குப்பி


மூன்று நாள்களாக அந்த வீடு வெறிச்சோடிப் போயிருந்தது. இத்தனைக்கும் வீட்டில் அம்மா, அப்பா, அண்ணன் சின்னு, தங்கை அபி எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால், வீட்டின் மகிழ்ச்சிதான் காணாமல் போய்விட்டது.
யாரையோ இழந்தது போன்ற உணர்வில்...
சின்னு, அம்மாவிடம் குப்பியைப் பற்றிக் கேட்டால், ஒழுங்காக பதில் சொல்லாமல், எரிந்து எரிந்து விழுகிறாள். பாலூட்டி, சீராட்டி வளர்த்தவளாயிற்றே...! தங்கை அபியோ, ""எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா, யாரோ நம்மை விட்டுப் போயிட்ட மாதிரி ஒரு ஃபீலிங். எப்படியாவது தேடிக் கண்டு பிடிச்சுக் கொண்டு வாண்ணா'' என்று தேம்பித் தேம்பி அழுதபடி, ஆணையிடுகிறாள். பிறந்த போது அதற்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தவளாயிற்றே...! அழத்தானே செய்வாள்!
இதற்கெல்லாம் காரணம், தெரு நாய்கள் சில துரத்தியதால் எங்கோ ஓடிப்போன, சின்னுவின் வீட்டு செல்லப் பூனைக்குட்டி "குப்பி'தான். மூன்று நாள்களுக்கு முன்பு ஓடிப் போனது வீட்டுக்குத் திரும்பி வரவேயில்லை. எங்கு போனதோ? என்ன ஆயிற்றோ? அதன் பிரிவுதான் அந்த வீட்டில் உள்ளோர் அனைவரின் வருத்தத்துக்கும் காரணம். செய்தியை அறிந்த பக்கத்துவீட்டு நண்பன் தினேஷ் வந்து சின்னுவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் போனான். வீட்டில் தொடர்ந்து அமைதி நிலவியது. யாரும் யாரோடும் பேசவில்லை.
அன்று இரவு 8 மணி இருக்கும். திடீரென்று வரவேற்பறை ஜன்னல் வழியாகக் குப்பி தன் தலையை மெதுவாக நீட்டி, பிறகு உடம்பை மெல்ல நுழைத்து "ம்மியாவ்...' என்று குரலெழுப்பியபடி "பொத்' தென்று தரையில் குதித்தது. குப்பியைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். உடனே அம்மா ஓடிச்சென்று கிண்ணத்தில் பால் கொண்டு வந்து வைத்தாள்.
"என்னோட குப்பி வந்துடுச்சே... வாடி குப்பி விளையாடுவோம்.... நீ இல்லாம நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? எங்கே போன நீ?'' என்று குப்பியை வாரி அணைத்து முத்தமிட்டாள் தங்கை அபி.
"முதலில் இந்தப் பாலை குடிக்க விடு அபி. பாவம், மூனு நாளா என்னத்தைச் சாட்பிட்டதோ, வந்து இதைக் குடிடா குப்பி... எப்படியோ தேடி எங்ககிட்ட வந்துட்டியே, ரொம்ப புத்திசாலி நீ' } என்று அம்மா மகிழ்ச்சியில் பாலுடன் அதிகம் பாசத்தையும் சேர்த்து ஊற்றினாள்.
"அப்பாடா... தேங் காட்... நீ வந்தப்புறம் தாண்டா குப்பி இந்த வீட்டுல மகிழ்ச்சியே வந்திருக்கு....' என்று கூறி தங்கை அபியிடம் இருந்து குப்பியைப் பிடுங்கி, அதன் முதுகைத் தடவிக் கொடுத்தான் சின்னு.
"பசங்களா... முதலில் பாலைக் குடிக்க விடுங்க... பிறகு கொஞ்சலாம்' என்றாள் அம்மா.
அப்போது வீட்டுக்குள் நுழைந்த அப்பா, எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடுவதைப் பார்த்து ""ஓ... நம்ம குப்பி வந்துடுச்சா....ரொம்ப புத்திசாலியா இருக்கே... மூனு நாளா எங்களையெல்லாம் பிரிஞ்சு எப்படிடா இருந்தே...?'' என்றார்.
