நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கடலில் மூச்சடக்கி.... கரையேறத்துடிக்கும் மகளிர்!

ஆவேசமாகத் தினமும் ஆர்ப்பரிக்கும் கடல், கரைகளைத் தொடும் அலைகள், காலையில் உடலை சிலிர்க்கவைக்கும் குளிர்காற்று, கரை ஒதுங்கியும் தள்ளாடும் படகுகள்....

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:44 pm

ஜெயப்பாண்டி

ஆவேசமாகத் தினமும் ஆர்ப்பரிக்கும் கடல், கரைகளைத் தொடும் அலைகள், காலையில் உடலை சிலிர்க்கவைக்கும் குளிர்காற்று, கரை ஒதுங்கியும் தள்ளாடும் படகுகள்.... என பார்த்தாலே பயப்படவைக்கும் சூழலில் தினமும் சிரித்து மகிழ்ந்து உப்பு நீரில் மூழ்கி மூச்சடக்கி வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள் சடையன்முனியன் வலசை கிராமத்து மகளிர். 

கதிரவன் கண்விழிக்கும் முன்னரே, நெலிந்த ஈயத் தூக்குச்சட்டியில் கூழோ, கஞ்சியோ பசியாற உணவை சுமந்தும் தங்கள் பயணத்தை தொடங்குகிறார்கள் அந்த பாசி சேகரிக்கும் பதினைந்துக்கும் மேற்பட்ட பெண்கள். அசைந்தாடியபடி அலைகளின் தடைகளைத் தாண்டி செல்லும் படகு நல்ல தண்ணீர் தீவுக்கு அருகே மணல் மேடு பகுதியில் நங்கூரமிடப்படுகிறது. கண்ணை உப்புக்கலந்த கடல் நீரிலிருந்து காக்கும் கண்ணாடியை அணிந்தபடி, கஞ்சிக் கலயங்களை படகில் விட்டுவிட்டு கடலில் குதிக்கிறார்கள்.

அலைகள் தவழ்ந்த கடல் மேல்மட்டத்தை விட்டு ஆறடிக்கும் கீழே மூழ்கிடும் பெண்கள், பவளப்பாறைகளைத் தேடுகிறார்கள். அந்த பாறைகளில் ஒட்டி படர்ந்திருக்கும் பாசிகளைச்  சேகரிக்கிறார்கள். பவளப்பாறை பாசிகளை பக்குவமாக எடுத்து அதை இடுப்பில் கட்டியிருக்கும் சிறிய பைகளில் சிறுகச்சிறுக சேமிக்கிறார்கள். பாசிகளை அவர்கள் சேகரிக்கும் போது பாறைகளில் மறைந்திருக்கும் கடல் பாம்புகள் கடித்தால் அதோ கதிதான். கடல் பசுக்கள் முதல் கரும் திருக்கை மீன்கள் வரை தினமும் விதவிதமான மீன்களை கடலின் அடியில் காணும்போது அச்சப்பட்டும், அவற்றின் அழகை ரசித்தும் தங்கள் வாழ்க்கைக்காக மூச்சடக்கி முயற்சியைத் தொடர்வதே அவர்களது வாடிக்கையாகிறது.

ஆம்....இப்படித்தான் சடையன் முனியன் வலசையிலிருந்து அப்பெண்கள் குழுவினர் "புதுவருஷம்' என்ற குழுத் தலைவி தலைமையில் தினமும் கடலில் சுமார் 15 கிலோ மீட்டர் உள்ளே சென்று மூழ்கி கடற்பாசிகளைச் சேகரிக்கிறார்கள். மதிய நேரத்தில் கடல் நடுவே காணப்படும் மணல் திட்டுகளில் அமர்ந்து கூடி சிரித்துப் பேசி உணவு உண்கிறார்கள். பின்னர் மீண்டும் கடல் மூழ்கல்...பாசி சேகரிப்பு என மாலை வரை வாழ்க்கை கழிகிறது. கடலில் சேகரித்த பாசியுடன் கரைஏறும் போது மாலையாகி விடுகிறது.

இப்படி தினம் தினம் இந்த கடலோர கிராமத்து பெண்களின் கண்ணீர் வாழ்க்கை கழிகிறது. கடலில் எத்தனையோ பாசிகள் படர்ந்திருந்தாலும் கட்டகோரை, மரிக்கொழுந்து, அல்வாபாசி என குறிப்பிட்ட இனத்தை மட்டுமே இவர்கள் சேகரித்து கரை திரும்புகிறார்கள். அந்தப் பாசிகள் அனைத்தும் சிறுவர்கள் உணவாக உண்ணும் பல திண்பண்டங்களின் மூலப்பொருளாகிறது என்கிறார்கள் பெண்களிடம் பாசி வாங்கும் வியாபாரிகள்.

சேகரிக்கும் பாசிகளுடன் திரும்பவும் சென்ற நாட்டுப்படகில் ஊர் திரும்பும் இவர்கள் சேகரித்த பாசியை கிலோ ரூ.15 என தனியாரிடம் விற்கிறார்கள். ஆக தினமும் சுமார் 150 ரூபாய்க்காக தங்களது உயிரையே பணயம் வைத்து கடலுக்குள் செல்லும் இவர்கள் ஆச்சரியத்துக்குரிய மகராசிகள்தான். 

படகில் மீன்களைப் பிடிக்கச் சென்ற கணவர் மீளாத சோகத்தையும், மறந்து தங்கள் மகன், மகளின் வாழ்க்கைக்காக தினம் தினம் கடலில் மிதந்து கையில் காசு பார்த்து சோகத்தை மறந்து சிரிக்கும் சின்னமுனியன்வலசை செல்வி, பராசக்தியைப் போல ராமநாதபுரம் கடற்கரையோரமெங்கும் காணப்படுகிறார்கள் நூற்றுக்கணக்கான மகளிர். 

கடலில் மூழ்கி முத்தெடுக்கும் ஆண்களை விட தினம் தினம் கடலில் மூச்சடக்கி பாசி சேகரிக்கும் இப்பெண்களுக்கு அரசு கருணை பார்வை கிடைத்தால் வாழ்க்கையில் வசந்தம் வீசும் உணர்வைப் பெறுவார்கள் என்பதே உண்மை.

ஆம்...தங்கள் பசியாறும் பாத்திரத்தில்...பாசி படர்ந்துவிடக்கூடாது என்பதற்
காகவே.... கடல் பாசி சேகரிக்கும் இப்பெண்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்கி உதவிடவேண்டும் என்பதே இவர்களது ஆசை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.