குமரனும் குட்டிப் பென்சிலும்!
""டேய், அங்கப் பாருங்கடா கஞ்சப் பிசினாரி வந்துகிட்டிருக்கான்'' என்று குமார் சொல்லவும், பள்ளி நுழைவாயிலைத் தாண்டி உள்ளே குமரன் நடந்து வருவதைப் பார்த்து அவனுடைய நண்பர்கள் எல்லாரும் சிரித்தனர்.


""டேய், அங்கப் பாருங்கடா கஞ்சப் பிசினாரி வந்துகிட்டிருக்கான்'' என்று குமார் சொல்லவும், பள்ளி நுழைவாயிலைத் தாண்டி உள்ளே குமரன் நடந்து வருவதைப் பார்த்து அவனுடைய நண்பர்கள் எல்லாரும் சிரித்தனர்.
""ஏண்டா குமார் அவனைப் பார்க்கிற போதெல்லாம் கஞ்சன், கஞ்சப் பிசினாரின்னு சொல்லற, பாவம்டா, சின்னப்பய.. அழுதுடப் போறான்'' என்றான் நண்பர்களுள் ஒருவன்.
""ஆமான்டா அவன் நெஜமாகவே கஞ்சப் பிசினாரிதான். உனக்குத் தெரியாதா? இப்பப் பாரு, அவன் கஞ்சப் பிசினாரியா இல்லையான்னு நிரூபிக்கிறேன்...'' என்றவன் குமரனை வழி மறித்து, ""டேய் குமரா! என் பிரண்ட்சுக்கு உன்னோட பென்சிலைக் காட்டேன்...'' என்றான் சிரித்துக்கொண்டே...
குமரன் தன் பையில் கைவிட்டு ஒரு குட்டிப் பெட்டியைத் திறந்தான். அதில் நிறைய குட்டிப் பென்சில்கள் இருந்தன. அதில் ஒரு பென்சிலை எடுத்து அவர்களிடம் காட்டினான். அந்தப் பென்சில் 5 செ.மீ. அளவுதான் இருந்தது. அதைப் பார்த்தவுடன் நண்பர்கள் எல்லோரும் "கொல்'லென்று வாய்விட்டுச் சிரித்தனர். தொடர்ந்து விடாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக்கொண்டே இருந்தான் ஒருவன். அவன்தான் குமார். அவனிடம் ஏதும் பேசாமல் நடந்து சென்றான்குமரன்.
""டேய், பாத்தீங்களாடா... இப்பத் தெரியுதா நான் ஏன் இவனைக் கஞ்சப் பிசினாரின்னு சொன்றேன்று''
""சரியாத்தான்டா குமார் சொல்லியிருக்கான்... அவனைப் பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கேடா'' என்று குமாரைப் பாராட்டினான் ஒருவன். குமாரின் முகம் ஆயிரம் வாட் பல்பினைப் போல் மின்னியது.
""அம்மா என் ஜாமெட்ரிபாக்ஸ் எங்கே?, என்னோட எக்சாம் பேட் எங்கே? என்னோட ஸ்கேல் எங்கே?'' என்று அடுக்கடுக்காக அம்மாவிடம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அந்த அறைக்கும் இந்த அறைக்குமாகப் போய் தேடிக்கொண்டிருந்தான் குமார்.
""உன்னோட பொருளையெல்லாம் ஒரே இடத்துல வையுன்னு எத்தனை தடவை உனக்குச் சொல்லறது. கண்ட கண்ட இடத்துல வச்சுட்டு, அம்மா இதைக் காணும், அதைக் காணும்னு ஸ்கூலுக்குப் போகிற அவசரத்துல கேட்டா எப்படிடா? பரிட்சை அன்னிக்குத்தான் இதையெல்லாம் தேடுவியா? நேற்றே எடுத்து வச்சுக்கிறது இல்லையா?...'' என்று சமையல் அறையிலிருந்து கோபமாகக் கூறினாள் குமாரின் அம்மா.
""ரொம்ப நேரமாயிடுச்சும்மா... மத்ததெல்லாம் எடுத்துகிட்டேன், எக்சாம் பேடைத்தான் காணல... ப்ளீஸ் சீக்கிரம் தேடித்தாயேன் என்றான்.''
தன் புடைவை முந்தானையில் கையைத் துடைத்துக் கொண்டு குமார் இருக்கும் அறைக்கு வந்தவர், அவன் தன் பொருள்களை வைக்கும் இடங்களிலெல்லாம் தேடிப் பார்த்துவிட்டு, கடைசியாக டி.வி. பெட்டிக்குப் பின்னால் எட்டிப் பார்த்தார். அவர் முகம் மலர்ந்தது. அந்தப் பரிட்சை அட்டையை எடுத்து ""இந்தா! எங்கே கொண்டு போய் வச்சிருக்க பார்த்தியா? இதுக்குத்தான் சொல்றேன் ஒரே இடத்துல அழகா அடுக்கிவையுன்னு...'' என்றாள்.