அப்போது பக்கத்து வீட்டிலிருந்து கையில் ஒரு தமிழ் செய்தித்தாளுடன் ஓடி வந்த சின்னுவின் நண்பன் தினேஷ், "டேய் சின்னு குப்பி வந்துடுச்சு போலிருக்கே... நீங்க எல்லோரும் மகிழ்ச்சியிலே போட்ட சத்தத்தைக் கேட்டுத்தான் நான் ஓடி வந்தேன்..'' என்றான்.
எல்லோரும் வரவேற்பறையில் ஒன்றாக அமர்ந்து தொலைந்து போன குப்பி, வீட்டைத் தேடிப்பிடித்து வந்ததையும், அதன் புத்திசாலித்தனத்தையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தன் கையில் இருந்த பேப்பரை எடுத்துக் காண்பித்த தினேஷ் "அங்கிள், இந்தப் பேப்பரில் "உலகச் செய்திகள்' என்ற பகுதியில் ஒரு செய்தி வந்திருக்கு'' என்று கூறி, அந்தச் செய்தியைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னான்.
""தென் கரோலினா என்ற நாட்டில் செல்லமாக வளர்த்த தன் "டாபி' என்ற பூனைக் குட்டியை அதன் உரிமையாளர் 12 மைல் தொலைவில் உள்ள தன் நண்பருக்குக் கொடுத்துட்டாராம். ஆனால், டாபி, தன்னை வளர்த்தவர்களை விட்டுப் பிரிந்திருக்க முடியாம 12 மைல் தொலைவில் இருந்து தன் எஜமானன் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து ஓடி வந்துடுச்சாம். இதைப் பார்த்து அந்த எஜமானர் ஆச்சரியப்பட்டாராம். தங்களை விட்டுப் பிரிய மனமில்லாத, தங்கள் மீது அன்பாக இருந்த டாபியை நாம் புரிந்து கொள்ளாமல் இன்னொருவருக்குக் கொடுத்துட்டோமே என்று அந்த உரிமையாளர் குற்ற உணர்வில் தவிக்கிறாராம்''
அந்தப் பத்திரிகைச் செய்தியை வாங்கிப் பார்த்த அனைவரின் கண்களும் வியப்பில் விரிந்தன. தக்க சமயத்தில் அந்தச் செய்தியை கொண்டுவந்து காட்டியதற்காகவும், தினமும் பேப்பர் படிக்கும் நல்ல பழக்கம் உள்ளதற்காகவும் தினேஷை வெகுவாகப் பாராட்டிய சின்னுவின் அப்பா,
""ஆமாம் பசங்களா... அன்புக்கு மனிதர்கள் மட்டுமல்ல, வளர்ப்பு மிருகங்களும், பறவைகளும், காட்டு மிருகங்களும், கடல் பிராணிகளும்கூடக் கட்டுப்படுமாம். காணாமல் போன நாய் ஒன்று தன் எஜமானன் வீட்டைத் தேடி எட்டு மாதத்திற்குப் பிறகு வந்து சேர்ந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அதுவரை அந்த நாயை வளர்த்தவர்கள் அதன் பிரிவால் எப்படி வாடியிருப்பார்கள்! நம்மால் மூன்று நாள்கள்கூட குப்பியின் பிரிவைத் தாங்க முடியவில்லையே...!
தன்னை அன்போடு வளர்க்கும் எஜமானர்களுக்கு மிருகங்கள் என்றுமே விசுவாசத்தோடும் நன்றியுணர்வோடும் இருக்கும். மிருகங்கள், பறவைகள், புழு, பூச்சிகளிடமிருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. இன்றைக்கு இதை நமது "குப்பி' நிரூபித்துவிட்டது. ""தாங்கஸ் குப்பி உனக்கு!'' என்று அதை எடுத்து தன் மடியில் வைத்துத் தடவிக் கொடுத்தார்.
அந்த வீட்டில் அன்றிரவு எல்லோர் மனத்திலும் "மகிழ்ச்சி' நிறைந்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...