ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாரம்பரியத்தை மீட்போம்!

வெளிநாட்டுப் படிப்பு, அமெரிக்கப் பெருநிறுவனத்தில் வேலை என்று அமெரிக்காவில் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த விஜயா விஸ்வநாதன், சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களைப் பார்க்கும் வரை நம் பாரம்பரியங்கள்

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:26 pm

கோதை ஜோதிலட்சுமி

வெளிநாட்டுப் படிப்பு, அமெரிக்கப் பெருநிறுவனத்தில் வேலை என்று அமெரிக்காவில் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த விஜயா விஸ்வநாதன், சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களைப் பார்க்கும் வரை நம் பாரம்பரியங்கள் எதனையும் அறியாதவராகவே இருந்திருக்கிறார். சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்கியிருப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு அவரை இந்திய அறிவுசார் தத்துவங்களை, சாஸ்திரங்களை நோக்கித் திருப்பியிருக்கிறது. தனக்குக் கிடைக்காத வாய்ப்பு தன் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென அவர்களோடு இந்தியா வந்து சத்தீஸ்கர் முதல் தமிழகம் வரை சாஸ்திரங்கள் அறிந்த பண்டிதர்களைத் தேடிக் கண்டடைந்து படிக்க வைத்திருக்கிறார். தன் தேடல் அனுபவத்தை நம்மோடு இங்கே பகிர்ந்து கொள்கிறார்:

அகஸ்திய குருகுலம் பற்றிய சிந்தனை எப்படி வந்தது?

கணவரோடு அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசித்து வந்தேன். என் இரண்டு குழந்தைகளுக்கும் நம்முடைய பாரம்பரியக் கல்வியைத் தர விரும்பி அவர்களை அழைத்துக் கொண்டு இந்தியா வந்தேன். நம்முடைய பள்ளிக்கூடங்கள் மேற்கத்திய முறைகளைத் தானே பின்பற்றுகிறார்கள். அதனால் பள்ளிக்கூடங்களைத் தவிர்த்து விட்டு தனிப்பட்ட முறையில் நம்முடைய கணித சாஸ்திரம், சம்ஸ்க்ருதம், தமிழ், கர்நாடக இசை, காவியம் இவற்றை மட்டும் அதற்கென ஆசிரியர்களைத் தேடிப் பிடித்து அவர்களுடனே இருந்து படிக்க ஏற்பாடுகள் செய்தேன். கணக்கு மொழி இசை இவற்றைத் தான் என் மகன்கள் இருவரும் பயின்றார்கள். நம்முடைய கணித சாஸ்திரம் என்பது கவிதை, கணக்கு, இசை எல்லாம் சேர்ந்தது. பிங்கலாச்சாரியாவின் சந்த சாஸ்திரம், பாஸ்கராச்சார்யாவின் லீலாவதி இவை தான் அவர்கள் கற்றுக்கொண்ட கணித சாஸ்திரங்கள். இங்கே பள்ளிக்கூடம் போகாத குழந்தைகள் கல்லூரிக்கு போவது சாத்தியமில்லை அல்லவா? அதனால் என் மூத்த மகன், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி அங்கே கணினி இன்ஜினியரிங் படிக்கச் சேர்ந்துவிட்டான். இரண்டாமவன், ஜார்ஜியாவில் இன்ஜினியரிங் படிக்கிறான். பாஸ்கராச்சாரியாவின் லீலாவதி கணித சாஸ்திரத்தை எளிமையாக்கி நம் பள்ளிக்குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வசதியாக ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறான். நம்முடைய கணித சாஸ்திரத்தின் காரணார்த்த அறிவு உலகின் எந்த போட்டித் தேர்வையும் வெல்லும் அறிவுக்கூர்மையைத் தந்துவிடும் என்பதை அனுபவத்தில் கண்ட பின் அதனை நம் மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்த்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

அமெரிக்காவில் என்னைப்போலவே எண்ணம் கொண்ட என் நண்பர்கள் பஞ்சாபை சேர்ந்த சங்கீதா, கர்நாடகத்தின் அர்ச்சனா, சம்ஸ்க்ருதம் நன்கறிந்த என் நண்பர் பாலாஜி நான்கு பேரும் இணைந்து இந்த அகஸ்திய குருகுலம் அமைக்க முடிவு செய்தோம்.

அகஸ்திய குருகுலத்தில் என்னென்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்?