அம்மா கையிலிருந்த அந்தப் பரிட்சை அட்டையை படக்கெனப் பிடிங்கிக்கொண்டு ""ரொம்ப தாங்கஸ்ம்மா... நான் போய்ட்டு வரேன்....'' என்று பள்ளிக்குச் சிட்டாகப் பறந்தான் குமார்.
அன்று கணக்குப் பரிட்சை. மிகவும் கண்டிப்பான ஆசிரியர் அன்று தேர்வு அறையில் இருந்தார். அவர் உள்ளே நுழைந்தவுடனேயே, மாணவர்கள் யாரும் அக்கம் பக்கம் திரும்பக்கூடாது, பேசக்கூடாது, யாரிடமும் எதுவும் கேட்கக்கூடாது என்ற எச்சரிக்கை செய்துவிட்டுத்தான் வினாத்தாள்களைக் கொடுத்தார். கணக்குத் தேர்வு என்பதால் வரைபடங்களைப் பென்சிலில்தான் வரைந்தாக வேண்டும். இந்த முறை நிறைய வரைபடங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. தேர்வு அறையில் மாணவர் எல்லோரும் வரைவதில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினர்.
தன் ஜாமெட்ரி பாக்சைத் திறந்த குமார் அதிர்ந்தான். அதில் பென்சிலைத் தவிர மற்ற எல்லாம் இருந்தன. இருப்பு கொள்ளாமல் தவித்தான். உடலெல்லாம் வியர்த்தது; தலை சுற்றுவது போல் இருந்தது அவனுக்கு. யாரிடம் கேட்பது? எப்படிக் கேட்பது? ஆசிரியர் திட்டுவாரே..... என பயந்த குமார், அக்கம் பக்கத்தில் உள்ள மாணவர்களிடம் திரும்பி கண் ஜாடையில் கேட்டான். அதற்குச் சிலர் "இல்லை' என்பது போல தலையாட்டினார்கள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர், "என்ன குமார், உள்ளே நுழைந்ததுமே எச்சரித்தேனே... காதுல விழலையா உனக்கு? தேர்வு எழுதும்போது என்னப் பேச்சு? தேர்வு எழுதுறவங்களையும் ஏன் கெடுக்கற?'' என்றார் கடுமையாக.
குமார் மெல்ல எழுந்து நின்று, ""இல்ல... சார்... நான் பென்சில் எடுத்துவர மறந்துட்டேன்....'' என்றான்.
""நல்லா இருக்கு நீ சொல்றது! கணக்குப் பரிட்சைக்குப் பென்சில் எடுத்துக்கிட்டு வராத ஒரே ஆள் நீதான் போலிருக்கு. அப்புறம் எதுக்குப் பரிட்சைக்கு வரணும், வீட்டிலேயே இருக்க வேண்டியதுதான...'' என்று கடுமையாகப் பேசியவர், மாணவர்களைப் பார்த்து ""யாராவது எக்ஸ்ட்ரா பென்சில் வச்சிருக்கீங்களாப்பா?'' என்றார்.
யாரும் "இல்லை' என்று தலையாட்டினார்கள்.
கடைசி வரிசையில் அமர்ந்திருந்த குமரன் மெல்ல எழுந்து நின்று ""எங்கிட்டே இருக்கு சார், ஆனால் சின்ன பென்சிலா இருக்கு சார்'' என்றான்.
""சின்னதா இருந்தா என்ன? பென்சில் பென்சில்தான? ஆபத்துக்கு உதவுதுல்ல... கொண்டு வா'' என்றதும் குமரன் அந்தக் குட்டிப் பென்சிலைக் கொண்டு வந்து ஆசிரியரிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த ஆசிரியர் குமரனை வியப்பாகப் பார்த்துவிட்டு, ""சபாஷ் குட்டிப் பென்சிலைக்கூடத் தூக்கி எறியாமல் பத்திரமா வச்சிருக்கியே...'' என்று கூறி, அதை வாங்கி ""இந்தா குமார், இதை வச்சுத்தான் இன்னிக்கு நீ படம் வரைஞ்சாகணும், ஆபத்துக்கு இதுவாவது கிடைச்சுதேன்னு சந்தோஷப்படு'' என்று கொடுத்தார்.
