுவரைக்கும் இழப்பொன்றும் இல்லை. கண் நிறைய கனவுகளோடு சென்னைக்கு பஸ் ஏறிய போது, சாப்பாடு போட்டு உறங்க வைத்த இடம் சினிமாதான். அந்த சினிமாவுக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டேன். ஐ.டி.துறை சென்னையில் கோலோச்சிய சமயம் அது... சென்னையின் சாதாரண மக்களின் வாழ்வு எப்படி பாதிக்கப்பட்டதென "கற்றது தமிழ்' படத்தில் ஒரு காட்சி வரும். உதயம் தியேட்டரில், என் பக்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் தன்னையும் மீறி எழுந்து நின்று கைத்தட்டினார். ""என்னங்க..?'' என்றால் ""இதுதான் அண்ணாத்த உண்மை... இது நல்ல படம்''ன்னு சொல்லி விட்டு கடந்து போனார். நிச்சயம் அவர் நல்ல சினிமாவுக்கான ரசிகர். எத்தனை பெரிய விஷயத்தை சொன்னாலும் சக மனிதனின் வாழ்வை, பாதிப்புகளை சொன்னால் ரசிகர்களுக்கும் பிடிக்கும். ஏனென்றால் எல்லோருமே சக மனிதர்களை நேசித்து வாழ்பவர்கள்தானே..? அது மாதிரியான ரசிகர்களுக்கான படமாகத்தான் இது இருக்கும். நான் பிடித்த மீனை நல்ல மீன் என்று சொல்லித்தான் விற்க முடியும். நிச்சயம் இது நல்ல மீன்.
இவ்வளவு நம்பிக்கையாக பேசுகிற அளவுக்கு... இது என்ன கதை...?
மனிதர்களின் சின்ன சின்ன கோப, தாபங்களை இதில் அழகாக எடுத்து வைத்திருக்கிறேன். நம்மை நாமே மதிப்பிட்டு கொள்ளும் படமாகவும் இது இருக்கும். மனித உணர்வுகளை பேசுவதை விட வேறு அழகு எதாவது இருக்கிறதா? மொத்தத்தில் எல்லாமே
இருக்கும்.
பெரிய அடையாளம்... நம்பிக்கையாக கை கொடுக்க தயாரிப்பாளர்கள்... அந்நியமில்லாத ஸ்டார் நடிகர்கள்... இவ்வளவு இருந்தும்... பெரிய இடைவெளியில் இருந்தீர்களே...?
"தீபாவளி' பெரிய ஹிட் படம்தான். ஜெயம் ரவி, பாவனா, லிங்குசாமி தயாரிப்பென்று பெரிய அளவில்தான் அந்தப் படம் வந்தது. இருந்தும் நான்கு வருடங்கள் என்ன செய்வதென்று கஷ்டப்பட்டேன். முதல் படம் "துள்ளாத மனமும் துள்ளும்' செய்யும் போதும் இப்படித்தான் ஒரு ஃபீலிங். இதற்கு காரணம்.. என்னைப் பொறுத்தவரைக்கும் இதுவாக கூட இருக்கலாம்... ஸ்டார் நடிகர்களை மட்டுமே துரத்திக் கொண்டு ஓடிய இயக்குநர்கள், படத்துக்கு படம் லட்சக்கணக்கில் தங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொண்ட நடிகர்கள் என்று நிறைய கெட்ட விஷயங்களில் போய் விழுந்து விட்டது தமிழ் சினிமா. கதைக்காக படம் எடுக்கிற என்னை மாதிரியான இயக்குநர்களுக்கு இதில் வருத்தம்தான். என்னுடன் வந்த நிறைய பேரை இன்றைக்கு பார்க்க முடியவில்லை. அதில் இருந்து மீண்டு வந்த ஆள் நான். இடையில் ஒரு மாஸ் நடிகருக்கு கதை சொல்லி டேட்ஸ் கேட்டேன். கதை கேட்டு விட்டு ""பிடிக்கலை''ன்னு சொல்லி விட்டு போய் விட்டார். இப்போதும் கதைக்காக நடிக்க வருகிற நடிகர்கள் இங்கு குறைவுதான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பார்முலாவில் லாக் ஆகி கிடக்கிறார்கள். அதை உடைக்க எடுத்த படம்தான் "மனம் கொத்திப் பறவை'. பாட்டே இல்லாமல் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் ஓடும் போது எதற்காக பழைய இலக்கணங்களைத் தேடி ஓட வேண்டும்.
எல்லோருக்குமான கோபம்தான் இது... அப்படியென்றால் இனி ஸ்டார் நடிகர்களுக்கு கதை செய்ய மாட்டீர்களா..?
சிவகார்த்திக்கேயன் எல்லோருக்கும் தெரிந்த முகமாக இருந்தார். அதனால் அவரை அழைத்து வந்தேன். "தேசிங்கு ராஜா' திருவாரூர் பக்கம் நடக்கும் கதை. அதற்கு விமல் பொருத்தமாக இருந்தார். நல்ல உழைப்பைத் தந்தால், எல்லோருமே நினைக்கிற இடத்துக்கு வந்து விடலாம். இன்னும் நான்கு படங்கள் ஹிட்டானால் விமலும் ஸ்டார் நடிகர்தான். மற்றபடி யார் மீதும் எனக்கு கோபமில்லை. எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை.
முன்பு வந்த "தினமணி' பேட்டியில் கனவுப் படம் பற்றி பேசியிருந்தீர்கள்... அந்த முயற்சி எந்த அளவில் இருக்கிறது...?
காவிரி டெல்டா மக்களின் வாழ்வியலைத் தழுவிய கதை அது. சினிமாவுக்கான சமரசங்களை விட்டு அதற்குள் இறங்க வேண்டும். கொஞ்சம் காசு சேர்த்துக் கொண்டு நானே இறங்கினால், நான் எடுக்க நினைத்ததை எடுக்கலாம். டெல்டாவின் மண்ணும், மக்களும் எப்படியெல்லாம் கெட்டுப் போய் கிடக்கிறார்கள் என்பதை சொல்லும் படமாக அது இருக்கும். நிச்சயம் அது சுடலாம். அதற்கு கதை மட்டுமே பொறுப்பு. நினைக்கிற மாதிரி அமைந்தால்... அது என் முக்கியமான சினிமா அடையாளமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...