பாஸ்கராச்சார்யாவின் லீலாவதி கணித சாஸ்திரம், சம்ஸ்க்ருதம், இந்திய மொழிகளில் அவரவரின் தாய்மொழி, அதற்கு மேலும் அவர்கள் விரும்பும் இந்திய மொழி, சரித்திர சாஸ்திரம், விஞ்ஞான சாஸ்திரம், தர்க்க சாஸ்திரம், பஞ்ச மகா யக்ஞயம், உலக அளவில் கல்வெட்டுகளைப் படிப்பதற்கான லிபி, களரிபோன்ற பாரம்பரிய வித்தைகள் என்று சொல்லிக் கொடுக்கிறோம். சாஸ்திரங்கள் சம்ஸ்க்ருதத்தில்இருப்பதால் சம்ஸ்க்ருதம் கட்டாயம்.

இவையெல்லாம் இன்றைய உலகுக்கு ஒத்துவருமா?

நிச்சயம் ஒத்துவரும். இன்றைய உலகுக்கு அதனை எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்தால் இந்தியர்களுக்கு நிகரான செல்வந்தர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. விஞ்ஞான சாஸ்திரத்தை நாம் முறையாகக் கற்றுக்கொண்டிருந்தால் கோடிக்கணக்கான மதிப்பில் வியாபாரம் செய்துவிட முடியும்.

இந்திய அறிவுசார் சாஸ்திரங்களை இப்போது உலக நாடுகள் திரும்பிப் பார்த்து அதன் அருமை உணர்ந்து எடுத்துக்கொள்வதோடு ட்ரில்லியன் டாலர் வியாபாரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். யோகா ஆயுர்வேதா போன்றவற்றுக்கு உலக நாடுகளில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது. நம்முடைய தியான முறைகளை மேலைநாட்டவர்கள் மைண்ட் சயின்ஸ் என்று பெரிய அளவில் வியாபாரமாக்கியிருக்கிறார்கள்.

நம்முடைய செல்வங்கள் இவை. இந்தியாவின் ஏதோஒரு மூலையில் இதனை அறிந்தவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து தேவையான நம்முடைய மாணவர்களிடம் கொண்டுவந்து சேர்த்து இளம் தலைமுறை கற்றுக்கொண்டு விட்டால் நம்மை வெல்ல எவராலும் முடியாது.

உங்கள் பள்ளி எப்படி இயங்குகிறது?

அகஸ்திய குருகுலம் மெய்நிகர் (ஸ்ண்ழ்ற்ன்ஹப்) பள்ளி.

இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள், சிங்கப்பூர் என்று பல நாடுகளிலும் மாணவர்கள் இருகிறார்கள். ஆசிரியர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கிறார்கள். அமெரிக்காவிலும் சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள். முழுவதும் இந்த முறையில் மட்டுமே பயிலும் மாணவர்கள், சாதாரணமாக பள்ளிக்கூடங்களுக்குப் போகும் மாணவர்கள் கூடுதலாக இதனைக் கற்பதற்கும் வருகிறார்கள். அவரவர்க்கு ஏற்ற பாடத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். இன்னும் மேற்படிப்பாக ஆகம சாஸ்திரத்தின் அறிவியல் போன்ற பாடங்களையும், இந்தியாவில் ஐஐடி போன்றவற்றில் சேரத் தேவையான விஷயங்களைப் படிப்பதற்கான பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் தற்போது கவனம் செலுத்துகிறோம்.

சென்ற ஆண்டில் பாண்டிச்சேரியில் ஒரு முகாம் ஏற்பாடு செய்து நடத்தினோம். அதிலே நம்முடைய பாரம்பரிய வீரக் கலைகளை அறிமுகம் செய்தோம். இந்த ஆண்டு ஆயுர்வேதம் கற்றுக்கொள்வதற்கான ஒரு மாத முகாம் நடத்தினோம்.

அகஸ்திய குருகுலத்தின் எதிர்காலத் திட்டம் என்ன?

லாப நோக்கம் இல்லாமல் நம்முடைய புராதன அறிவியலும், கணித, மொழியும் அடுத்த தலைமுறைக்கு உதவும் வகையில் கொண்டு சேர்ப்பது. ஆர்வம் உள்ள வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசமாகவும் இந்தக் கல்வியை கொடுக்கிறோம்.

இந்தியாவில் நர்மதை நதிக்கரையிலும் மத்தியப்பிரதேசத்திலும் அமைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இந்தியாவின் எந்த ஒரு குக்கிராமத்தில் இருக்கும் குழந்தைக்கும் நம்முடைய முன்னோர்களின் அறிவுச் செல்வம் சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.