ஒரு நொடி அந்தப் பென்சிலையும் குமரனையும் மாறி மாறிப் பார்த்த குமார், வெட்கித் தலைகுனிந்தபடி, ""தேங்க்ஸ்டா'' என்று சொல்லி அதை வாங்கிக்கொண்டு தன் இருப்பிடம் சென்றான்.
குமாருக்கு முன்பே பரிட்சை எழுதிவிட்டு அந்தக் குட்டிப் பென்சிலைத் திரும்பப் பெறுவதற்காக அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தான் குமரன்.
பரிட்சை எழுதிவிட்டு வெளியே வந்த குமார், ""ரொம்ப தாங்ஸ்டா.... சாரி, உன்னைக் கஞ்சப் பிசினாரின்னு பல தடவை கேலி செய்திருக்கிறேன். ஆனால், தகுந்த நேரத்துல நீ தந்த இந்தப் பென்சிலாலதான் நான் எக்சாம் எழுத முடிந்தது. இந்தக் குட்டிப் பென்சில்தான் இன்னிக்கு என்னைக் காப்பாத்திச்சு'' என்று நா தழுதழுத்தான்.
""பரவாயில்லடா...., ஆபத்துக்கு உதவினது பார்த்தியா? அதுதான் என் குட்டிப் பென்சில். என் தாத்தா எனக்கு சொல்லிக் கொடுத்தது இது. எங்க தாத்தா காந்திஜி பத்தி ஒரு கதை சொன்னார். "காந்திஜி ஒருநாள் எதையோ மூலை முடுக்கெல்லாம் தேடினாராம். அங்கு வந்த சீடர் ஒருவர் என்ன தேடுறீங்க என்றதும், சின்ன பென்சிலை தேடிக்கிட்டிருக்கேன்னு சொன்னாராம். உடனே வந்தவர், இந்தாங்க என்று தன் சட்டைப் பையில் இருந்த பெரிய பென்சிலைத் தந்தாராம். ஆனால் அதை காந்திஜி வாங்காமல், அந்தக் குட்டிப் பென்சில்தான் வேணும்னு ரொம்ப நேரம் தேடி அந்தப் பென்சிலை எடுத்துட்டாராம்.
÷காந்திஜிக்கு சிரமம் கொடுத்த அந்தப் பென்சில் ஓர் அங்குலம்தான் இருந்ததாம். இதைப் பார்த்த அந்தச் சீடர் காந்தியை வியப்பாகப் பார்க்க, காந்திஜி, "நல்ல பென்சிலான இதனை விட மனம் வருமா? சின்னப் பையன் ஒருவன் எனக்கு அன்பளிப்பாகத் தந்தது, சமயத்துக்கு உதவும்' என்று பொக்கை வாயைத் திறந்து சிரித்தாராம். இந்தக் கதையைச் சொன்ன எங்க தாத்தா, பென்சில் குட்டியா போச்சுன்னா தூக்கிக் குப்பையில போட்டுடாதே. சமயத்துல அது யாருக்காவது உதவும், ஏன் உனக்கே கூட உதவும்னு' சொன்னார். அதனாலதான் குட்டிப் பென்சில்களை சேர்த்து வச்சிருக்கிறேன். அதுதான் உனக்கு இப்ப உதவியிருக்கு. இதுக்குப் பேரு கஞ்சத்தனமோ, கஞ்சப் பிசினாரித்தனமோ இல்ல.... குட்டிப் பென்சில்கூட ஆபத்துக்கு உதவும்ங்கறதை நீயும் புரிஞ்சுக்கணும். அதனாலதான் அதை உனக்குக் கொடுத்தேன். இதோ பாத்தியா என்னிடம் பெரிய பென்சிலும் இருக்கு'' என்று அதை எடுத்துக் காட்டினான் குமரன்.
இதுவரை குமரன் பேசியதை அறையின் உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த ஆசிரியர், ""சபாஷ் குமரா, இந்தச் சிறு வயதிலேயே இவ்வளவு விவேகமுள்ளவனாக இருக்கியே... உன்னை என் மாணவன்னு சொல்லிக்கப் பெருமையா இருக்கு, உங்கத் தாத்தாவையும் நான் பாராட்டினதா சொல்லு'' என்று அவன் தோளைத் தட்டிப் பாராட்டிவிட்டுச் சென்றார்.
குமாரின் கண்கள் குமரனுக்கு நன்றியுணர்வைத் தெரிவித்தது. கூடவே அவனது நினைவு சென்றவாரம் தமிழாசிரியர் சொல்லிக்கொடுத்த 667ஆவது திருக்குறளை அசைபோடத் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...